முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது நெருக்கடிகளும் அச்சுறுத்த ல்களும் அதிகரித்துள்ளன – டக்ளஸ் தேவானந்தா  நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Tuesday, July 4th, 2017

நீதித்துறை ஒழுங்குகள் குறித்து இங்கு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாமென விரும்புகின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஐந்தாவது சந்தேக நபர் அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சிறைச்சாலை காவலர்களால் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் கடந்த 29ஆம் திகதி நீதிமன்ற வெளிநடப்பு செய்திருந்ததுடன் கௌரவ நீதி அமைச்சர் அவர்களுக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

இத்தகைய சம்பவங்கள் வவுனியா சிறைச்சாலையிலும் தொடர்வதாகவே தெரிய வருகின்றது. கைதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் வவுனியா சிறைச்சாலையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்தேக நபர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சில சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருவதை இந்தச் சபையின் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

மேற்படித் தாக்குதல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்ற நிலையில், இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் உண்டா? என்பது குறித்து ஆராயப்பட  வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேற்படி குறித்த நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்கு முயற்சித்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீதான கொலை முயற்சி என்ற கதையில் எவ்விதமான உண்மைகளுமில்லை என அதே நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தச் சபையில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டதோடு வேறு எவ்விதமான வாழ்வாதார உதவிகளும் இன்றிய நிலையில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள்  பலரும் மிகவும் பாதிக்கப்பட்டதொரு நிலையிலேயே இன்னமும் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்கள் மீதான பல்வேறு அதிகாரத் தரப்பினரது கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது  சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: