கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் கூடாது – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016

வடக்கு மாகாணத்தில் செயல்படுகின்ற 12 வலய கல்விப் பணிமனைகளில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புதவற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் ஆகக் குறைந்தது நவீன விஞ்ஞானகூடம் ஒன்றினையேனும் வழங்கவும், உயர் தரத்தில் தொழில்நுட்பப் பாடங்கள் போதிக்கப்படுகின்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் தொழில்நுட்பபீட கட்டடத் தொகுதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில்

அதேநேரம், மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல கல்வித்துறையில் பாரிய வீழ்ச்சி நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. மலையகத்தைப் பொறுத்தவரையில், 5 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும், ஆசிரியர்கள் உட்பட உரிய வளப் பற்றாக்குறை காரணமாக தற்போது 0.2 வீதமானவர்களே பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு அடிப்படைக் காரணங்களாக பல இருப்பினும், குறிப்பாக முறையற்ற ஆசிரியர் நியமனங்கள், முறையற்ற வகையிலான அதிகாரிகளின் இடமாற்றங்கள், கல்வித்துறையில் அநாவசிய அரசியல் தலையீகள், வெளியாரின் தலையீடுகள், கல்வி அதிகாரிகளின், பாடசாலை அதிபர்களின், ஆசிரியர்களின் சுயமான சிந்தனைக்கு ஏற்படுத்தப்படுகின்ற முட்டுக்கட்டைகள் என்பனவும் பிரதான காரணங்களாக அமைவதாகக் கூறப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் கௌரவ கல்வி அமைச்சர் தனது அவதானத்தைச் செலுத்துவார் என நம்புகின்றேன். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தமிழ் பாடசாலைகளுக்கு உரிய வளங்கள் பறிக்கப்படுகின்ற ஒரு நிலைமையே காணப்படுவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக, தெமட்டகொடை விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்துக்குரிய 320 பேர்ச்சஸ் காணியில் சுமார் 200 பேர்ச்சஸ் காணி வெளியாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்துக்குரிய 60 பேர்ச்சஸ் காணியில் 20 பேர்ச்சஸ் காணி வெளியாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது இவற்றுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றார்.

Cabinet-to-be-Sworn-in-Today

Related posts: