சிறைக்குள்ளிருந்த சந்தேகநபர் மீது மோ.சைக்கிள் திருடியதாக வழக்கு – பொலிஸாரை எச்சரித்து நீதிமன்று தள்ளுபடி!

Friday, June 29th, 2018

விளக்கமறியல் சிறைக்குள்ளிருந்த சந்தேகநபர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டுக் குற்றச்சாட்டை முன்வைத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது.

யாழ் நகரில் மோ.சைக்கிள் திருட்டுப்போன சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்துச் சந்தேகநபர் ஒருவர் மீது யாழ் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் மற்றொரு திருட்டு வழக்கில் விளக்கமறியலில் உள்ளார் என்பதை நீதிமன்று கண்டறிந்தது. அவ்வாறு இருக்கையில் அவர் மோ.சைக்கிளைத் திருடினார் என யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேகநபர் மீது சோடிக்கப்பட்ட வழக்காகவே நீதிமன்று கருதுகின்றது. எனவே உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டுமென்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்குப் பரிந்துரைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர் மீது வழக்கைச் சோடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் ஒழுக்காற்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா மன்றுக்கு அறிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்று வழக்கைத்தள்ளுபடி செய்து சந்தேகநபரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.

Related posts: