மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 6th, 2021

இரண்டாம் மொழிப் பரிச்சயத்திற்கான சான்றிதழ்களையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளுகின்ற அரச அதிகாரிகள் பலரும் இரண்டாம் மொழியில் ஒரு வார்த்தைகூட புரிந்து கொள்ள முடியாத நிலைமைகளையே நடைமுறையில் பார்க்கின்றோம் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச கரும மொழிகள் அமுலாக்கலில் அரச அதிகாரிகள் தங்களது முழுமையான பங்களிப்பினை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தண்டனைச் சட்டக் கோவை சான்று மற்றும் பிணை சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் குறித்த விவாதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இது குறித்து தொடர்ந்தும் கூறுகையில்  –

இந்த நாட்டிலே அரச கரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இருத்தல் வேண்டுமென இலங்கையின் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும், இன்றுவரையில் இந்த நாட்டில் அது நடைமுறையில் இல்லாதது, கவலைக்குரிய அதே நேரம் கண்டிப்புக்குரிய ஒரு விடயமாகும் என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரச சுற்றறிக்கைகள் முதற்கொண்டு அரச அதிகாரிகளின் கடிதங்கள் வரையிலாக அனைத்தையும் அரச நிறுவனங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலே வாழ்ந்து வருகின்ற சிங்கள மொழி பரிச்சயமற்றவர்களுக்கு சிங்கள மொழி மூலமாகவே அனுப்பி வைப்பதும், அதனைப் பெறுகின்றவர்கள் மொழி புரியாத காரணத்தினால் பல்வேறு இடையூகளுக்கு உட்படுவதும் பல காலமாகவே தொடர்ந்து வருகின்றது.

இத்தகைய நிலைமையில், அந்தந்த மொழிகளில் பரிச்சயம் மிக்கவர்கள் வாழ்கின்ற மற்றும் இரு மொழி மூலமான பரிச்சயம் மிக்கவர்கள் வாழ்கின்ற பகுதிகளில் போதுமானளவு அந்தந்த மொழிகளில் பரிச்சயமுள்ளவர்களை அல்லது இரு மொழிகiளில் நடைமுறையில் பரிச்சயம் உள்ளவர்களை அரச நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் அமர்த்துவதற்கும், அத்தகைய ஆளணிகள் பற்றாக்குறையான சந்தர்ப்பங்களில் சிறந்த மொழி பெயர்ப்பாளர்களை பதவிகளில் அமர்த்துவதற்குமான நடவடிக்கைகள் அவசியமாகின்றது.

இங்கே, மொழி பெயர்ப்பாளர்கள் என்கின்ற போது, தண்டனை சட்டக் கோவை மட்டுமல்ல, அரச ஆவணங்கள் அனைத்தும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாலும், அவற்றை தமிழ் கற்றறிந்த மக்களால்கூட புரிந்து கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. எனவே, மூல மொழியில் இருப்பதை உள்வாங்கி, அதே மூல மொழி அர்த்தத்துடன் அதை தமிழ் மொழியில் எழுதினால் மயக்க நிலை ஏற்படாது என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த 3 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வீட்டுத் தோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சிங்கள மொழியில் வழங்கப்பட்டமையினால் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக வெளியான செய்திகளையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை இருந்தமையை அவதானித்து திருத்தியமைத்த பின்னர் பதவியேற்ற இளைஞர் விவகார அமைச்சராக கௌரவ நாமல் ராஜபக்ஷ, முன்னுதாரணமாக இருக்கின்ற நிலையில், இளைஞர்கள் சேவைகள் மன்ற அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வதானது மிகவும் துரதிஸ்டவசமானது எனவும் கடற்றொழில் அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேபோன்று, அரசாங்கம் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கென சிங்கள மொழியில் சூட்டப்படுகின்ற பெயர்களையும் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைத்து வருபவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அத்தகைய மொழிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதையும் கடந்த ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பினர் குறித்த விடயம் தொடர்பாக அக்கறையின்றி இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு...
தமிழ் மக்களது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்ய எந்தச் சவால்களைய...
நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்ய பங்களாதேஷின் ஒத்தாசைகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவா...