வாள்வெட்டுக் கும்பலின் கடைசி நபர் கைதாகும் வரை வேட்டை தொடரும் – பிரதிப்பொலிஸ்மா அதிபர்!

Thursday, November 23rd, 2017

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்ற கும்பலின் கடைசி நபர் கைதாகும் வரையும் பொலிஸாருடைய சோதனை நடவடிக்கைகளும், கைதுகளும் தொடரும் என வடக்கு மாகாண மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதேஅவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலங்களில் அதிகளவு வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் பொலிஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பொலிஸ் சோதனைகளும், கைதுகளும் இடம்பெறுகின்றன. இன்று வரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். வாள்வெட்டுக் குழுவினரே எமது இலக்கு அவர்கள் தான் கைது செய்யப்படவேண்டும். விடுவிக்கப்பட்டவர்கள் விசாரணை செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவினரின் கடைசி நபர் கைதாகும் வரை பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளும், கைதுகளும் தொடரும் என்றார்.

இதே வேளை இளவாலை, காங்கேசன்துறை, அச்சுவேலி, தெல்லிப்பழை, பலாலி பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் அந்தப் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: