யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

Friday, October 12th, 2018

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது, வெற்றியளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மறைந்த கௌரவ மகாத்மா காந்தி அவர்களது 150வது ஆண்டு ஞாபகார்த்தம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மகாத்மா காந்தி அடிகளின் வாழ்க்கை வரலாறு இன்றும்கூட உலகில் வியந்து போற்றத்தக்கதொரு வரலாறாக இருக்கின்றது. அவரைப் பற்றி கூறி முடிப்பதற்கு எனக்குத் தரப்பட்டுள்ள நேரம் போதாது என்பதால், இந்தியாவுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த மகாத்மா காந்தி அடிகளாரது வாழ்க்கையில் மிக முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மாத்திரம் கூறலாம் என எண்ணுகின்றேன். அதிலிருந்து இந்த நாடு சில படிப்பினைகளைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அவரது தண்டி யாத்திரை. இது 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி மகாத்மாவின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல்கள் தொலைவில் இருந்த தண்டி வரை 23 நாட்கள் நீடித்த நடைபயணமாகும்.

இந்தியாவை ஆட்சி செய்திருந்த ஆங்கிலேயர்கள் உப்புக்கு விதித்த வரியை எதிர்த்தே அன்று இந்த நடைபயணம் மகாத்மாவினால் ஆரம்பிக்கப்பட்டு, வெற்றி ஈட்டப்பட்டது.உப்பு, அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பது மகாத்மாவின் எண்ணமாக இருந்தது.

இலங்கை நாட்டில் சூழவும் கடல் இருந்தும் உப்பையும் நீங்கள் இறக்குமதி செய்து, அத்தனைக்கும் வரி விதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். மக்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாத்மாவின் தண்டி நடைபயணம் போல், ஒரு கண்டி நடைபயணத்தையாவது அவர்கள் சுயமாக ஆரம்பிக்க இதுவரையில் ஆயத்தமாக இல்லை. இனி எப்படியோ, கூற முடியாது. என்றாலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது, வெற்றியளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் அங்கு காணப்படக்கூடிய உப்பளங்களை மீள உரிய முறையில் அபிவிருத்தி செய்தாலே எமது நாட்டின் நுகர்வுத் தேவைக்கு போதுமான, தரமான உப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். அதே நேரம் ஏற்றுமதிக்கெனவும் பயன்படுத்த முடியும்.

யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் மன்னார், ஆணையிறவு, குறிஞ்சாந்தீவு போன்ற உப்பளங்கள் பாரிய இலாபத்துடன், பல்லாயிரக் கணக்காணோருக்கான வேலைவாய்ப்புகளுடன் செயற்பட்டு வந்திருந்தன. எனவே, இவ்விடயம் தொடர்பில் இந்த அரசு அவதானங்களைச் செலுத்த வேண்டும்.

Related posts:

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்ச...
வீட்டு நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்தை ஊக்கவிக்க சமுர்த்தி வங்கிகளூடாக விஷேட சுயதொழில் கடன் திட்டம் –...