நெடுந்தீவுக்கு முழுநேர குடிநீரை பெற்றுக்கொடுத்ததுபோல மெலிஞ்சிமுனைக்கும் குடிநீரை பெற்றுத்தருவோம் – டக்ளஸ் தேவானந்தா!

நெடுந்தீவுக்கு எவ்வாறு 24 மணி நேரமும் குடிநீரைப் பெற்றுக் கொடுத்தோமோ அதே போன்று மெலிஞ்சிமுனைப் பகுதிக்கும் 24 மணிநேர குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமது முழுமையான முயற்சிகளை முன்னெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எமது மக்கள் இன்றும் பல்வேறு தேவைப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனாலும் பல தேவைப்பாடுகளுக்கு தீர்வுகாணக்கூடியதாக இருக்கின்ற சூழலிலும் உரிய தீர்வுகள் காணப்படாது உள்ளமை மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை கவலையையும் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக எமது மக்கள் இன்றும் கூட தறப்பாள் கொட்டில்களிலும் தகரக் கொட்டில்களிலும் ஓலைக் குடிசைகளிலும் பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களது தேவைப்பாடுகளுக்கு உடனடியாகத் தீர்வகாணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய வசதி வாய்ப்புக்களை புறந்தள்ளிவிட்டு அந்த நிதிகளைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான நவீன வசதிகளைக் கொண்டமைந்த வீடுகளை நிர்மாணித்து வருகின்றார்கள். இதேபோன்றுதான் வடக்கு மாகாணசபையும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகவே நெடுந்தீவில் 24 மணிநேர மின்சாரத்தையும் குடிநீரையும் பெற்றுக்கொடுத்து இன்று அந்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்வை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது.
இத்தகைய மக்கள் சேவையை யாரும் கடந்தகாலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி செய்ய முடியாது என்பதுடன் எதிர்காலத்திலும் அவர்களால் செய்யமுடியாது என்பதையும் இங்கு நான் உறுதிபடக் கூற விரும்புகின்றேன்.
எனவே கிடைத்துள்ள இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்னும் அரிய சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்தி எமது வீணைச் சின்னத்தின் வெற்றிவாய்ப்பை உறுதி செய்தால் நிச்சயம் நாம் மக்களது அபிலாஷைகளை நிறைவுசெய்து கொடுக்க காத்திருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|