யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 24th, 2016
யாழ் மாவட்டத்திலுள்ள நிலங்களில் சூழலுக்கு பாதிப்பினை உண்டுபண்ணாத வகையில், சுண்ணக் கற்களை அகற்றினால்தான் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவோ, ஏனைய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவோ முடியும் என்கின்ற நிலையில், யாழ் மாவட்டத்தில் சுண்ணக் கற்களை அகழ்தல் மற்றும் உழவு இயந்திரங்களில் ஏற்றி, இறக்குதல் தொடர்பில் விஷேட ஏற்பாடாக நியாயமானதொரு நடைமுறை செயற்படுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ள செயலாளர் நாயகம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கல்லக்கலட்டியாக இருக்கும் கலட்டி நிலங்களை தோட்ட நிலங்களாக மாற்றி, பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சம தரையாக மாற்றி, வீடு முதலான கட்டிடங்களைக் கட்டுவதற்குமாக சுண்ணக் கற்பாறைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அகற்றப்படும் கற்கள் பல்வேறு கட்டுமாணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்படி கல்லுடைக்கும் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டவர்களாக யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் கீழுள்ள ஜே /273 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட சிறுப்பிட்டி, ஈவினை, அச்செழு, நவக்கிரி, மயிலங்காடு, தம்பாலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000 வரையிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம் மக்கள், அச்சுவேலி, பத்தமேனி, வளலாய், பலாலி, புத்தூர், சிறுப்பிட்டி, நவக்கிரி போன்ற கிராமங்களில் காணி உரிமையாளர்களது அனுமதியுடன் அவர்களது காணிகளில் கல்லுடைக்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில், தற்போது யாழ் மாவட்டத்தில் சுண்ணக் கற்பாறைகள் அகற்றப்படுவது தொடர்பில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. மேற்படி கல்லுடைக்கும் செயற்பாடுகளுக்கு கனிய வளங்கள் திணைக்களத்தில் 50,000 ரூபா செலுத்தி, பொருத்தமான காரணங்களுடன் அனுமதி பெற வேண்டும் என்றும், கல்லை ஏற்றி இறக்குவதற்கு பொருத்தமான முறையில் வழி அனுமதி பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி மக்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்படி அகற்றப்படும் கற்களை ஏற்றி, இறக்கும் உழவு இயந்திர சாரதிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது யாழ் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள தொழிலில்லா பிரச்சினைகளுக்கு மத்தியில், இம் மக்களுக்கு வேறு தொழில் துறைகளை நாடவும் இயலாததொரு சூழ்நிலையே காணப்படுகின்றது.
எனவே இவ்வடயம் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்தி, இத் தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Untitled-1 copy

Related posts: