கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, December 28th, 2021

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை  ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கணடாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து வினைதிறனான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.

கிளிநொச்சி, இரணைமடு கமக்காரர் அமைப்பின் சமேளனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(28.12.2021) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் காணிப் பதிவுகளை ஒழுங்குபடுத்தி பூரணப்படுத்தல், காணி அபிவிருத்தி சபைகளை வினைத் திறனாக இயங்க வைத்தல், கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை, நீர்வழங்கல் செயற்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒவ்வொரு விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாயமான முறையில் விற்பனை செய்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், உழவர் சந்தை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான வளாகத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தையை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியை சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிப்  பெற்றுக் கொடுத்தார்.

அதேபோன்று, நெத்தலியாறு தொடக்கம் ஆனையிறவு வரையான சுமார் 16 கிலோ மீற்றர் நீளமான கண்டாவளை உவர் நீரேரிக்கு அணை கட்டப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசணத் திட்டத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு  விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

சபீட்சத்தின் நோக்கு உற்பத்திக் கிராம திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும், ஜனாதிபதியின் ஒரு இலட்சம் காணித் உறுதிகளை வழங்கும் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான உறுதிப் பத்திரங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மத ரீதியான தூண்டுதல்கள் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு!
தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாத...