வலைப்பாடு சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம் விளக்கம் – கோரினார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 7th, 2022

பூநகரி, வலைப்பாடு பகுதியில் கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்  தொடர்பாக, பொறுப்புக்கூறவல்ல கடற்படை அதிகாரியை இன்று (07.09.2022) கடற்றொழில் அமைச்சுக்கு வரவழைத்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்பவம் தொடர்பாக  விசாரணை மேற்கொண்டு, நீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இவ்வாறான விரும்பத் தகாத விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்தார்.

மேலும், இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகள் உட்பட இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை இன்னும் அதிகளவில் எதிர்பார்ப்பதாகவும்  தெரிவித்தார்.

இதன்போது, வலைப்பாடு விவகாரம் தொடர்பாக உள்ளக   விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்படை அதிகாரி,  இரண்டு தரப்பிலும் தவறுகள் இருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளதாகவும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாகவும் கடற்படை அதிகாரியினால்  கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகளும்  கலந்து கொண்டிருந்த நிலையில், சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, நடைமுறை ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாளுமாறு கடற்றொழில் அமைச்சர் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார்

Related posts: