விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் நியமனங்கள் கிடைக்காதவர்கள் மேன் முறையீடு செய்யும் பட்சத்தில் மீண்டுமொரு சந்தர்ப்பத்தினை வழங்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்வதாரத்தினை உயர்த்தும் வகையில் ஒரு லட்சம் அரசாங்க வேலை வாய்ப்புக்கள் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று(19.08.2020) நடைபெற்ற நிலையில், குறித்த அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு அமைவாக குறித்த வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் இன்றைய அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே ஜனாதிபதியினால் குறித்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வேலை வாய்ப்புக்களுக்கு நாடளாவிய ரீதியில் வறுமைப்பட்ட குடும்பங்களில் இருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் உள்வாங்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சுமார் 700 பேரை சிபாரிசு செய்வதன் ஊடாக சரியானவர்களுக்கு குறித்த வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின் போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களும் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களும் ஏமாற்றமடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது, கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏமாற்றமடைந்தவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் அவர்களில் சுமார் 10,000 பேர் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|