இறந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குரல்கள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 22nd, 2019


இன்றைய தினம் இங்கே நினைவு கூறப்படுகின்ற மூவருமே மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அதேநேரம், கலை, இலக்கிய, ஊடகத்துறையுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையில் இந்த மூவருக்கும் தொடர்புகளுண்டு என்றே சுட்டிக்காட்ட வேண்டும்.

‘அஸ்வர் ஹாஜியார்’ என  எங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கௌரவ ஏ. எச். எம். அஸ்வர் அண்ணர் அவர்கள் 1950களில் இலங்கை சமசமாஜக் கட்சியின் ஊடாக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தவர். 1955களில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்த அன்னார், முன்னாள் சபாநாயகரான மர்ஹம் எம். ஏ. பாக்கீர் மாக்கார் அவர்களது பிரத்தியேகச் செயலாளராகப் பதவி வகித்தவர்.

மும்மொழித் தேர்ச்சியாளரும், சிறந்த கிரிக்கெட் வர்னணையாளருமான அண்ணர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது மொழிப் பெயர்ப்பாளராகக் கடமையாற்றி, அன்னாரின் ஆசியுடன் 1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகி, முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் 2002 ஆம் ஆண்டில் ஐக்கியத் தேசியக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகி நாடாளுமன்ற விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார். பிற்பட்ட காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்த அவர், மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்காக தனது பதவியை இராஜினாமா செய்தார்.

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் செயலாளராகவும், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் உப தலைவராகவும், ஆலோசகராகவும் செயற்பட்டிருந்த அண்ணர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள், முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, முஸ்லிம் மக்களில் பல்துறை ஆற்றல் பெற்றவர்களை அவர்களது வாழ்நாளிலேயே கௌரவித்து,  மகிழ்ந்ததையும், நபிகள் நாயகம் அவர்களது பிறந்த தினமான மீலாத் விழாவை தேசிய ரீதியில் முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் கொண்டாடி, அந்தந்தப் பகுதிகளின் முஸ்லிம் மக்களது வரலாற்றினை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டதையும், இலங்கை முஸ்லிம்களது வரலாறு ஒரு போதும் மறந்துவிடாது என்றே நினைக்கின்றேன்.

வடக்கு முஸ்லிம் மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகளை நாம் தீர்த்து வைத்திருந்த அக்காலகட்டத்தில், அண்ணர் அஸ்வர் ஹாஜியார் அவர்களுக்கூடாக பல்வேறு உதவிகளைப் பெற்றிருந்ததையும் நான் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.

அமரர் பிலேசியன் சோசை சூசைதாசன் அவர்கள், மன்னார், வங்காலையில் பிறந்தவர். மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு. இலண்டன் என தனது கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொண்ட அன்னாரின் தந்தை தமிழில் சிறந்த புலவராகத் திகழ்ந்தவர். அந்த வகையில் சிறந்த கவித்துவத்தை அவர் தன்னகத்தேயும் கொண்டிருந்தார். 

தொழில் ரீதியில் பட்டயக் கணக்காளரான அமரர் சூசைதாசன் அவர்கள், ‘லங்கா சலுசல’ நிறுவனம் உட்பட இலங்கையில் பல நிறுவனங்களில் கணக்காளராகப் பணியாற்றி, பின்னர் (ணு)செம்பியா, சிங்கப்பூர், நைஜீரியா, இலண்டன், கனடா போன்ற நாடுகளில் தனது தொழிலைத் தொடர்ந்திருந்தார்.

கவித்துவம், கலை இரசனை என்பன மிகக் கொண்ட அமரர் சூசைதாசன் அவர்கள் வாசிப்பு பழக்கத்தை மிகையாகக் கொண்டவராகத் திகழ்ந்தார். சமயங்களில் பைபிள் மட்டுமல்லாது, சைவ சமய நூல்கள், புனித திருக்குர்ஆன் போன்றவை தொடர்பிலும் முழுமையான அறிவினைக் கொண்டிருந்தார். இலக்கியம், அரசியல், பொருளியல் என எப்போதுமே வாசித்துப் பழகிப்போன அவர், தனது வீட்டில் ஒரு நூலகத்தையே ஏற்படுத்தி வைத்திருந்தார்.

சிறந்த மேடைப் பேச்சாற்றல் கொண்டிருந்த அன்னார், 1977 காலகட்டத்தில் தனது பேச்சுத் திறமையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலராலும் அறியப்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார். அவர் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுபவராக இருந்த போதிலும், மேடகைளில் இந்து மத தேவாரங்களை மிக இரசணையோடு பாடி பலரது பாராட்டுதல்களைப் பெற்றுத் திகழந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அக்காலகட்ட வெற்றிக்கு இவரது மேடைப் பேச்சுக்களும் முக்கிய காரணமாக அமைந்திருந்தன. கட்சிக்காக தன்னை அர்ப்பணித்து பங்காற்றியிருந்த இவரை அக்கட்சி பிற்காலத்தில் கைவிட்டிருந்த நிலையானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவே இன்றும்கூட சூசைதாசன் அவர்களை நேசிக்கின்றவர்களால் கருதப்பட்டு வருகின்றது.

‘பேரைக் கேட்டால் பத்தாயிரம் வாக்கு, முகத்தைக் காட்டினால் முப்பதினாயிரம் வாக்கு” என்ற நிலையே அன்று இவருக்கு இருந்ததாகக் கூறப்படுவதுண்டு.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னார் தொகுதியில் வெற்றிபெற்ற அவர், நாடாளுமன்ற பிரவேசம் கண்டார். அக்காலகட்த்தில் நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவராகவும், நிதி தொடர்பான விடயங்களில் அரசுக்கு ஆலோசனை கூறுபவராகவும் அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் செயற்பட்டிருந்தமை அன்னாரின் திறமைக்கு சான்றாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும், முன்னாள் செனற் சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொல்துவே ஆராச்சிகே ஜினதாச நியத்தபால அவர்கள் இரத்தினபுரியில் பிறந்தவர்.

பிரபல ஊடகவியலாளரான இவர், சியரட்ட, தசதெச, யுக்கிய, சியபத, சிலோன் கார்டியன், சினமா, திரய போன்ற  பத்திரிகை மற்றும் வார வெளியீடுகளில் பணியாற்றியதுடன், பார்வை எனும் தமிழ் பத்திரிகையிலும்  ஆசிரியர் பீடத்தில் பணியாற்றி பெருமை சேர்த்தவர்.

1947ஆம் ஆண்டில் ஐக்கியத் தேசியக் கட்சியின் முதலாவது கூட்டம் பாம்கோட் மாளிகையில் டீ. எஸ். சேனாநாயக்க, சேர். ஜோன் கொத்தலாவல மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன ஆகியோரது பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருந்த வேளை அந்த முதலாவது கூட்டத்தில் தனது பங்குபற்றலையும் பதிவு செய்த பெருமை இவருக்கிருக்கிறது.

1949களில் ஐக்கியத் தேசியக் கட்சியின் இளைஞர் பிரிவின் செயலாளராக செயற்பட்டிருந்த இவர், 1960ல் கோட்டே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். 1967இல் செனற் சபை உறுப்பினராக நான்கு வருடங்கள் செயற்பட்டவர். 1973ல் ஜே. ஆர். ஜயவர்தனவின் சிபாரிசில் ஐக்கியத் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

1994களில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் கோட்டே நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டிருந்தவர். பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையினை அவர் முன்னெடுத்திருந்தார்.

அந்த வகையில் இந்த மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரிவுத் துயர் காரணமாக வேதனையடையும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், நண்பர்கள், அவர்கள் நேசித்த, அவர்களை நேசித்த மக்கள் அனைவருடனும் ஈ.பி.டி.பி. கட்சியானது தனது துயரங்களையும் பகிர்ந்து கொள்கிறன்றது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.

(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர், கௌரவ பீ. சூசைதாசன், கௌரவ பீ. ஏ. ஜினதாச நியத்தபால ஆகியோர் தொடர்பிலான அனுதாபப் பிரேரணை தொடர்பில் உரையாற்றுகையில்.

Related posts:


இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சக தமிழ் கட்சித் தல...
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவேண்டும்  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
காலஞ்சென்ற ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...