Sunday, March 7th, 2021

கிளிநொச்சி மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தீர்க்கமான பல முடிவுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக பளை பிரதேச செயலகத்தில் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு காணி தொடர்பான சர்ச்சைகளைச் செவிமடுத்த அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, உடனடியாகவே அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார்.

பச்சிலைப்பள்ளி கோவில்வயல் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்தைக் காரணம் காட்டி கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான முறைப்பாடு பொதுமக்களால் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் பேசிய அமைச்சர் டக்ளஸ், காணிகளைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்

அதேநேரம் காணி அமைச்சருடனும், வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் தொடர்பான அமைச்சர்களுடன் இதுதொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் துறைசார் அமைச்சர்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கு வந்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பார்கள் எனவும், அதுவரையில் காணிகளைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்திவைக்குமாறும் பணித்தார்.

இதுதொடர்பாக பொதுமக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும், துறைசார் அமைச்சர்களின் வருகையின் பின்னர் இந்தப் பிரச்சினைகளுக்கு இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தென்னை அபிவிருத்திச்சபையுடன் காணப்படும் காணிச் சர்ச்சைகளுக்கும் உரிய அமைச்சருடன் பேசி விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திராபுரம் பகுதி மக்களின் வீதிப் பிரச்சினை மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினருடனான காணிச் சர்ச்சைக்கும் விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதனிடையே மார்ச் 5ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை, ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் இணைந்து தலைமையேற்று நடத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தை அனுராதபுரத்துக்கு மாற்றும் செயற்பாட்டை காணி அமைச்சர் சந்திரசேனவுடன் தொலைபேசியில் உரையாடி தடுத்து நிறுத்தியிருந்ததுடன் இரணைதீவு பகுதியில் முஸ்லிம்களின் ஜனஸாக்களை நல்லடக்கம் செய்யும் முடிவையும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உரையாடி மாற்றியமைக்க முடியும் என்றும் உறுதியாக நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: