சீன கப்பலின் வருகை – நாட்டின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது அனைத்து நாடுகளுடனும் சமமான செயற்பாடு என பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!
Wednesday, October 9th, 2024
சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சகல நாடுகளுடனும் சமமான விதத்திலேயே, செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்தியாவைப் போன்றே, சீனா தொடர்பான செயற்பாடுகளையும் அரசாங்கம் கையாள்வதாக தெரிவித்த அவர், இந்த வகையிலே, சீன இராணுவப் பயிற்சிக் கப்பலொன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கப்பல் இம்மாதத்தில் நாட்டுக்கு வரவுள்ளதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நாம், எந்த நாட்டையும் சிறப்பானதாகக் கருதவில்லை. நாடு சிறியதோ பெரியதோ, அனைத்து நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளை சமமாகவே பேணுகிறோம் . எங்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது .
சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாம், இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளோம். இந்தியாவைப் போலவே சீனாவையும் கையாள்கிறோம். விகாரைகளுக்கு சோலார் பெனல்களை வழங்கும் திட்டம் சீனாவுக்குள்ளது.
இம்மாதத்தில் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளது.
இதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதனால், இலங்கையின் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இதற்கு முன்னர் அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளன.
000
Related posts:
|
|
|


