குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஊர்காவற்றுறை மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Sunday, May 19th, 2019

கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பருத்தியடைப்பு மற்றும் தம்பாட்டி பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறித்த பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக ஊர்காவற்றுறை பிதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம்  அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது எமது பகுதியில் கடும் வரட்சி நிலை காணப்படுகின்றது. மக்களுக்கு மட்டுமன்றி ஏனைய உயிரினங்களுக்கும் நீர் இன்மைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது எமக்கு நாளாந்தமும் நீர் வழங்கப்படுவதில்லை. வழங்கினாலும் 20 லீற்றர் கொண்ட ஒரு கொள்கலனிலேயே நீர் கிடைக்கின்றது. இதை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தவேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாது பல இடங்களில் உள்ள நீர் விநியோகக் குழாய்களில் நீர் வருவதுகூட கிடையாது. மறுபக்கம் வரட்சி நிவாரணமாக நீர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுவும் சீராக எமது அத்தியாவசிய தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. எனவே நாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் குறித்த குடிநீர் பிரசச்சினையான எமது அடிப்படை தேவைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் குறித்த பகுதிகளில் வீதி மின்விளக்குகள் பொருத்தாமையால் இரவு நேரங்களில் பல அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாகவும் தெரிவித்ததுடன் அதற்கான தீர்வுடன் தமது பிரதேச வீதிகளையும் செப்பனிட்டு தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி காலக்கிரமத்தில் குறித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: