அநுர தலைமையிலான அரசாங்கத்திடம் நட்டஈடு கோரும் அதானி!
Monday, July 7th, 2025
இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான அதானிக்கு சொந்தமான நிறுவனமொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் நட்டஈடு கோரியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் ஆரம்ப கட்ட பணிகளுக்காக செலவிட்ட தொகையை மீளச் செலுத்துமாறு அதானி நிறுவனம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தால் ஒப்புதல் பெற்றிருந்த அதானி நிறுவனத்தின் 442 மில்லியன் டொலர் மதிப்பிலான காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இரத்து செய்தது.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கம் குறித்த திட்டத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் அதானி பசுமை சக்திவளத் திட்ட நிறுவனம், இலங்கை அரசிடம் நிதி இழப்புக்கான இழப்பீட்டை கோரியுள்ளது
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த மின் உற்பத்தி திட்டம், 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் தேவையில் 350 மெகாவாட் மின் சக்தியை வழங்கவிருந்தது.
ஆனால், புதிய அரசு ஒப்பந்தத்தில் உள்ள மின் விலையை மறுபரிசீலனை செய்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அதானி நிறுவனம் திட்டத்திலிருந்து வெளியேற முடிவு செய்தது.
இந்நிலையில், அதானி நிறுவனம் கடந்த மே மாதத்தில் அரசுக்கு கடிதம் எழுதி, திட்ட ஆரம்பத்துக்கான ஆய்வுகள் உள்ளிட்ட இலங்கையில் மேற்கொண்ட செயல்பாடுகளுக்காக செலவான தொகைக்கு இழப்பீடு வழங்குமாறு கோரியுள்ளது.
தற்போது வரை, முழுமையான செலவு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும், முன்னதாக பேண்தகு சக்தி வள அதிகாரசபைக்கு வழங்கப்பட்டிருந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளிட்ட செலவுகள் இதற்குள் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார மற்றும் சக்திவள அமைச்சு இதுவரை இழப்பீடு தொடர்பான முடிவை எடுக்கவில்லை. இது தொடர்பாக உரிய சட்ட ஆலோசனை பெறப்படும் என்றும், “எந்தவொரு பணப் பரிமாற்றமும் அமைச்சரவை அனுமதியுடன் மட்டுமே நடைபெறும்” என்றும் ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


