மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, September 13th, 2019


மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் நாடு முழுவதும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இந்த நிலையில் இடிமின்னல் மற்றும் கடும் காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற போதிலும் சில இடங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாவலி கங்கையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் 2 லட்சத்து 29 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 81 ஆயிரத்து 952 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வெகுவாக பாதித்துள்ளன.

வட மாகாணத்தில் 73 ஆயிரத்து 91 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 45 ஆயிரத்து 890 பேரும், கிழக்கு மாகாணத்தில் 50 ஆயிரத்து 238 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 119 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Related posts: