விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016

எமது நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, எமது விவசாயத் துறையானது உரிய – எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்  –

இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியைப் பார்க்கும்போது விவசாயத்துறையின் பங்களிப்பானது வர வரக் குறைந்த நிலையையே அடைந்து வருவதாகத் தெரிகிறது.

எனவே, இது தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்தைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நான் இந்தச் சபையின்; அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

எமது நாட்டின் எதிர்கால விவசாயத் துறை சார்ந்த அபிவிருத்திக்கு நிலைபேறான ஒரு கொள்கை வகுக்கப்படாவிட்டால், எதிர்கால உணவு விடயத்தில் நாம் மிகவும் பாதிக்கப்படப் போகின்றோம் என்பதை அவதானத்தில் கொண்டு, அதற்கான அவசியத்தை உணர்ந்து கொண்டு, இந்த அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த வகையில் பார்க்கின்றபோது, எமது எதிர்கால விவசாயத்துறையைப் பாரம்பரிய தொழில் நுட்பங்களும், நவீன தொழில் நுட்பங்களும் ஒருசேர இணைக்கப்பட்ட ஒரு கலவைச் செயன்முறையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

எமது நாட்டில் விவசாயத்துறை தொடர்பில் ஒரு தேசியக் கொள்கை அவசியம் என்பதை இங்கு நான் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளேன். ஏனெனில், ஒரு தேசிய கொள்கை இல்லாத நிலையில், விவசாய மக்களும், நுகர்வோரும் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.

குறிப்பாக, இந்த நாட்டில் நெற் பயிர்ச் செய்கை என்பது பரவலாக நாடலாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால், குறிப்பிட்ட காலங்களில் அதிகளவிலான உற்பத்திகள் சந்தைக்கு வரும் நிலையில், தங்களது உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு விவசாய மக்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

நெல் சந்தைப்படுத்தும் சபை இந்த அறுவடைகளை கொள்வனவு செய்யும் எனக் கூறப்பட்டாலும்கூட, பல்வேறு காரணங்களால் தங்களது அறுவடைகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்த இயலாத நிலையையே விவசாய மக்கள் அடைகின்றனர்.

இவ்வாறு பெரும்பாலானவர்கள் இந்த நெற் பயிர்ச் செய்கையில், பாரியளவில் ஈடுபடுவற்;கு அத் துறை சார்ந்து அரசினால் வழங்கப்படுகின்ற சலுகைகளும் காரணமாக இருக்கலாம்.

அதே போன்றுதான் மரக்கறி வகைகளின் பயிர்ச் செய்கை தொடர்பிலும் இந்த நிலையே தொடர்கின்றது. எனவே, இந்த நிலை மாற்றப்பட வேண்டும். எந்தெந்தக் காலகட்டங்களில் என்னென்ன பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றுக்கான தேவையும், சந்தை வாய்ப்பும் இருக்கின்றதோ அது தொடர்பில் விவசாய மக்கள் உரிய வகையில் தெளிவூட்டப்பட வேண்டும். என்றும்,

மேலும், இன்றைய உலகில் கேள்விகளுக்குரிய, விலை மதிப்புமிக்க பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வுகளையும், ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே போன்று, உள்ளூர் உற்பத்திகள் சந்தைக்கு வரும் காலகட்டங்களில் அதே பொருட்கள் இறக்குமதி செய்யப்படுமானால், அவற்றின் இறக்குமதி வரிகளை அதிகரிக்க வேண்டும் என நான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன்.

அதற்கேற்ற வகையில் இறக்குமதிக்கான வரிகள் அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அவை போதுமானதாக இல்லாத காரணத்தால் எமது விவசாய மக்கள் தொடரந்தும் பாதிக்கப்படுகின்ற நிலையிலேயே இருக்கின்றனர்.

எனவே, குறிப்பாக, உருளைக் கிழங்கு, வெங்காயம், மிளகாய், திராட்சை போன்ற உற்பத்திகள் உள்@ரில் அறுவடையாகும் காலங்களில், அப் பொருட்களின் இறக்குமதி வரியை போதுமான வரையில் அதிகரிக்குமாறும், அப் பொருட்களுக்கான இறக்குமதியை நுகர்வோரின் தேவைக்கேற்ப, உள்@ர் உற்பத்திகளின் அளவைப் பொறுத்து,  மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில். எமது மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமாக விவசாயத் துறையே காணப்படுகின்றது. எனினும், மிகவும் வளமிக்க – செழிப்பான எமது மக்களின் விவசாய நிலங்கள் – அது சார்ந்த வளங்கள் பல இன்னமும் எமது மக்களின் பாவனைக்கு விடப்படாத நிலையே தொடருகின்றன.

