வடக்கில் காட்டு யானைகளினதும் குரங்குகளினதும் தொல்லைகள் அதிகரித்துவிட்டன. தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, September 20th, 2017

வடக்கு மாகாணத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும், குரங்குகளின் தொல்லைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன் காரணமாக, தங்களது வாழ்வாதாரமான பயிர்ச் செய்கைகளையும், தங்களது இருப்பிடங்களையும், உயிர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்றாடம் போராடி வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களையும், அவர்களது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களையும் காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக மேற்கொள்ளப் படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறியத் தர முடியுமா? என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழும்பியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் வலுவாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பௌத்த மத விவகார அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவிடம் நிலையியல் கட்டளையின் பிரகாரம் கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கு மாகாணத்தின் வவுனியா வடக்கு எல்லையோரக் கிராமங்களிலும், மன்னார் மாவட்ட எல்லையோரக் கிராமங்களிலும், முல்லைத்தீவில் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பல கிராமங்களிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களிலும் காட்டு யானைகளின் தொல்லையும்,  சாவகச்சேரி உட்பட்ட பல பகுதிகளில் குரங்குகளின் தொல்லையும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற இப் பகுதிகளில் தொழில்வாய்ப்புகள் அரிதாகவுள்ள நிலையில், இம் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்கென மேற்கொண்டு வருகின்ற பயிர்ச் செய்கைகள் தொடர்ந்தும் மேற்படி விலங்குகளால் அழிக்கப்பட்டு வருவதால், தொடர்ந்தும் இம் மக்கள் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டும் மீள்குடியேறிய காலத்திலிருந்து இதுவரையில் அவற்றின் பயன்களை அனுபவிக்க இயலாதவர்களாகவே இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மேற்படி காட்டு யானைகளின் தொல்லைகளின் உச்சகட்டமாக, கடந்த மாதம் 28ஆம் திகதி வன்னிக் காட்டுப் பகுதிக்குள் இருந்து யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதிக்குள் நுழைந்துள்ள காட்டு யாணையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன,; இருவர் படுகாயமடைந்துள்ளனர். அந்த  வகையில், மேற்படி காட்டு யானைகளின் தொல்லைகள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள்  தற்போது யாழ்ப்பாணம் வரையில் அதிகரித்துவிட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக குறிப்பாக, ஒட்டுசுட்டான் பகுதி மக்கள் தற்காலிக யானை வேலிகள் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அது 2019ஆம் ஆண்டுதான் சாத்தியமாகும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்படுவதாகவும் கூறும் இம் மக்கள,; யாணைகளிடமிருந்து பயிர்களைக் காப்பதற்கு தற்போது தற்காலிக யானை வெடிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், யானைகள் அந்த வெடிச் சத்தங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டதால் அதனால் பயனேதும் இல்லை என்றும், மாலை 4.00 மணிக்குப் பின்னர் அப்பகுதிகளில் வெளியில் நடமாடவே இயலாததொரு நிலை தோன்றியிருப்பதாகவும்  அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய பாதிப்புகள் நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் நிலையில், வடக்கில் குறிப்பாக கடந்தகால யுத்தம் உட்பட பல்வேறு அனர்த்தங்கள் காரணமாகத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற மக்கள் தொடர்பில் விN~ட அவதானங்களைச் செலுத்த வேண்டும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன்,

வடக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களையும், அவர்களது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களையும் காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறியத் தர முடியுமா? என்றும்,

மக்களது வாழ்விடங்கள் மற்றும் பயிர் நிலங்களை அண்மித்த காடுகளில் இருக்கக்கூடிய காட்டு யானைகளைப் பிடித்து, பாதுகாக்கப்படும் வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும்

இப்பகுதிகளில் தற்காலிக யானை தடுப்பு  வேலிகள் அமைப்பதெனில், அது எப்போது சாத்தியமாகும்? என்றும் கேள்விகளை முன்வைத்து எனது கேள்விகளுக்கான பதிலையும், நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றேன் என்றும் கூறினார்.

Related posts:

இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? -  நாடா...
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...