மாணவர்களது நலனில் அக்கறை கொண்டு புகையிரத தொழிற்சங்கத்தினர் செயற்பட வேண்டும்! அரசும் சில விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வர வேண்டும்!

Tuesday, December 12th, 2017
புகையிரத தொழிற் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்ற பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளால் பொது மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் ஆரம்பித்துள்ளதால், புகையிரதப் போக்குவரத்து இன்மை காரணமாக மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்ற நிலையே ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை அவதானத்தில் எடுத்து, மாணவர்களின் கல்வி நலன்களில் அக்கறை கொண்டு புகையிரத தொழிற் சங்கங்கள் தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் புகையிரத சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடாக பேரூந்துகளை அதிகரிப்பது என்பது ஓரளவு பயன்தரக்கூடிய ஏற்பாடாகுமே அன்றி அதுவே தற்காலிகமாகவேனும் போதிய ஏற்பாடாக இல்லை. மேலும், இத்தகைய பணிப் பகிஷ;கரிப்புகளின்போது, இராணுவத்தினரை அழைப்பது, வேறு ஆட்களைக் கொண்டு அப் பணிகளை மேற்கொள்வது என்பதெல்லாம் சாத்தியமாகப் போவதில்லை என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்களது பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் அரசு மேற்கொண்டிருந்த சில நடவடிக்கைகளே அதன் பின்னரான நாட்டில் பாரிய நெறுக்கடி நிலையை ஏற்படுத்தியிருந்த மேற்படி ஊழியர்களது பணிப்பகிஷ;கரிப்பு நடவடிக்கைகளுக்கு காரணமாகின என்றொரு கருத்தும் நிலவுகின்றது.
அந்தவகையில், மேற்படி புகையிரத தொழிற்சங்க பணிப் பகிஷ;கரிப்பு தொடர்பில் அரசாங்கமும் சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய விட்டுக் கொடுப்புகளை தமக்கானத் தோல்வி என அரச தரப்பு நினைக்கக்கூடாது எனவும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: