பூநகரி அரசினர் பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நண்பகலுடன் மூடல் : வடக்கு மாகாணசபை மௌனம் – நோயாளர்கள் அவதி!

Tuesday, November 28th, 2017

பூநகரி அரசினர் பொது வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இல்லாத நிலையில் நண்பகலுடன் வெளிநோயாளர் பிரிவு மூடப்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருவதாக பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வைத்தியசாலைக்கு உடனடியாக நிரந்தர வைத்தியரை நியமித்து உதவுமாறு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலை நேர வெளிநோயாளர்கள் பிரிவு நடைபெறமாட்டாது என்ற அறிவித்தல் முன் வாசலில் ஒட்டப்பட்டிருப்பதால் தினம் தினம் பிற்பகல் வேளையில் வரும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் செல்வதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பெருந்தொகைப் பணத்தை செலவிட்டு செல்ல வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு காலை வேளையில் மட்டும் வேரவில் முழங்காவில் ஆகிய வைத்தியசாலைகளில் இருந்து சகோதரமொழி பேசும் இனத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் வருவதாகவும் தமது நோயை வெளிப்படுத்துவதற்கு மக்களுக்கு மொழிப்பிரச்சினை சிக்கலும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் குறைபாட்டை நீக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படாவிடின் அமைதியான போராட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை உடல் நலம் பாதிக்கப்பட்ட நவரத்தினம் முருகானந்தராசா (வயது – 59) என்பவர் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மறுநாளே வைத்தியர் வருவார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதுடன் நோயாளர் காவுவண்டியும் உடனடியாகக் கிடைக்காததால் கால தாமதமான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர் மரணமானார். அதேவேளை அத்துடன் கடந்த 3 ஆம் திகதி பள்ளிக்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த சந்திரலோகராசலிங்கம் நிர்மலா என்ற குடும்பப் பெண்ணும் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் வைத்தியர் இல்லாத காரணத்தால் கஷ்டத்துடன் கிளிநொச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோதும் மரணமானார்.

பூநகரி வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இல்லாத காரணத்தால் உடனடி சிகிச்சை மேற்கொள்ளாததால் இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக மரணவிசாரணை அதிகாரி அ.அரியரத்தினம் அறிக்கையிட்டுள்ளார்.

Related posts: