ஆழ்ந்த தாழமுக்கம் – திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Thursday, November 28th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து வடக்காக நகர்வதாகவும் இன்றையதினத்துக்குள் அது புயலாக வலுவடையக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இன்றையதினம் 75 -150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.
அத்துடன் மட்டக்களப்பு முதல் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரை மேலெழக் கூடும்.
அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
000
Related posts:
|
|
|


