சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, February 18th, 2022

போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியல் பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தினை  வலுப்படுத்தி வந்திருந்தால்  பாரிய அழிவுகளை தடுத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின்  கிளை காரியாலயத்தினை  யாழ் மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், யாழ் மாவட்ட மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தகவல் வெளியீட்டு பணியகத்தினை ஆரம்பித்து வைத்தமைக்காக வெகுஜன ஊடகத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லுறவு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலும் அர்த்தபூர்வமான செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்ற அமைச்சர் டளஸ் அழகப்பெரும, 2013 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தில் சேர் பொன்னம்பலம் மாவத்தை என்று வீதிக்கு பெயர் சூட்டியதையும் நினைவுபடுத்தினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“கரை காண விரும்பும் கப்பலுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்காகஊடகங்கள் திகழவேண்டும்! நிமிர்ந்தெழ விரும்பும் மக்களுக்கு  அறிவூட்டும் கல்வியாக  ஊடகங்கள் இருக்க வேண்டும்.

அரசியல் தலைமைகளின் கருத்துக்களை மக்களிடம் எடுத்து செல்வது போல்,மக்களின் ஆழ்மன விருப்பங்களையும் கண்டறிந்து அரசியல் தலைமைகளிடம் சொல்ல வேண்டும்.

எங்கெல்லாம் மக்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் ஊடகங்களும் மக்களை வழி நடத்தி சென்றிருக்கின்றன.போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரியலில் வதை பட்ட மக்களின் வாழ்வியலின் மீதும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

துப்பாக்கி முனைகளை விடவும் பேனா முனைகளே வலிமையானவை,..ஆகவே ஊடகவியலாளர்களேவலிமை மிக்க போராளிகள்,அழிவாயுதங்களை ஏந்திய காலங்கள் முடிந்து விட்டன, இன்று நீங்கள் அறிவாயுதங்களை ஏந்த வேண்டும்.

ஊடகமும் அறிவாயுதங்களில் ஒன்று.தமிழ் மக்களின் உரிமையை நோக்கிய பயணத்தில் 13 வது திருத்தச்சட்டம் நல்லதொரு ஆரம்பம்,இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்த போதுஎமக்கு பக்க பலமாக சகலரும் இருந்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது,காலம் கடந்தாவது இன்று எமது யதார்த்த வழிமுறைக்கு  பலரும் வந்திருப்பதை நான் வரவேற்கின்றேன்.

ஆனாலும், இன்று அதனை ஆதரிக்கின்றவர்களும் எதிர்க்கின்றவர்களும் உண்மையை மறைத்து பொய்யான அரசியல் நலன்களுக்காகவே அதனை செய்கின்றனர். அது எமது மக்களுக்கு விமோசத்தினை தரப்போவதில்லை.

இனி நாம் என்ன செய்ய வேண்டும்?எங்கிருந்து தொடங்க வேண்டும்?இவைகள் குறித்த ஆழ்மன உணர்வுகளும் உறுதியும் சகலருக்கு இருக்க வேண்டும்.

அடுத்து வரும் சந்ததிக்கு நாம் எதை விட்டு செல்லப்போகின்றோம்?எதை உருவாக்கி கொடுக்க போகிறோம்?இவைகள் குறித்த தொலை தூர பார்வையும் சமூக அக்கறையும் ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம். அதை நோக்கியே உழைத்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

Related posts: