இலங்கை அணியை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் – டோம் மூடி!

Friday, March 26th, 2021

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளராக இருக்கும் காலப் பகுதியில் இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டுவருவதே எனது நோக்கம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்திய தலைமை பயிற்சியாளருமான டோம் மூடி தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டில் அனைத்து துறைகளின் தரவரிசையிலும் இலங்கை அணியை உயர்த்த முடியும். இதன்போது தனிநபர்கள் அல்லது வீரர்கள் மீது மட்டுமல்ல, உட்கட்டமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளராக மூன்று ஆண்டுகால ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ள மூடி, நேற்றைய தினம் கொழும்பு தாஜ்ச சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற  தனது தொடக்க ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இந்த தகவல்களை வெளியிட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை கிரிக்கெட்டைப் பற்றி சிறிது மதிப்பாய்வு செய்ய வேண்டும். தலைமை பயிற்சியாளராக சர்வதேச அளவில் நான் பெற்ற பல்வேறு அனுபவங்களைத் தொடர தற்சமயம் எதிர்பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய சிறிது நேரம் எடுக்கும். ஆனால் கிரிக்கெட் நிர்வாகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நான் நன்கு தயாராக இருக்கிறேன்.

இந்த முழு செயல்முறையின் மூலமும் கட்டமைப்பை சரியாகப் பெற முடிந்தால், நாங்கள் இழந்த இடத்தை மீண்டும் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா, டொம் மூடியை இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக நியமித்ததன் மூலம், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு புகழ்பெற்ற காலத்திற்குத் திரும்பும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

மூடியுடனான எங்கள் குழு இலங்கை கிரிக்கெட்டுடன் நெருக்கமாக செயல்படுகிறது. நாம் விளையாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும், குறிப்பாக உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் கவனம் செலுத்துவோம்,

மேலும் சிக்கல்கள் இருந்தால் அதை சரியான முறையாக எவ்வாறு சீர்திருத்துவது என்பது பற்றி விவாதிப்போம். பாடசாலை கிரிக்கெட்டுக்கு வழி வகுத்தல், தற்போதைய வீரர்களின் ஒப்பந்தங்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பணியாளர்கள், அத்துடன் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அனைத்து தரப்பினரின் முன் ஒப்புதலுக்குப் பிறகு அதை செயல்படுத்த நம்புகிறோம்.

நாங்கள் முரளி (முத்தையா முரளிதரன்) மற்றும் சங்கா (குமார் சங்கக்கார) மற்றும் மஹேலா (மஹேல ஜெயவர்தன) ஆகியோருடன் பல விவாதங்களை நடத்தினோம்.

விளையாட்டின் முன்னேற்றத்திற்காக குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்திற்காக உடனடியாக தொடங்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு இதன்போது முன்னுரிமை அளித்தோம்.

முதல் பிரிவு போட்டியின் கட்டமைப்பு மற்றும் இளைஞர்களின் வளர்ச்சி போன்ற உள்ளூர் கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்வோம் என்றார்.

Related posts: