ஈரான் போர் எதிரொலி – பொருளாதாரத்தை பாதுகாக்க செலவுகளைக் குறையுங்கள் – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்து!
Saturday, May 16th, 2026ஈரானில் போர் மூன்றாவது மாதமாக நீடித்து வரும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்திய மக்கள் அனைவரும் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் பெருந்தொற்று காலத்தைப் போன்றதொரு இக்கட்டான சூழலை நாடு எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, டொலர் கையிருப்பைச் சேமிப்பதற்காக முடிந்தவரை வீட்டிலிருந்தே பணி முறையைப் பின்பற்றுதல், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைத்தல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்தியா தனது மசகு எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தையும், எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும் இறக்குமதியையே நம்பியுள்ளது.
போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், இந்தியாவின் இறக்குமதிச் செலவு பல பில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது.
டொலருக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு போர் தொடங்கியதிலிருந்து 38 பில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
டொலர் வெளியேற்றத்தைக் குறைக்க தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் விமானப் பயணக் கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 2027 மார்ச் மாதளவில் 4.6 சதவீதமாக அதிகரிக்கும் என நோமுரா நிறுவனம் கணித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து சுமார் 22 பில்லியன் டொலர்களை வெளியேற்றியுள்ளனர்.
ரூபாயின் மதிப்பு டொலருக்கு எதிராக 100 ரூபாயை நெருங்கும் அபாயம் உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“நாம் மோசமான நிலைக்குத் தயாராக வேண்டும்” எனப் பிரபல வங்கி நிபுணர் உதய கோடக் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதுவரை விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்திச் சுமையைத் தாங்கிய போதிலும், இனிவரும் காலங்களில் மக்கள் இந்த அழுத்தத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுவதாக செய்தி வெளியாகியுள்ளது
Related posts:
|
|
|


