மலையக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!

Wednesday, May 27th, 2020

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55 ஆவது வயதில் நேற்றையதினம் காலமானார்.

திடீர் உடல்நலக் குறைவினால் நேற்று கொழும்பு – தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி அறிந்ததை அடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தலங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மறைந்த அமைச்சர் அறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தலங்கம வைத்தியசாலையில் இருந்து நேற்றிரவு எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பூதவுடல் இன்றைய தினம் பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவருமான ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்தார்.

அவர் முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.

ஆறுமுகன் தொண்டமான் 1990 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார்.

முதற் தடவையாக 1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

அதன் பின்னரான தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

1999 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் உயிரிழந்ததையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவியை பொறுப்பேற்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சராக அவர் பதவிவகித்த நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனிடையே நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அவர் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைவதாக புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் இந்த செய்தியினை தம்மால் நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் சமூகத்தினதும் இலங்கையினதும் மதிப்புக்குரிய தலைவர். அவரது இழப்பு பேரிழப்பாகும்.

அவரது ஆத்ம சாந்திக்காகவும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பினை அவரது குடும்பத்தினர் தாங்குவதற்கான பலத்துக்காகவும் பிரார்த்திப்பதாக புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts: