ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2019

எமது மக்களின் பெரும்பாலான வாக்குகளை கொள்ளையிட்டுள்ள தரகு அரசியல் நடத்தும் தமிழ்த் தரப்பு, அந்த வாக்குகளை இந்த அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் மீற்றர் வட்டிக்கு விட்டு, பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், எமது மக்களின் குடும்பங்கள் நுண்கடன் தொல்லைகளால் விவாகரத்து செய்கின்ற நிலையும், அதன் காரணமாக பிள்ளைகள் அனாதரவாக நிற்க வேண்டிய நிலையும் எமது மண்ணில் நடந்து கொண்டிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்; நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவசரகாலச் சட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த அரசு ஆட்சிக்கு வந்திருந்தபோது எமது மக்கள் எப்படி இருந்தார்களோ, இன்று அதைவிட மேலும் பின்தங்கிய நிலைக்கே சென்றிருக்கிறார்கள். எமது மக்களது வாக்குகளை கொள்ளையடித்த தமிழ்த் தரப்புப் பணப் பெட்டி அரசியல்வாதிகள், எமது மக்களை விட்டும் வெகுதூரம் முன்னேறிவிட்டார்கள்.

இந்த நாட்டில் எதைக் கொண்டு வந்தாலும் முதலிலிருந்து கடைசி வரை பாதிக்கப்படுபவர்களாக எமது மக்களே இருக்கிறார்கள். இந்த அவசரகாலச் சட்டமும் அப்படித்தான் எமது மக்களைப் பொறுத்த வரையில் இருக்கின்றது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 10 வருடங்கள் கழிகின்ற நிலையில், மீண்டும் அதே யுத்தகாலக் கெடுபிடிகளை எமது மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றது இன்றைய நாட்டின் நிலைமை.

இனியிங்கு வரப்போவது தேர்தல் காலம். அனல் கக்கும் அரசியல் பேச்சுகளுக்கு இங்கு பஞ்சமிருக்காது. தமிழ் வீரம் பேசிப்பேசி தமிழ் இனத்தையே சாகடித்தவர்கள் மறுபடியும் தமிழ் முழக்கமிடுவார்கள்,

தமது அரசியல் பலம் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர விடிவைப் பெற முடியாதவர்கள்.. மறுபடியும் வந்து தமிழரின் ஆணை கேட்டு முழங்குவார்கள்.

ஐந்து வருடங்கள் ஆட்சிக்கு ஒத்தூதி அரசைக் கவிழ விடாமல் தத்தமது சொந்த வாழ்வை மட்டும் வளப்படுத்தியவர்கள்,.. இனி ஆட்சியைக் கவிழ்ப்போம் எனக் கூறவும் தயங்க மாடார்கள். நாங்கள் அரசியல் பலமின்றியே சாதித்தவைகளில் ஒரு துளிகூடப் போதிய அரசியல் பலத்துடன் இருந்தும் சாதிக்க வக்கற்ற கூட்டம் ஆயிரம் முட்டையிட்ட ஆமையின் முன்னாள் ஒரு முட்டையிட்ட கோழி போல் இனியும் இவர்கள் கொக்கரிப்பார்கள்.

கூட்டத்தில் கூடி நின்று கூடிப்பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே! நாளில் மறப்பாரடி… என்பது போல் இனியும்  இவர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளையும்  காற்றோடுதான் பறக்க விடுவார்கள்.

போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள். வெடித்தெழுந்த போராட்டத்தில் உங்கள் வேட்டிகள் கூட கசங்கியதா என்று கேட்கிறேன். வெள்ளை வேட்டியும் வாத்தி வேலையும் என்று சொகுசாக இருந்த உங்கள் கைகளில் வெறும் விறகுக் கட்டைகளை மட்டுந்தானே தந்து கட்டாய ஆயுதப்பயிற்சி தந்தார்கள்.

அந்த விறகுக் கட்டைகளைக்கூட கண்டு அஞ்சி உங்களிடம் படிக்க வந்த மாணவர்களைப் போருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு ஓடித்தப்பி வந்தீர்கள். இந்த விசித்திரத்தில் கப்பல் போக்குவரத்தும் கடற்புலிகளும் என்று எதற்கு குறளி வித்தை காட்டுகிறீர்கள்?.. புலம்பெயர் தேசம் சென்றீர்கள்.  அங்கு தமிழர்களுக்கு இன்னும் ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்று கேட்டார்கள்.

அதற்கு நீங்கள் கூறிய பதில் என்ன என்று கேட்கிறேன். தமிழ் மக்கள் இன்னமும் அழிந்தது போதாது. இன்னும் எந்தளவு கூடுதல் அழிவுகள் நடக்கின்றதோ அந்தளவு விரைவாக விடுதலை கிடைக்கும் என்று கூறினீர்களா இல்லையா?..

புலிகள் இயக்கம் ஒரு கால கட்டத்தில் முன்னேறிச் சென்றபோது இலண்டனில் தங்கியிருந்த  உங்கள் தலைவர் ஒருவர் கேட்டார்… புலிகள் எல்லா இடங்களையும் பிடித்து விட்டால் நாங்கள் நின்று அரசியல் நடத்துவது எங்கே என்று கேட்டதை மறுக்கப்போகின்றீர்களா?..

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை யாருக்குப் பொருத்தம்?.. உங்களுக்கா?.. அல்லது வேறு யாருக்குமா?..

எனவே, எமது மக்கள் தொடர்பிலும் சற்றுச் சிந்திப்பதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் முன்வர வேண்டும். எமது மக்களுக்கு குரல் இல்லை என எவரும் நினைத்துவிடக் கூடாது. அரசுடன் இணைந்துள்ள தமிழ்த் தரப்பினருக்குப் பணம் முக்கியமாக இருக்கலாம். சலுகைகள் முக்கியமாக இருக்கலாம்.

ஆள நினைக்கும் தரப்பினருக்கு இந்தத் தமிழ்த் தரப்பினர் துணையாக இருக்கலாம். ஆனால், வாழ நினைக்கும் எமது மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது என்பதே எமது மக்களின் எதிர்ப்பார்ப்பு என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Related posts:

மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் -டக்ளஸ் தேவானந்தா!
இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருப்பதே எனது வெற்றியின் இரகசியம் - டக்ளஸ் எம்.ப...