நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  – நாடாளுமன்றில டக்ளஸ் எம் .பி வலியுறுத்து!

Wednesday, November 1st, 2017

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த விவாதம் இன்றையதினம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை குறித்த பல்வேறு கருத்துகள் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலையில், அது தொடர்பில் அரசியல் யாப்புச் சபையின் முன்பாக மீண்டும் எனது கருத்தினைப் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பின் தேவை உணரப்பட்டிருப்பதாக ஒரு சாரார் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில், புதிய அரசியல் யாப்பு இந்த நாட்டிற்குத் தேவையில்லை என இன்னொரு சாராரும் கூறி வருவதுடன், அதற்கென தத்தமது பக்கங்களைச் சார்ந்து பல்வேறு நியாயங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் கடந்த 40 வருடங்களாக பாவனையில் இருந்து வருகின்றது. இதுவரை இந்த அரசியலமைப்புச் சட்டம் 19 திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த கால அனுபவங்கள் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக இந்த நாட்டில் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான நாட்டை காண்பதற்கு தேவையான பொருளாதார சுபீட்சத்தையும், சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவையும் கட்டியெழுப்பக் கூடிய வகையில் இந்த நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது புதிதாகச் சிந்திக்க வேண்டிய ஒரு கடப்பாடு இந்த சபையில் அங்கம் வகிக்கின்ற சகல உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன்.

எதிர்கால சந்ததியினருக்கு நிம்மதியானதும், சந்தோசமானதும், சுபீட்சமானதுமான நாடு ஒன்றை காண வேணும் என்ற கனவை நிறைவேற்றி வைக்கக் கூடிய வகையில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கக் கூடிய வகையில், அதற்கு வழி அமைக்கக் கூடிய ஒரு சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை பலர்  வலியுறுத்தி வருகின்றனர்.

அதனையும் நாம் ஏற்றுக் கொள்ளும் அதே வேளை அத்தகைய புதிய அரசியல் யாப்பானது இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் கருத்துகளுக்கு மதிப்பளித்தே உருவாக்கப்பட வேண்டும்  என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

குறிப்பாக, எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு முதற்கொண்டு, சமூக, பொருளாதார, கலாசார, சூழல் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற வகையிலான – இந்த உரிமைகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்லக்கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பொன்றின் தேவை குறித்து பெரும்பாலான மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தளவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேசக்கூடிய நிலை உருவாகியுள்ள இந்த நாட்டில், இன்னமும் தமிழ் அரசியல் கைதிகள் எவ்விதமான விசாரணைகளும் இன்றி, பிணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வலிந்து காணாமற்போகச் செய்தவர்களது உறவினர்கள் தங்களுக்கான நியாயம் கோரி வீதிகளில் இறங்கி பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினைகள் இருக்கின்றன? என்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தமிழனாகப் பிறந்ததே பிரச்சினை என்றே இதற்கு பதில் கூற வேண்டியிருக்கின்றது.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ் பேசும் மக்களுக்கு, அம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நியாயமான அரசியல் அதிகாரங்கள், சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் வேறு எவ்வகையிலும், மீளப் பெற இயலாத வகையில் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றோம்.

அதே நேரம், அனைத்து மக்களும் புரிந்து கொள்கின்ற வகையிலான தீர்வாகவே அது அமைந்திருத்தல் வேண்டும். இல்லையேல், அது, இந்த நாட்டில் மீண்டும் ஒரு மோதல் உருவாகக்கூடிய நிலைக்கே இந்த நாட்டை தயார்படுத்திவிடும் என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.

தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள் இலங்கையர்களாகவும் அதே நேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்.

தமிழ் மக்களது இந்த நியாயமான அபிலாசைகளை  கடந்தகால தமிழ் சிங்கள அரசியல்த் தலைமைகள் தங்களது சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதன் காரணமாகவே சுமார் 30 வருடகால அழிவு யுத்தத்திற்கு இந்த நாடு முகம் கொடுத்திருந்தது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ் பேசும் மக்கள் விரும்புகின்ற நியாயமான அரசியல் தீர்வானது, சகோதர சிங்கள மக்களுக்கோ, இந்த நாட்டின் இறைமைக்கோ விரோதமானதல்ல என்பதை இந்தச் சபையின் ஊடாக சகோதர சிங்கள மக்களுக்கு கூற விரும்புகின்றேன். அந்த வகையில், எமது நியாயமான கோரிக்கையினை சகோதர சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், தற்போதைய எமது அரசியல் யாப்பில் இருக்கின்ற, 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை விடவும் முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையிலும் முழுமைப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பு எமது நாட்டில் நிறைவேற்றப்படுமாயின், அல்லது, புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளைவிட முன்னேற்கரமான அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கியதான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமாயின் அதனை நாங்கள் ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

இத்தகைய புதிய ஏற்பாடுகள், தற்போதுள்ள 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளவாறான அதிகாரப் பகிர்வுக்கு எந்தவகையிலும் குறைந்ததாக இருப்பின், அதனை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த விடயத்தில், தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற நாம், அது, ஒற்றையாட்சியாக, சமஷ;டியாக, அமெரிக்க மொடலாக, இந்திய மொடலாக, பின்லாந்து வரைபாக என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டுதான் வரவேண்டுமென்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இவ்வாறு சொற் பதங்களை வைத்து, சிலம்பாட்டம் ஆடிக் கொண்டு இனியும் காலத்தைக் கடத்துவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதை அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்என தெரிவித்துள்ளார்.

Related posts:


வடக்கு மாகாணத்தில் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் தரமுயர்த்தப்படவும் வேண்டும் ...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன - அமைச்சர் டக்ளஸ் தே...