போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளே பிரச்சினைகளுக்கான தீர்வா – டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!

Monday, May 8th, 2017
இன்று எமது நாட்டில் பலவேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்கள் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான போராட்டங்களுக்குரிய பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்கானத் தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, அப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வதென்பது இந்த நாட்டுக்கு ஆரோக்கியமான முன்னடத்தையாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், எமது நாட்டில் மக்களது அன்றாட மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் பல தீர்க்கப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன. வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் எமது மக்களது உணர்வு ரீதியிலான பிரச்சினைகள், அடிப்படை மற்றும் அத்தியாவசிய பிரச்சினைகள் என பலதரப்பட்ட பிரச்சினைகள் விசேட நெறிமுறைகளுக்கு ஊடாக தீர்க்கப்பட வேண்டியன. இவ்வாறான பல பிரச்சினைகள் தீர்க்கப்டாமல் தொடர்கின்ற பிரச்சினைகளாக இருக்கின்ற நிலையில், நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் எமது மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாகவேத் திணிக்கப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமலில்லை.
நாட்டில் பொருளாதார வீழ்ச்சி நிலை காணப்படுவது உண்மை. எனினும், நிதி செலவுகளற்ற வகையில் அரசால் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளே இன்று பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, வில்பத்து, மாயக்கல்லி, மடு, திருகோணமலை போன்ற பகுதிகளிலே ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான பிரச்சினைகள் என்பன கொள்கை ரீதியாக, தேசிய நல்லிணக்கம் கருதிய எற்பாடுகள் ரீதியாக சுமுகமாகத் தீர்க்கப்படக் கூடியவை.
அதே போன்று, எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல் போன்ற பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் கட்டாயமாகத் தீர்க்கப்பட வேண்டியவை.
குப்பைகள் தொடர்பில் ஒழுங்கு முறையான கொள்கைகள் இல்லாமையும், அதிலே இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் இருந்து வந்துள்ள இழுத்தடிப்புகள் காரணமாகவும் மீதொட்டமுல்ல பகுதியில் ஓர் அனர்த்தம் நிகழ்ந்து முடிந்துள்ளது. மேலும், கண்டி, கொஹாகொடை, தேக்கவத்த மற்றும் பண்டாரவளை, கலமடுகஸ்தன்ன போன்ற பகுதிகளிலுள்ள குப்பை மேடுகள் தற்போது அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிய வரும் நிலையில் அது குறித்த அவதானங்கள் செலுத்தப்படுவதாக இல்லை.
நாட்டில் இவ்வாறானதொரு நிலை நிகழுகின்றபோது போராட்டங்கள் எழுவது இயல்பாகும். இந்த நிலையில், அப் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படாமல், அப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால், அது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு பெரிதும் பாதகமாகவே அமையுமென டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: