உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும் ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Thursday, June 8th, 2017உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட்டு அச்சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் மக்கள் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடியதாக இருக்கும் என்று டக்ளஸ் தேவானந்தாபா.உ அவர்கள் ஐரோப்பியயூனியனின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் ஆசிய சமுத்திரவலய நாடுகளின் 16 உறுப்பினர்களின் குழுவினருடன் நேற்றுமுன்தினம் தினம் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா பா.உஅவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் திருத்த யோசனைகள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளும் , சிறியகட்சிகளும் சிலகுறைபாடுகளைசுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். ஆகவே புதிய முறையில் தேர்தல் நடத்துவதாக இருந்தால், சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட்டே தேர்தல் நடத்தப்படவேண்டும். அது உடனடியாக சாத்தியமில்லாவிட்டால் பழைய முறைமையிலாவது உள்ளுராட்சித் தேர்தலை நடத்தவேண்டும்.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதும், அதன் பின்னர் இனங்களுக்கிடையே நம்பிக்கையையும், ஐக்கியத்தையும் வளர்த்தெடுப்பதற்கு ஏற்றவகையில் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் போதிய அளவு முன்னெடுக்கப்படவில்லை. எதிர்காலத்திலாவது நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ள வகையில் சகல இனங்களுக்குள்ளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
இனப்பிரச்சினை தீர்வாக முதல் கட்டமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து, கட்டங்கட்டமாக முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே அரசியலமைப்பில் அது இலங்கை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெரும்பான்மைமக்கள் அதன் பலாபலன்களை அனுபவித்தும் வருகின்றார்கள்.
ஒருவேளை முன்மொழியப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பு 13ஆவது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாகவும், தமிழ் மக்களின் அபிலஷைகளை மேலும் பூர்த்திசெய்வதாகவும் அமையுமானால் அதை நாம் வரவேற்பதுடன் சாத்தியமான வகையில் ஆராய்ந்துபார்ப்பதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்வதாலோ, இல்லாமல் செய்வதாலோ எமக்குப் பிரச்சினை இல்லை. அதேவேளை அரசியல் தீர்வொன்றுக்காக நடைமுறைச் சாத்தியமான அதாவது“அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும்”என்ற வகையில் இலங்கையர்களே இலங்கையர்களுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் இவ்விடயத்தில் சர்வதேசசமூகம் ஒரு மருத்துவிச்சியின் பணியையே செய்யமுடியும் என்றும் அதேநேரத்தில் தமிழர் தரப்பு நேர்மையோடு கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா பா.உஅவர்கள் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|