இராணுவம் பொலிஸாரை களத்தில் இறக்குவது பிரச்சினைக்குத் தீர்வைத் தராது  – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017

இன்று வட மாகாணத்தில் இளைஞர், யுவதிகளிடையே வேலை இன்மை, தொழிற் பயிற்சி இன்மை ஆகிய காரணங்களினாலேயே அமைதி இன்மையும். பதற்றமும் நிலவுகின்றது. இந்தச் சூழலை மாற்றியமைப்பதற்கு இராணுவத்தையோ பொலிஸாரையோ களத்தில் இறக்கி நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்வதானது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யுமே தவிர பிரச்சினைக்குத் தீர்வைத் தராது. அதற்கு பதிலாக அந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளையும், திறன்கள் அபிவிருத்தியையும் வழங்கி அரச மற்றும் தனியார் துறைகளில் உரிய தொழில் வாய்ப்புகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வழி வகை செய்யப்படுவதே பயனுள்ளதாக அமையும்.

கௌரவ அமைச்சர் அவர்கள் இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் கிளைகளை, மாகாண ரீதியில்  சட்ட ரீதியாக அமைப்பதற்கு, ஏற்ப இச்சட்ட மூலத்தை திருத்தி அதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஏனெனில் சட்ட ஏற்பாடு செய்யப்படாவிட்டால், மாகாண ரீதியில் கிளைகளை நிறுவுவதில் நடைமுறைச் சிக்கல்களும், தடங்கல்களும் ஏற்படக்கூடும்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அல்லது கிளிநொச்சியை கேந்திரமாகக் கொண்டு இவ் நிறுவகத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சகல பாட நெறிகளையும் தமிழ் மொழி மூலம் பயிற்சி வழங்கக் கூடியதான வசதிகளைக் கொண்ட இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் கிளையை ஏற்படுத்தி 2018 ஆம் ஆண்டிலிருந்தாவது, இவற்றை ஸ்தாபித்துத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது தவிர வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 வருடத்திற்கும் மேலாக நிலவிய யுத்தச் சூழ் நிலை காரணமாக பாடசாலைகளுக்கு சென்று தொடர்ச்சியாக கல்வி கற்க முடியாமல் போனவர்கள், கல்வியை இடை நடுவில் கைவிட்டவர்கள், முன்னை நாள் போராளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவகத்தில் பொருத்தமான தொழில் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறான பயிற்சி நெறிகளும், போதனைகளும் செய்யப்பட்டால் அவர்களும் தொழில் பெறக்கூடியதாகவும், சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடக் கூடியதாகவும் அமைவதோடு, அவர்களின் வாழ்க்கையையும் ஒளிபெறச் செய்யமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இலங்கை ஜேர்மன் தொழில்;நுட்ப பயிற்சி நிறுவகத்தைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்;;, நிறுவகத்தின் தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் குறித்துரைப்பதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: