முழுமையான கடற்றொழில் கற்கைகளுக்கான வளாகம் வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !

Wednesday, April 21st, 2021

அனைத்து வசதிகளும் கொண்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் கற்கைநெறிகளைக் கொண்ட வளாகம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், சுமார் 3400 மில்லியன் முதலீடடில் 100 ஏக்கர் விஸ்தீரனமுள்ள யாழ். பல்கலைக் கழகத்தின் வளாகம் ஒன்றினை முல்லைத்தீவில் அமைக்கும் திடடம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் நேற்று முன்தினம்(19.04.2021) இடம்பெற்ற அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் கடற்றொழில் சார் மக்கள் பயனடையும் வகையில், றுகுணு பல்கலைக் கழகத்தின் கடற்றொழில்சார் கற்கைகள் பீடம் மாத்தறையில் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோன்ற கடற்றொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரு பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, 90 களின் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் துரைராஜா ஆவர்களினால் இதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதைதொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறைவேறாத நிலையில், 2007 ஆம் ஆண்டில் இருந்து ஒரு பாடப் பிரிவாக கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அதேவேளை முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பிரதேசத்தில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்கான முன்வரைவு ஒன்றும் பல்கலைக்கழக சமூகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் மற்றும் கல்வி சார் ஆர்வலர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

கிடைக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தல் மற்றும் புதிய வாய்ப்புக்களை உருவாக்குதல் மூலம் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மையை நாட்டின பலமான பொருளாதார மார்க்கமாக மாற்றும் நோக்குடன் செயற்பட்டு வருகின்ற கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயம் தற்போது அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ளவாறு குறித்த பீடம் முல்லைத்தீவில் அமைகின்ற போது, அப்பிரதேசத்தின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்களினால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!
அராசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் - வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார...