உள்ளூராட்சி மன்றங்களில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் – வலிகாமத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, January 5th, 2019நாம் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க இதர தரப்பினருக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் அவர்கள் மக்களின் நலன்களை முன்னிறுத்தாது செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலை காணப்படுவதால் நாம் உள்ளூராட்சி சபைகளில் மக்களின் நலன்களை மையமாகக் கொண்டு ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் MM மண்டபத்தில் வலிகாமம் பிரதேசத்தின் வலி தெற்கு, வலி வடக்கு, வலிமேற்கு, வலி கிழக்கு, வலி தென்மேற்கு ஆகிய பிரதேசங்களிற்கு உட்பட்ட கட்சியின் செயற்பாட்டாளர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், பொறுப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
ஒவ்வொரு பிரதேச சபையிலும் வெவ்வேறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனாலும் அச்சபைகளில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் எமது கட்சியின் ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களும் தாம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
அவ்வாறான ஒரு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாகவே எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நாம் ஆட்சி அமைக்க ஆதரவுகள் தெரிவித்திருந்தாலும் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக எமது செயற்பாடுகள் அமைவதற்கு நாம் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக இருந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|