ஜெயலலிதாவின்  பாதுகாப்பை விலக்கியது யார்?  – தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் !

Saturday, March 11th, 2017

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எண்ணற்ற மர்மங்கள் புதைந்து கிடப்பதாக, அக்கட்சியின் முன்ணணி பிரமுகர்கள் நாள்தோறும், ஊடகங்கள் வாயிலாக, தங்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்தான், முதன் முதலில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பூதம் கிளப்பினார்.

லேட்டஸ்ட்டாக அவர் எழுப்பி இருக்கும் சந்தேகம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பூனைப் படை பாதுகாப்பு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 75 நாட்களும் அந்த பக்கம் எட்டியே பார்க்காதது ஏன் என்பது குறித்துத்தான்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரையில், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்காக பாதுகாப்பாக நின்றவர்கள், அவர் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோவுக்கு கிளபியதும், கிளம்பியவர்கள், அவர் இறந்தும் கூட எட்டிப் பார்க்கவில்லை.

ஜெயலலிதாவின் உயிருக்கு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில தீவிரவாத இயக்கத்தினர் மூலமாக, எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று மத்திய உள்துறைக்கு கிடைத்த தகவல்களுக்குப் பின்தான், மத்திய அரசு அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்துதான், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் தமிழகத்துக்கு வந்து, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கினர்.

அவர்கள் உடை, கருப்பாக இருப்பதால், அந்த படையினரை கருப்புப் பூனைப் படையினர் என அழைத்து வந்தனர். தமிழகத்தில், ஜெயலலிதாவைத் தவிர, இந்த பாதுகாப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கறுப்புப் பூனைப்படையின் பணிகள் என்னென்ன என்பது குறித்து, மத்திய அரசு வகுத்துக் கொடுத்திருக்கும் விதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை சட்டங்களை மேற்கோள்காட்டி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கறுப்புப் பூனை படை தனது பணிகளை சரிவர செய்யவில்லை என்று பி.எச்.பாண்டியன் சந்தேகம் கிளப்பிக் கூறியதாவது:

உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே, இந்த கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், 24 மணி நேரமும், குறிப்பிட்ட முக்கிய பிரமுகர் அருகில் நிழல் போல இருந்து, அவரை பாதுகாக்க வேண்டும்.

பாதுகாப்பில் உள்ள முக்கியப் பிரமுகருக்கு, அவர் வசிக்கும் இடத்திற்கு உள்ளேயும்; வெளியேயும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதால், வசிக்கும் இடத்துக்கு உள்ளேயும் வெளியேயும், இந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருப்பர்.

அந்த வகையில் பார்க்கும்போது, ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்க்க முடிவெடுத்து, ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். ஆனால், அந்தத் தகவல் கறுப்பு பூனைப் படையினருக்கு சொல்லப்பட்டிருந்தால், ஆம்புலன்சுடன், அவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக 75 நாட்களும், கூடவே இருந்து பாதுகாப்பளித்திருக்க வேண்டும்.ஆனால் செப்டம்பர் 22 முதல் இப்படையினரின் நடமாட்டம் போயஸ்கார்டனிலோ அல்லது அப்பல்லோவிலோ இல்லை.

கறுப்புப் பூனை படை இருக்க வேண்டிய இடத்தில், மன்னார்குடி கும்பலால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் செக்யூரிட்டிகள், வலம் வரச் செய்யப்பட்டனர்.

அப்படியென்றால், ஜெயலலிதா அப்பல்லோவிற்கு அழைத்து வரப்பட்டதும், கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பை விலக்கி, மத்திய அரசின் உள்துறை, ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பை, எழுத்துப்பூர்வமாக திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

ஆக, ஜெயலலிதாவுக்கு அருகில் இருந்தவர்களின் உத்தரவுபடியே, ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக வந்த கறுப்புப் பூனைப் படையினர், தங்களை பாதுகாப்புப் பணியில் இருந்து முழுவதுமாக விலக்கிக் கொண்டு, அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள, சிந்தாதிரிப்பேட்டை முகாமில் தங்கியிருந்திருக்க வேண்டும்.சட்டப்படி இப்படி செய்ய முடியுமா என்றால், முடியாது. என்று பி.எச்.பாண்டியன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

நேசனல் செக்யூரிட்டி கார்டு ஆக்ட் 1986ல் உள்ள பிரிவுகள் 15, 18 ,43 என்ன சொல்கிறது தெரியுமா?

உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகரின் பாதுகாப்பில் உள்ள படையின,ர் 24 மணி நேரமும் கண்ணை இமைகாப்பது போல, அவரைப் பாதுகாக்க வேண்டும்.

தங்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து தவறினாலோ, அல்லது வெளியில் உள்ள சட்ட விரோதமான கும்பலின் பேச்சைக் கேட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடாமல் விலகியிருந்தாலோ, அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டால், மரண தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.

