பங்களாதேஷ் விமான விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
Tuesday, July 22nd, 2025
டாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 25 பேர் சிறுவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 78 பேர் டாக்காவின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை சுகாதார ஆலோசகரின் சிறப்பு உதவியாளர் பேராசிரியர் எம்.டி. சயதுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதுவரை உயிரிழந்தவர்களின் 20 உடல்கள் அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், நேற்று (திங்கட்கிழமை) உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பை பலப்படுத்த தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவன வளாகத்தில் இன்று முதல் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தலைநகரில் உள்ள குர்மிடோலாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிப் பணிக்காக நேற்று பிற்பகல் 1:06 மணிக்கு (0706 GMT) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே F-7 BGI விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கம் ஒரு நாள் துக்க தினத்தை அறிவித்தது, கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
00
Related posts:
|
|
|