குறிப்பாக, வலிகாமம் வடக்கு பகுதியில் எமது மக்களது வளமான விவசாய நிலங்கள் பல இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எனவே, வடக்கில் இருக்கின்ற அரச தரிசு நிலங்களை இனங்கண்டு, அவற்றில் அம் மாவட்டத்தின் சனத்தொகைக்கும், விகிதாசாரத்திற்கும் ஏற்ற வகையில், தேசிய பாதுகாப்புக்கு ஏற்ப, முப்படைகளை அமர்த்துவதற்கும், எமது மக்களின் விவசாய, கடற்றொழில் மற்றும் குடியிருப்புக் காணிகளை விரைவாக விடுவிப்பதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

யாழ் குடாநாட்டைப் பொறுத்த வரையில் புகையிலைச் செய்கை என்பது வருவாய் கூடிய ஒரு செய்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச் செய்கை காரணமாக  ஆயிரக்கணக்கான எமது மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது நாட்டில் புகையிலை உற்பத்திகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஏற்பாடுகள் காரணமாக புகையிலைச் செய்கையை மேற்கொள்ள இயலாததொரு நிலை ஏற்பட்டு விடுமோ என அந்த மக்கள் அஞ்சுகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இச் செய்கைக்கு மாற்றாக, இம் மக்களது வாழ்வாதாரத்திற்கு ஏற்ப மாற்றுப் பயிர்ச் செய்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கொண்டுவரப்பட்டுள்ள ‘விஷமற்ற உணவு உற்பத்தி” திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இயற்கை உர உற்பத்தி நிலையங்களை வடக்கில் அதிகளவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், தற்போது விவசாய மக்களுக்கென வழங்கப்படுகின்ற உர மானியத்துக்கான நிதித் தொகைகள் உரிய காலகட்டத்துக்குள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வடக்கு விவசாய மக்களிடமிருந்து எழுப்பப்படுகின்றன. இந்த விடயம் நாடளாவிய ரீதியிலும் இருந்து வருகிறது.  இவ்விடயம் தொடர்பிலும் கமத்தொழில் அமைச்சர் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன்,

வடக்கில் பல்வேறு நிறுவனங்களின் உற்பத்திகள் என பல்வேறு முகவர்களால் விற்பனை செய்யப்படுகின்ற, கிருமி நாசினிகள் மற்றும் களைநாசினிகள் என்பன உரிய பயன்களை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வடக்கு விவசாய மக்களிடமிருந்து எழுகின்றது.

குறிப்பாக, கோரை, நெற்சப்பி மொண்டி போன்ற களைகள் களைநாசினி பயன்படுத்தப்பட்ட பின்னர் மிகவும் செழிப்பாக வளர்வதாகவும், பயிர்கள் அழிந்து விடுவதாகவும், இந்த மருந்து வகைகளை விற்பனை செய்யும் முகவர்களின் அறிவுரைப்படி – அவர்களாலேயே கலந்து கொடுத்த முறையில் பயன்படுத்தியும் அதற்கான செலவினங்கள் அதிகரிக்கின்றனவே அன்றி, பயன் எதுவும் கிட்டவில்லை என்றும் இந்த விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயம் குறித்தும் உரிய, உடனடி அவதானங்களைச் செலுத்துமாறு கௌரவ அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன். அதே நேரம், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் சுமார் 1300 வரையில் காணப்படுகின்றன.

அதே போன்று கமநல சேவைகள் திணைக்களத்தில் பெரும்பாக உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் சுமார் 80 வீதம் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

குறிப்பாக, விவசாயத் துறையுடன் தொடர்பான இந்த இரண்டு திணைக்களங்களிலும் சுமார் 70 – 80 வீதமான வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், இவற்றை அந்தந்த மாவட்டங்களின் ஆளணிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும் படியும், இதன் ஊடாக இந்த மாகாணங்களின் விவசாயத் துறையை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கு வழிவகுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், வடக்கில் பல்வேறு விவசாயத் துறை சார்ந்த பாதைகள், சுமார் 1500க்கும் மேற்பட்ட சிறு விவசாயக் குளங்கள் என்பன புனரமைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன. அவற்றையும் இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் புனரமைத்துத் தருவதற்கும்,

