நெல் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பம் – பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையப் பணிப்பாளர் நாயகம்!
Thursday, June 21st, 2018
காலநிலை மாற்றங்களால் நாட்டில் நெல் உற்பத்தியில் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என்று பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மத்தியூவ் மோரல் அடங்கிய குழு மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் நெல் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அறுவடைக்குப் பின்னரான சேதங்களைக் குறைப்பதற்குமான நவீன தொழில்நுட்பங்களை வழங்க கமநல சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ள பணிப்பாளர் நாயகம், நெல் உற்பத்திகளின் பெறுமதி சேர் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் எதிர்நோக்க நேர்ந்த காலநிலை மாற்றங்களால் நெல் உற்பத்தி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அரச தலைவர் சுட்டிக்காட்டினார்.
அந்தச் சவால்களை எதிர்கொண்டு நெல் உற்பத்தியில் தன்னிறைவு காண்பதே தமது நோக்கம் என்றும் அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் ஏனைய வலய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்றும் அரச தலைவர் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


