இலங்கைக்கும் புயல் தாக்கம்?

Wednesday, October 18th, 2017

தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் ஏற்படும் என சென்னை வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு காரணமாக குறித்த மாநிலங்களில் மட்டுமல்லாது தமிழகத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

இதன் காரணமாக பல இடங்களிலும் மழை வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமாக இருக்கும் நிலையில் எதிர்வரும் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆந்திரா – ஒடிசா பகுதியில் நேற்று(16) காற்றுத் தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதோடு அது தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக மாற்றமடையும் என சென்னை வானிலை அவதான நிலையம் அறித்துள்ளது.

குறித்த புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி வேகமாக நகரும் இதனால் 48 மணிநேரத்திற்குள் கடும் மழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்குள் தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை ஆரம்பமாகி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் சில பகுதிகளிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என கூறப் படுகிறது.

Related posts: