உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு!

Friday, September 15th, 2017

வடக்கில் வளர்ச்சியடைந்த நகரங்கள் தொடர்ந்து பிரதேச சபைகளாகவே இருப்பதால் அவற்றை நகரசபைகளாகத் தரமுயர்த்த வேண்டும் என்றும், பிரதேச செயலாகங்கள் அமையப்பெற்ற பிரதேசங்களில் பிரதேச சபை கட்டமைப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் நாம் நீண்ட காலமாக விடுத்துவந்த கோரிக்கை இன்று நிறைவேறியிருக்கின்றது.

எமது மக்களின் அத்தியாவசிய தேவைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும், கிராமிய அபிவிருத்திகளை உரியவாறு முன்னெடுப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உள்ளுராட்சி சபைகளின்  செயற்பாடும், அவற்றின் தர உயர்வும் பக்கபலமாக அமையும். எனவே எமது கோரிக்கையை நிறைவேற்றித் தந்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது கோரிக்கையின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் கடந்த செப்ரெம்பர் 7ஆம் திகதி உரையாற்றிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,நகரங்களாக வளர்ச்சியடைந்த போதும், கடந்த 25 வருடங்களாக பிரதேச சபைகளாகவே இருந்துவரும்,சுன்னாகம், சங்கானை, நெல்லியடி,மானிப்பாய் போன்ற பிரதேசங்கள் நகர சபைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதேச சபைகளும் நகர சபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் யாழ்ப்பாணம் வடமராட்சியில் மருதங்கேணி,கிளிநொச்சியில் கண்டாவளை, முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், மன்னாரில் மடு போன்ற பிரதேசங்களில், பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும், பிரதேச சபைக் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தக் கோரிக்கைகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றபோதே உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக மக்களும், பிரதேசங்களும் பயன்பெறும் என்பதையும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியிருந்தார்.

எமது கோரிக்கைகளுடன் புதிய உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளடங்களாக வட மாகாணத்தில் இரண்டு மாநகர சபைகள்,9 நகர சபைகள், 31 பிரதேச சபைகள் அமையப்பெறுவதுடன் இந்த நடவடிக்கைகளின் பயனாக மேலும் 3000 பேர் அரச வேலைவாய்ப்பும் கிடைக்கும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. இதனூடாக எமது இளைஞர், யுவதிகள் எதிர்கொள்ளும் வேலை வாய்ப்புப் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு கிடைக்கும்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடியவர்களையும், மக்களுடன் வாழக்கூடியவர்களைம் தெரிவு செய்து பயன்பெற வேண்டும்.

Related posts:

அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சா...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...