வடக்கில் மீண்டும் பதற்ற சூழ்நிலை உருவாகக் காரணம் என்ன? – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Saturday, November 18th, 2017

சட்டம் ஒழுங்கு பற்றி கூறப்போனால், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலை மீண்டும் பதற்றமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதையே காணக்கூடியதாக இருக்கின்றது என நீதியமைச்சர் அவர்ளிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இத்தகைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சில சுயலாப தமிழ் அரசியல் சக்திகளுக்கும் பங்கிருப்பதாகவே சில தகவல்கள் கூறுகின்றன. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஒரு தமிழ் அரசியல் கட்சியின் அலுவலகத்திலிருந்து வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிந்தது. மேலும் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் குடாநாட்டில் ஒரு செய்தி பரவியிருந்தது. எனவே இதனது உண்மையான பின்னணி கண்டறியப்பட்டு, அதன் மூலவேர்கள் அகற்றப்படாத வரையில் இப்பிரச்சினை தீரப் போவதில்லை என்றே தெரிகின்றது.

அண்மையில் நான்கு தினங்களுக்குள் 08 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று, 12 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கோண்டாவில், மானிப்பாய், ஆறுகால்மடம், நல்லூர் முடமாவடி, ஈச்சமோட்டை, குருநகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குருநகர் பகுதியில் கடந்த 12ஆம் திகதி இரவு இளம் குடும்பஸ்தர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள வாள்வெட்டுச் சம்பவத்தின்போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் அந்த அழைப்பிற்கு பொலிஸார் பதில் தரவில்லை என்றும், பின்னர் பொலிஸாரின் அவசர உதவிச் சேவைக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ் குடாநாட்டில் மேற்படி வாள்வெட்டுச் சம்பவங்களில் ஏற்கனவே ஒரு குழுவினரே ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று பலக் குழுக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இத்தகைய நிலைமையானது மிகவும் பாதூரமான அபாயத்தையே வலியுறுத்துவதாகத் தென்படுகின்றது. அந்த வகையில் இத்தகைய நிலைமையினை முற்றிலுமாக மாற்றியமைப்பது தொடர்பில் பொலிஸார் மிகவும் அவதானமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என்றே கருதுகின்றேன்.

சட்டம் ஒழுங்கைப் பேணும் வகையில் பொலிஸார் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.

கடந்த சுமார் மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு அப்போதைய பொலிஸாரின் சில செயற்பாடுகளும் காரணமாக இருந்ததையே வரலாறு எமக்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றது. மேலும், பாரிய யுத்தச் சூழலுக்கு பழக்கப்பட்டதொரு சூழலில் வளரந்த மக்களைக் கொண்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணும்போது மிகுந்த அவதானம் தேவை. இன்னமும் யுத்தமயமான சூழலிலிருந்து முழுமையாக விடுபடாத பகுதிகளாகவே எமது பகுதிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

அதேபோன்று நாட்டின் தென்பகுதியை எடுத்துக் கொண்டாலும், குறிப்பாக, ரத்கம, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, பலபிட்டிய, கரந்தெனிய, மீடியாகொட, படபொல போன்ற பகுதிகளிலும் பாதாளக் குழுக்களின் ஆதிக்கங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக தென்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்று போதைப் பொருட்களின் கடத்தல் செயற்பாடுகளுக்கும், விற்பனைக்கும், பாவனைக்கும் தாராளமயப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே மாறிவிட்டுள்ளன. அண்மைக்கால ஊடகங்களைப் பார்க்கின்றபோது இதனை புரிநிதுகொள்ள முடிகின்றது.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்பாணம், மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்கள் ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பில் அடிக்கடி பேசப்பட்டுவந்த மாகாணங்களாக இருந்த நிலையில், தற்போது திருகோணமலை மாவட்டத்திலும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைகள் துரிதகதியில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது.

எனவே, நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் மேலும் அதிகமான கவனங்கள் செலுத்தப்பட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.