அறுவடைக் காலங்களில் வெளி மாவட்டங்களில் இருந்தே யாழ் மாவட்ட விவசாய மக்கள் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு வர வேண்டிய நிலையில் உள்ளனர். இதன்போது பாரிய நிதியை அதன் வாடகையாகச் செலுத்த வேண்டி ஏற்படுவதால், அவர்களால் இதனைத் தாங்க இயலாத நிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே, இந்த நிலையைத் தவிர்க்கும் முகமாக கமநல சேவைகள் திணைக்களத்திற்கு அறுவடை இயந்திரங்களை வழங்குவதற்கும்,

சேதனப் பசளை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற பயிர்களை எற்றுமதி செய்யும் போது அதனை உறுதிப்படுத்துவது தொடர்பில் எமது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் முகமாக, அதனை உறுதிப்படுத்துவதற்கான இலகு முறைமை ஒன்றை ஏற்படுத்துவதற்கும்,

வடக்கில் கால நிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற பயிரழிவுகள் மற்றும் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள இயலாது போகின்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவற்றுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கும்,

வடக்கு மாகாணத்தில் போதியளவு நெற் களஞ்சிய சாலைகள், நெல் உலர்வுத் தளங்கள் மற்றும் குளிரூட்டி அறைகள் என்பவற்றை அமைப்பதற்கும்,

கைவிடப்பட்டிருக்கும் காணிகளை இனங்கண்டு, அவற்றில் பயிர்ச் செய்கையினை ஊக்குவிப்பதற்கும்,

நெற் பயிர்ச் செய்கையாளருக்குத் தற்போது வழங்கப்பட்டிருக்கும் காப்புறுதி முறைமையை ஏனைய பயிர்ச் செய்கையாளர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்,

வடக்கில் உரிய முறையில் மண் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும்,பயன்படுத்தக்கூடிய உர வகைகள், கிருமிநாசினிகள் மற்றும் களைநாசினிகள் தொடர்பில் விவசாய மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொள்வதற்கும்

கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன்.

அடுத்து, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு பற்றிய எனது கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்:-

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வடக்கைப் பொறுத்தமட்டில் தென்னைப் பயிர்ச் செய்கையானது மீண்டும் புத்துயிர் பெற்று வருவதை அறிய முடிகிறது. விN~ட மானியத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், பீடை நோய்க் கட்டுப்பாட்டு முறைகள், கடன் வசதிகள், பொருட் கண்காட்சிகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன தற்போது பயனுள்ள வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு எமது மக்கள் சார்பாக கௌரவ அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களுக்கும், வட பிராந்திய தென்னைப் பயிர்ச் செய்கை சபையினருக்கும் எனது நன்றியினை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

வடக்கில் தென்னைச் செய்கையைப் பொறுத்த மட்டில் தென்னையை நாட்டுவதிலுள்ள எமது மக்களுக்கான அக்கறை, அதனைப் பராமரித்து, வளர்த்தெடுப்பதில் அதிகம் காட்டப்படுவதில்லை என்றே தெரிய வருகிறது.

எனவே, இது தொடர்பில் வட பிராந்திய தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை அதிக அவதானமெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு ஏக்கர் காணியைத் துப்பரவு செய்து, குழாய்க் கிணறு அமைத்து, முட்கம்பி வேலி அமைத்து, அக் காணியில் தென்னை நடுவதற்கு குறைந்த பட்சம் இரண்டரை இலட்சம் ரூபா செலவாகுமெனக் கூறப்படுகின்றது.

இதைவிட மாதாந்த பராமரிப்புச் செலவு 10,000 – 15,000 ரூபா வரையில் ஆகுமென்றும், தென்னை காய்த்து பயன் தருவதற்கு கிட்டத்தட்ட ஆறு வருடங்களாகும் என்றும், ஒரு தென்னை மரம் வருடத்திற்கு சராசரியாக 90 – 93 காய்களையே தரும் என்றும் மேலும் கூறப்படுகின்றது.

குறிப்பாக, இலங்கையின் தென்னைக்குரிய சாதகமான வரைபட அமைப்பினைப் பார்க்கும்போது, தென்னைப் பயிர்ச் செய்கை நிலமானது, மண்ணின் போசனைத் தன்மை, மண்ணின் வகை மற்றும் மழை வீழ்ச்சி கிடைக்கும் தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, எஸ். 1, எஸ். 2, எஸ். 3, எஸ். 4, எஸ். 5 என வகைப் படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

ஆனால், இன்னமும் வட மாகாணத்துக்குரிய தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பிலான சாதகமான வரைபடம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்படாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உண்மை நிலைமையினை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஏனெனில், தென்னைச் செய்கைக்கு மிகவும் சாதகமான பகுதிகளான குருநாகல், புத்தளம், மாரவில போன்ற பகுதிகளின் நில அமைப்பானது, எஸ். 1, எஸ். 2 போன்ற பிரிவுகளுள் அடங்குகின்றன.

வட பகுதியானது உலர் வலயத்தில் அமையப் பெற்றிருப்பதனால், அங்கு மணற் தன்மையான அல்லது கல்லக்கலட்டி தன்மையான மண்ணே காணப்படுவதால், எஸ். 3, எஸ். 4, எஸ். 5 போன்ற பிரிவுகளுக்குள் வடக்கு மாகாண நிலம் அடங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.

அப்படி அமையும் நிலையில், வடக்கில் ஒரு தென்னை மரத்தின் வருடாந்த தென்னை உற்பத்தியானது கூடிய பட்சம் 78 ஆகவும், குறைந்த பட்சம் 31 ஆகவுமே இருக்கக்கூடும்.

எனவே, இப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோருக்கு செலவும், வரவும் சமமாக அமையுமே அன்றி ,ஆதாயம் என எதுவும் கிடைக்கப் போவதில்லை.

அந்த வகையில் இந்த விடயம் குறித்தும்,

வடக்கிலே மர முந்திரி செய்கைக்கு உகந்த நில வளம் காணப்படுவதால,; ஒரு பெருந்தோட்ட செய்கை என்ற அடிப்படையில் அதனை வடக்கில் பரந்தளவில் மேற்கொள்வது குறித்தும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு கௌரவ அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் அவதானம் செலுத்துவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

அடுத்ததாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தொடர்பான எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்:-

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வடக்கில் நீருக்கான தட்டுப்பாடுகள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், எதிர்காலத்தில் அதற்கொரு பாரிய வாய்ப்பாக மொரகஹகந்த பாரிய நீர்த் திட்டத்தை முன்னெடுத்துள்ள மகாவலி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சராக இருக்கின்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம், இந்த திட்டமானது வட மத்திய மாகாண கால்வாய் ஊடாக வடக்கு மாகாணத்தின் கனகராயன் குளத்திற்கு இணைக்கப்படுகின்ற திட்டம் தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றது என்பதை அறிய விரும்புவதுடன்,

கனகராயன் குள இயற்கை நீரோட்டமானது ஆணையிறவு கடல் நீரேரியுடன் கலந்து, வடமராச்சி கடல் நீரேரி ஊடாக தொணடமனாறு வழியாக தற்போது கடலில் கலப்பதாகவே உள்ள நிலையில,; இந்த இயற்கை நீரோட்டத்தை சாதகமாக்கி, அதனை செப்பனிட்டு, அந்த நீரை எமது மக்களது பயன்பாட்டுக்கென வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மேற்கொள்ள முடியுமா என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

அதே நேரம், எமது தேசிய திட்டமான பாரிய மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல கட்ட திட்டங்களால் மகாவலி குடியேற்ற பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படாத நிலையே காணப்படுகின்றது.

வடக்கில் மணலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திலாவது தமக்கான காணிகள் கிடைக்கும் என எமது மக்கள் எதிர்பார்த்திருந்தும், அதிலும் பாரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது.

அத்துடன் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்திருந்த நிலையில், யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களது சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, பின்னர் அம் மக்கள் மீள்குடியேறிய நிலையில் அவர்களுக்கு வேறு இடங்களில் விவசாய செய்கைக்கு உதவாத சில காணிகளே வழங்கப்பட்டுள்ளன.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள ‘பீ’ வலது கால்வாய் திட்டமானது கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு பகுதியை உள்ளடக்கும் நிலையில், அங்குள்ள காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனவே, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, தேசிய மகாவலி அபிவிருத்தித் திட்ட குடியேற்றங்களில் தமிழ், முஸ்லிம் மக்களையும் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், மல்வத்து ஓயா கீழ்ப் பகுதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வவுனியா செட்டிக்குளம் பகுதி வாழ் மக்களது குடிபரம்பல் சிதைக்கப்படாமல் அத் திட்டம் முன்னெடுக்கப்ட வேண்டும் என்றும், தற்போது காணிகள் இல்லாது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்ற வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பகுதிகளிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு இத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது காடழிப்பு மற்றும் மணல் அகழ்வுகள் போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த நிலைமை கிழக்கிலும் ஏன்? நாடாளவிய ரீதியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இது தொடர்பிலான சட்ட அமுலாக்கல்களை மேலும் இறுக்கமாக்கும்படி இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கைப் பொறுத்த வரையில், முறையற்ற மணல் விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது மணலைப் பெற்றுக் கொள்வதில் எமது மக்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதுடன், அதிக விலையேற்றங்களும் காணப்படுகின்றன. இந்த நிலையை மாற்றி இலகுவானதும், முறையானதுமான ஒரு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், தற்போது உலகில் மிகவும் அரிதான தாவர வகைகள் பலவும் அழிந்து வரும் நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது.

