மணவைத்தம்பியின் தமிழ் மக்களுக்கான பங்களிப்புக்களை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் பெருமையடைகின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021

இலைமறை காயாக  இருந்து தமிழ் மக்களுக்கு தன்னாலான பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய மணவைத்தம்பியின் நினைதினம் இன்றாகும். இந்நிலையில் மணவைத்தம்பியின் தமிழ் மக்களுக்கான பங்களிப்புக்களை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் பெருமையடைகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் –

தென் தமிழகத்தின் மணப்பாடு என்னும் கடற்கரையோரக் கிராமத்தில் அவர்கள் பிறந்த மணவைத் தம்பி, இலங்கையின் தலைநகரில் குடியேறி இலங்கைத் தமிழருக்கு ஆற்றிய பணிகள் காத்திரமானவை.

இந்நிலையில் தலைநகரின் ஒரு புகழ்மிக்க அரசியல்வாதியாக உருவாகிவந்த அவர், இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டமை தமிழ் மக்களின் துரதிஸ்டம் என்றே சொல்ல வேண்டும்.

இலங்கையில் வாழ்ந்த காலத்தில் “திரைக்கலை” என்னும் சஞ்சிகையையும் அவர் வெளியிட்டு அதனூடாக பல்வேறு கருத்துக்கள் வெளிவரக் காரணமாக இருந்தார்.

மனைவி பிள்ளைகளுடன் 70 களில் நாடுகடத்தப்பட்ட அவர், சென்னையில் மேற்குமாம்பலம் பகுதியில் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்.

அவரது அந்த வீடு இலங்கையர் பலருக்கு பின் நாட்களில் தங்குமடமாகிப்போனது. சாதாரண தமிழ் அகதிகளுக்கு மாத்திரமன்றி, விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கும் அவரின் அந்த வீடு தற்காலிக புகலிடமாக  விளங்கியிருந்தது.

பல இலங்கைத்தமிழ் தலைவர்களை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உட்பட பலரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

இப்படி இலங்கைத்தமிழ் மக்களுக்கான பல உதவிகளை செய்தாலும் அவற்றை பிரபலப்படுத்திக் கொள்ளாதவர்.

அப்படிப்பட்ட உன்னதமானவரின் 14 ஆவது ஆண்டு நினைவு தினத்தில் அவரினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கான பங்களிப்புக்களை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் பெருமையடைகின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: