நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை மக்களுக்கு சாதகமானது – டக்ளஸ் தேவானந்தா!

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருக்குமானால்தான் சிறுபான்மையின மக்களது உரிமைகளையும் அவர்களை முன்னிறுத்திய அரசியல் செயற்பாடுகளையும் வலுப்படுத்திக்கொள்ளமுடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் சீர்திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்டுவதால் பாதிக்கப்படுவது சிறுபான்மை இனங்களும் அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும்தான். இந்த முறைமை தொடர்ந்து இருக்குமானால் மட்டுமே சிறுபான்மை இனமக்களின் தரப்பினர் ஒரு அரசியல் பேரம்பேசும் சக்தியாக திகழமுடியும். அரசியல் அழுத்தங்களை கொடுப்பதற்கான வாய்ப்பை பெற்று தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியிடமிருந்து சிறுபான்மை இன மக்களது தேவைகளையும் உரிமைகளையும் நிறைவுசெய்து கொள்ளமுடியும்.
அத்துடன் நாம தற்போது வலியுறுத்திவருவது அரசியல் சீர்திருத்தத்தினூடாக கொண்டுவரப்படும் அரசியல் யாப்பில் சிறுபான்மை இனத்தவரது 50 வீத பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பதே. அவ்வாறு 50 வீதமான பிரதிநிதித்துவம் இருக்கும் போதுதான் சிறுபான்மையின மக்களது அரசியல் அதிகாரங்கள் இந்நாட்டில் வலுவானதாக காணப்படும்.
அத்துடன் புதிய அரசியல் சீர்திருத்தத்தினூடாக உள்ளூராட்சி மன்றங்களில் கொண்டுவரப்படும் மாற்றங்களால் சிறுபான்மையின கட்சிகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இதற்காக நாம் கொண்டுவரப்படும் சீர்திருத்தத்தை எதிர்க்கவில்லை. அந்ததிட்டத்தில் சிறுபான்மை கட்சிகளது நலன்கள் சார்ந்த பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் பரிகாரங்கள் உள்ளடக்கப்பட்டு அதை சீர்ப்படுத்தவேண்டும் என்பதுமே எமது வேண்டுகோளாகும்.
அத்துடன் இந்த யோசனைகள் ஆராயப்படுவதற்கு கால நீடிப்பு தேவையாக உள்ளதால் தற்போது செயலற்று கிடக்கும் உள்ராளூட்சிமன்றங்களுக்கு பழைய முறைப்படி தேர்தலை நடத்துவது அல்லது ஏற்கனவே இருந்த உறுப்பினர்களை விசேட ஏற்பாடுகள் மூலம் சிறிது காலத்துக்கு செயலாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் இதற்கான முன்யோசனைகளை சிறுபான்மைக் கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கெ.ஜெகன்) மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிரவாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|