அப்படிப் பார்க்கும் போது எழுத்துப்பூர்வமான உத்தரவு வராமல், ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கறுப்புப் பூனைப் படை அஜாக்கிரதையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நிச்சயம் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் வழங்கப்பட்டு வரும், இசட் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி குறித்து மத்திய உள்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

1986ல், தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கான சட்டம் உருவாக்கப்பட்ட போதிலும், இது மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட்டது 1989ல் பிரதமராக இருந்த வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சையது மகளான, தற்போதைய காஷ்மீர் முதல்வர் மெகபூபாவை. தீவிரவாதிகள் பணயக் கைதியாகக் கடத்திச் சென்றனர்.

அதன் பின்தான் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு கருதி, என்.எஸ்.ஜி., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதனால் பொது வாழ்க்கையில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல், தைரியமாக செயல்படும் வகையிலேயே, இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

அப்படித்தான், இந்த பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கும் வழங்கப்பட்டது.ஜெயலலிதா உயர் பாதுகாப்பில் இருந்த போதும், அந்த பாதுகாப்பு எதுவும் இல்லாமல், ஆம்புலன்சில் அப்பல்லோவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

அந்த ஆம்புலன்ஸ் நேராக, அப்பல்லோவுக்குத்தான் சென்றது என்று யாரும் சொல்ல முடியாது. அப்படியென்றால், ஆம்புலன்ஸ் வேறு எங்கும் சென்று விட்டு, பின், அப்பல்லோவுக்கு வந்ததா?

கறுப்புப் பூனைப் படையினர், ஆம்புலன்ஸ் பின்னாலேயே பாதுகாப்புக்கு வந்திருந்தால், இந்த சந்தேகமெல்லாம் எழுந்திருக்க வாய்ப்பில்லை.

அதுபோல போயஸ் தோட்டத்தின், அனைத்து சி.சி.டி.வி., கமராக்களும் இயங்கியிருந்தால், ஜெயலலிதா எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார் என்பது தெரிய வந்திருக்கும்.

அப்பல்லோவில் உள்ள சி.சி.டி.வி., இயங்கி இருந்தாலும், அதை கண்டறிந்து விடலாம். ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு அப்பல்லோவுக்கு வந்தது? ஆம்புலன்சில் ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தார் என்பதெல்லாம் தெரிந்திருக்கும்.

அதெல்லாம் இல்லாததுதான், கிரிமினல்களின் மூளை, பலமாக இயங்கி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆக, கறுப்புப் பூனைப் படையை, திட்டமிட்டே, அப்பல்லோவுக்கு வரமால் செய்திருக்கின்றனர்.

அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை, கறுப்பு பூனைப் படை பாதுகாப்பில் இல்லாததை பயன்படுத்தி. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும்.

உருவாக்கப்பட்ட அந்த வாய்ப்பைப் பயன்படுத்திகூட, ஜெயலலிதா உயிருக்கு, செயற்கையாக ஒரு ஆபத்தை உருவாக்கியிருக்கலாம்.இப்படியெல்லாம் பொதுமக்களிடமும் சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன.

அதையெல்லாம், தீர்க்க வேண்டிய கடமை, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. இவ்வாறு பி.எச்.பாண்டியன் கூறினார்.

இதற்கிடையில், தேசிய பாதுகாப்புப் படையின் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை வைத்து, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,(பன்னீர்செல்வம் அணி) பொறுப்பாளரும், சிவகாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஜெ.பாலகங்காதரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்விகளைக் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடித விவரம்:

1)தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, என்.எஸ்.ஜி., பாதுகாப்பு, அவர் இறந்து போகும் நிலை வரை இருந்தததா? அல்லது செப்டம்பர் 22 அன்று, இரவுடன் விலக்கிக் கொள்ளப்பட்டதா?

2)பாதுகாப்பு, அவரது மறைவு வரை தொடர்ந்தது என்றால், என்ன காரணத்தால், செப்டம்பர் 22 முதல் அவர் மறைந்த டிசம்பர் 5 வரை பாதுகாப்பு பணியில் கறுப்புப் பூனைப் படையினர் ஈடுபடவில்லை?

3) செப்டம்பர் 22 முதல் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என்றால், அதற்கு உத்தரவிட்ட அலுவலரின் பெயரும், அவரது பதவியின் பெயரும், அந்த உத்தரவின் நகலும் தேவை.

4) ஜெயலிதாவின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது உண்மையானால், அதற்கான காரணம் என்ன?இவ்வாறு அந்தக் கடிதம் மூலம் கேட்கப்பட்டுள்ளது.

இந்தக் கேள்விகளுக்கு தகுந்த பதில் கிடைத்தவுடன் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட, ஓ.பி.எஸ்., அணி முடிவு செய்துள்ளது.

கறுப்புப் பூனை படை வாபஸ் ஆனது குறித்த உண்மைத் தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் என, பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகமாக கூறி வருகின்றனர்.

Related posts: