வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் நீளத்தைக் குறைக்க நடவடிக்கை!

Saturday, February 24th, 2018

நவீன வாகனங்களுக்காக இலக்கத் தகடுகளின் நீளத்தைக் குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் முன்பக்க இலக்கத் தகட்டுக்கு கட்டணம் அறவிடவும் அரசு தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை, போக்குவரத்து மற்றும் சிவில் வானூர்தி சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் 77 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சத்து 16 ஆயிரத்து 805 இலக்கத் தகடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு சுமார் ஒரு இலட்சம் வரையான இலக்கத் தகடுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

புதிய வாகனங்களில் முன்பக்கத்தில் சமிக்ஞை கருவியொன்று (சென்சார்) உள்ளது. வாகன இலக்கத் தகடுகளின் அளவு பெரிதாக இருப்பதால் முன்னுக்கு வரும் வாகனங்களின் தரவுகளைப் பெறும் சமிக்ஞை தொழில்நுட்பக் கருவி (சென்சார்) மறைக்கப்படுகின்றது. 520 மில்லிமீற்றர் நீளமாக உள்ள வாகன இலக்கத் தகடுகளின் நீளத்தை 280, 180, 200 மில்லிமீற்றர் என்ற அளவிற்கு குறைக்கவுள்ளோம்.

வாகனங்களின் முன்பக்க வெள்ளை நிற இலக்கத் தகடுகளுக்கு கட்டணம் அறவிடவுள்ளோம். இலங்கையில் 52 இலட்சம் குடும்பங்களுக்கு 71 இலட்சம் வாகனங்கள் உள்ளன. மோட்டார் சைக்கிள் 39 இலட்சமும், முச்சக்கர வண்டிகள் 11 இலட்சமும், சாதாரண மோட்டார் வாகனங்கள் 7 இலட்சமும் உள்ளன என்றார்.

Related posts: