நீதித்துறைத் திருத்தச் சட்டவரைவினை நிறைவேற்ற 2/3 பெரும்பான்மை தேவை உயர்நீதிமன்று !

Thursday, April 5th, 2018

நிரந்தர நீதாய மேல்நீதிமன்றை (ட்ரயல் அட் பார்) அமைப்பதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுவது அவசியம் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கி உள்ளது எனச் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றங்களை (ட்ரயல் அட் பார்) அமைப்பதற்காக அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நீதித்துறை சிறப்பு ஏற்பாடுகளின் திருத்தச் சட்டவரைவுக்கு எதிராக மகிந்த ஆதரவு கூட்டு எதிரணி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தது.

இந்தத் திருத்தச் சட்டவரைபு அரசமைப்புக்கு முரணானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்கள் புவனேக அலுவிஹார, நளின் பெரேரா ஆகிய மூன்று நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்றின் வியாக்கியானம் நாடாளுமன்றுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

அந்த மனு மீதான வியாக்கியானம் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதித்துறைச் சட்டவரைபிலுள்ள சில விடயங்கள் அரசமைப்புக்கு முரணானவை. ஆவை திருத்தப்படாவிடின் சட்டவரைவை நிறைவேற்ற நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.

Related posts: