வடக்கும் வெளிநாடுகளுக்கு விற்பனையாகப் போகிறதா ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, June 19th, 2019

அம்பாந்தோட்டையை விற்று, கொழும்பை விற்று, காலியை விற்று, தெற்கையே விற்று, இப்போது வடக்கையும் வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்ற நிலைமை வரை உருவாகிவிட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் இலங்கை காணி மீட்டல் அபிவிருத்தி அதிகார சபை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்கள் முகங் கொடுத்து வருகின்ற மிகப் பாரதூரமான விடயங்களை தடுத்து நிறுத்த வேண்டிய – இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறிக் கொள்கின்ற  தமிழ்த் தரப்பினர் இதை பற்றி எல்லாம் வாயே திறப்பதில்லை.

அவர்களது தேவை மக்கள் மாண்டாலும், மக்களது வாக்குகள் மட்டும் தேர்தல்களின்போது தமக்குக் கிடைகக் வேண்டும் என்பதே.

இன்று வடக்கிலே இருக்கின்ற எமது மக்கள் அப்பகுதியிலிருந்து ஓரங் கட்டப்பட்டு, நாளை சீன மக்களோ மலேசிய மக்களோ குடியேறி விடுகின்ற நிலை ஏற்பட்டால்கூட அந்தத் தமிழ்த் தரப்பினருக்கு அது பிரச்சினை இல்லை.

உடனேயே தங்களது கட்சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலேசிய தேசியம் என்றோ மாற்றிக் கொண்டு, வாக்கு கேட்கப் புறப்பட்டு விடுவார்கள். அதுதான் அவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது.

தெற்கிலே காணிகள் சுவீகரிக்கின்றபோது, வெளிநாடுகளுக்;கு விற்கப்படுகின்றபோது, தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எத்தனையோ போராட்டங்களை நடத்துகின்றன. வெகு சனப் போராட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. மக்களை விழிப்பூட்டுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. அவற்றினால் வெற்றியும் பெறுகின்றன. ஆனால், வடக்கிலே? நிலைமை தலை கீழாகவே இருக்கின்றது.

எமது மக்கள் தனியாகப் போராடுகின்றார்கள். அதை வைத்து இந்த அரசியல் தரப்பினர் அரசாங்கத்துடன் பேசி எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்காகவே சலுகைகளைப் பெறுவதால் எமது மக்களது போராட்டங்கள் இன்னமும் வெற்றி பெறாமலேயே தொடர்கின்றன.

அடிக்கடி எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் அடிக்கல் நடுவதிலேயே காட்சி கொடுக்கிறார்கள். எமது மக்கள் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள வேண்டியிருக்கின்ற நிலையில், அவர்கள் சவல்களை ஏந்திக் கொண்டிருக்கின்றார்கள். இவை எல்லாமே தேர்தல் அண்மித்து வருகின்ற காலகட்ட நாடகங்கள் அன்றி, வேறேதும் இல்லை.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் தாமே என்கின்றவர்கள், இந்த அரசுக்கு முட்டுக் கொடுத்து, அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கையொப்பமிட்டுக் கொடுத்தவர்கள். இவர்களது ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த அரசாங்கமே கவிழ்ந்துவிடுகின்ற நிலையில் இருக்கின்றபோது, ‘எமது மக்களின் பிரச்சினைகளைத் தீருங்கள். இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு கொடுக்கும் ஆதரவை நாங்கள் நீக்கிக் கொள்வோம்’ என ஏன் இவர்களால் எமது மக்களுக்காகப் பேரம் பேச முடியாதுள்ளது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இத்தகையதொரு நிலையில் நாங்கள் இருக்கவில்லை. நாங்கள் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தாலும், தென்னிலங்கை அரசுகளில் மேலதிகமாகவே இருந்திருந்தோம். அவ்வாறு, மேலதிகமாக இருந்துகொண்டே, பேரம் பேசுவதற்குக் கூட இயலாத நிலையில் நாங்கள் இருந்தாலும், எமது மக்களுக்கும், எமது பகுதிகளுக்கும் அரசாங்கங்களுடனான புரிந்துணர்வு அடிப்படையில் நிறையவே பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம் என்பதை வரலாறு சான்று பகரும்.

மறுபக்கத்தில், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, இனங்களுக்கிடையே பாலம் அமைப்போம் எனச் சொல்லிக் கொள்கின்ற இந்த அரசு, தன் சுய சிந்தனையில் ஒரு முடிவை எடுத்து, எமது மக்களின் இத்தகைய காணிப் பிரச்சினை உள்ளடங்களாக அத்தனைப் பிரச்சினையையும் போதியளவில் தீர்க்கும் எனப் பார்த்தால், அதுவும் நடக்கின்ற பாடில்லை.

ஒரு காலத்தில் செழிப்பான ஈரவலைய நிலமாக இருந்துள்ள, அக்கால மன்னருக்கு முத்து போன்ற சம்பா நெல்லை வழங்கியதாக வரலாற்று ரீதியில் கூறப்பட்டு வருகின்ற கொழும்பை அண்டிய முத்துராஜவெல பகுதியையே காப்பாற்ற முடியாத இவர்களால், எமது மக்களின் காணி, நிலங்கள் காப்பாற்றிக் கொடுக்கப்படும் என எப்படி நம்ப முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.     

Related posts:

அடைமழையால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் த...
திலீபன் உட்பட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மதிக்கின்றேன் - அமைச்...
அறம் வென்று, அநீதி தோற்ற தீபாவளித்திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில்...