‘பொலிஸைச் சுத்தப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாகவும், பின் கதவால் பொலிஸ் சேவையில் நுழைந்து, அரசியல் பலத்தினால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாகக் கடமையாற்றுவோர் இனி அந்தப் பதவியில் நீடிக்க முடியாது’ என அண்மையில் பொலிஸ்மா அதிபர் திரு. பூஜித்த ஜயசுந்தர அவர்கள் தெரிவித்திருந்ததாக ஊடகங்களின் மூலமாக அறியக் கிடைத்தது.

அவரது கருத்தை நான் வரவேற்பதுடன், இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூற வேண்டும் என எண்ணுகின்றேன்.

யுத்தம் நிலவிய காலத்தில் தென்பகுதிகளில் தண்டனைகளுக்கு உட்படுகின்ற பொலிஸாரை அவர்களது வசிப்பிட பகுதிகளை விட்டும் தூர இடங்களுக்கு இடமாற்றுவது என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுவது, தண்டனைக்குரியவர்களுக்கான மிகப் பெரும் தண்டனையாகக் கருதப்பட்டது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இப்போதும் அந்த நடைமுறைப் பின்பற்றப்படுவதாகவே அறிய முடிகின்றது.

அந்த வகையில், இவ்வாறு தண்டனைப் பெற்று, கோபத்துடனும், விரக்தியுடனும், மொழி புரியாத நிலையிலும், அதுவும் யுத்தத்தில் வெற்றி கொள்ளப்பட்ட பகுதி என்ற நினைப்புடனும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடமையாற்ற வருகின்ற ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் எமது மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பது? என்றொரு பிரச்சினையும் இருந்து வருகின்றது. இது குறித்தும் பொலிஸ்மா அதிபர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் பெரும்பாலான பொலிஸாரிடையே குணவியல்புத் தன்மைகளில் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எமது மக்களை அரவணைத்தப் போகக்கூடிய தன்மைகள் காணப்படுகின்றன. இந்த நிலை மேலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஆலோசனையாக முன்வைக்கின்றேன்.

அத்துடன், காலி கிந்தோட்டடைப் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. பொலிஸார் தலையிட்டு அங்கு சுமுகமானதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இவ்வாறான மோதல் நிலைமைகளின்போது பொலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே அழிவுகளை பாரியளவில் தடுக்க முடியும் என்பதையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.

இறுதியாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக்க அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்பு தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ பிரதமர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தபோது, தாங்கள் காலி கோட்டைப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், தங்களுடன் கலந்துரையாடி யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்புத் தொடர்பில் தங்களது ஒத்துழைப்பு அவசியம். அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படிக் கோரி எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்.

இங்கு கொள்கை சார்ந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு விடயம் தொடர்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். முப்படைகள் தரப்பிலும், பொலிஸ் தரப்பிலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த கோரிக்கையை முன்வைப்பதே பொருத்தமாகும்.

அதாவது, தற்போது பொலிஸாருக்கென்றும் படைகளுக்கென்றும் மருத்துவமனைகள் நல்ல முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த யுத்த காலத்தில் இவற்றுக்கான தேவைகள் மிக அதிகமாக இருந்தது. தற்போதைய நிலையில் அப்படி இருக்காது என எண்ணுகின்றேன்.

எனவே, மேற்படி மருத்துவமனைகளின் சேவைகளை, நியாயமான கட்டணத்தின் அடிப்படையில் பொது மக்களும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்ய முடியுமெனக் கருதுகின்றேன். இதனால், பொது மக்களுக்கும் நியாமான செலவில் உயரிய பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதே வேளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு போதியளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாக இருக்கும்.

எனவே, இந்தத் திட்டம் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றவே ஓய்வின்றி உழைக்கின்றோம் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...
ஊர்காவற்றுறையில் கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்...

ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – இறந்தவர்களை நினைவு...
தயக்கம் காட்டும் கடற்படையினர் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று உண்மையான நிலைமையினை பு...
நெடுந்தீவின் பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது புதிய மின் பிறப்பாக்கி - மின்சார பிரச்சினைக்கு தீர...