எமது நாடானது உலகின் உயிர்ப் பல்வகைமை கொண்ட இடங்கள் 25ல் ஒன்றாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது சிறிய நாடாக இருந்தாலும் ஆசியாவில் உயிர்ப் பல்வகைமை கொண்ட அடர்த்தியான நாடாக எமது நாடு விளங்குகின்றது எனபதில் நாம் பெருமைப்பட வேண்டும்.

எனினும், எமது நாட்டின் தாவர பல்வகைமைகளை எடுத்துக் கொண்டால், 3210 பூக்குந் தாவர வகைகளில் 27 வீதமானவை அருகி வரும் இனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

எனவே, இவ்வாறான தாவரங்களை பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை நாங்கள் மேற்கொள்வது அவசியமாகவுள்ளது. அத்துடன், காடுகள் அழிக்கப்படுவதன் மூலமாக அகற்றப்படுகின்ற மர இனங்களுகக்கு பதிலாக, அதே இன மர வகைகள் மீள நாட்டப்படாத ஒரு நிலையும் காணப்படுகின்றது.

எனவே, நாங்கள் எமது நாட்டில் மர நடுகை திட்டங்களை மேற்கொள்கின்ற போது கூடிய வகையில் அழிக்கப்படுகின்ற, அழிந்து வருகின்ற இன மரங்களை மீள நடக்கூடிய ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அதே நேரம் கடலோரப் பகுதிகளைப் பொறுத்தமட்டில், கண்டல் காடுகளையும் நாம் பேணிப் பாதுகாக்கவும், வளர்க்கவும் வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏனெனில், 76 வீதமான கண்டல் காடுகள் தற்போதைக்கு எமது நாட்டில் அழிவடைந்துள்ளதாகவே தெரிய வருகிறது.

குறிப்பாக, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது பல உயிர்களைக் காப்பாற்றியதில் இந்த கண்டல் காடுகளுக்கு அதிகமான பங்கு இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதை நான் இங்கு உணர்த்த விரும்புகின்றேன்.

இறுதியாக, நீர்ப்பாசன மற்றும் நீர் வளமூல முகாமைத்துவ அமைச்சு தொடர்பான எனது சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிள்றேன்:-

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வடக்கினைப் பொறுத்த மட்டில் பாரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் நான் தொடரந்து இந்தச் சபையில் பல முறை தெரிவித்திருக்கிறேன். இருப்பினும், இப்பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அல்லது மாகாண சபையுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில்கள் கூறப்படுகின்றனவே அன்றி, இதுவரையில் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை நான் இங்கு மிகவும் வேதனையுடன் தெரிவித்தக் கொள்கின்றேன்.

அந்த வகையில், சில நீர்த் திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய, பயனுள்ள சில திட்டங்களை நான் இங்கு முன்வைத்துள்ளேன்.

குறிப்பாக, பூநரிக் குளத் திட்டம், வன்னேரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்தத் திட்டங்களை உரிய வகையில் மேற்கொண்டால் வடக்கில் எமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு குடி நீரும், விவசாயம், கால்நடைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீரும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இவை தொடர்பில் நானிங்கு நிலையியற் கட்டளையின் கீழ் கொண்டு வந்தபோது, இவை தொடர்பில் மாகாண அரசுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா  அவர்கள் தெரிவித்திருந்தார்.

எனினும், வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் நலன் சார்ந்த எவ்விதமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடிய தகுதியில் இல்லை என்பதை வடக்கு மக்கள் மட்டுமல்லாது இந்த நாட்டிலும் ஏன் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் மக்களும் நன்கறிவார்கள்.

வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் தேவைகளை – பிரச்சினைகளைத் தீர்க்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், எமது மக்கள் பாரிய அழிவை நோக்கியே செல்ல வேண்டிய நிலைமை எற்படும் என்பதால்தான், நான் எமது மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து இந்தச் சபையிலே கொண்டு வந்து, அவற்றைப் போதியளவு தீர்ப்பதற்கு முயற்சிக்கின்றேன் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், வடக்கிலே குறிப்பாக பல விவசாயக் குளங்கள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. ஏற்கனவே பல குளங்கள் புனரமைப்புச் செய்திருந்தும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக அவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, வடக்கைப் பொறுத்த வரையில் ஐந்து மாவட்டங்களிலும் உரிய குளங்களை இனங்கண்டு, அவற்றைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன...
தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது? நாடாளுமன்றில் டக்ள...

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்...
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...