இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2017

நாட்டின் உயர் கல்வி தொடர்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற பாவத்திலிருந்து எமது கல்விக் கட்டமைப்புகளை காப்பாற்ற இயலாமலேயே போய்விடும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்ர்.

இன்றைய தினம் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உலக பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலின் பிரகாரம், இலங்கையிலுள்ள உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கின்றபோது, கொழும்பு பல்கலைக்கழகம் 156வது இடத்திலும், பேராதனைப் பல்கலைக்கழகம் 242வது இடத்திலும் இருப்பதாகத் தெரிய வருகின்றது. உலகில் அமெரிக்க பல்கலைக்கழகங்களே முதலிடத்தைப் பெற்றுள்ளதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

அந்த வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எமது பல்கலைக்கழககங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த ஜூன் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வைத்து தெரிவித்திருந்த கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காண விடயத்தில் கௌரவ உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் துணை நிற்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்தழைப்புகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

இலங்கையில் கல்வி கற்போரில் சுமார் 0.82 வீதமானவர்களே பல்கலைக்கழக அனுமதியினைப் பெறுவதாகத் தெரிய வருகின்றது. இவர்களில் மருத்துவ மற்றும் பொறியியல்த்துறைகள் சார்ந்து 0.12 வீதமானோரே அனுமதி பெறுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான உயர்தரப் பரீட்சையில் 41 வீதமானவர்கள் சித்தியடைகின்ற போதிலும், போட்டிப் பரீட்டசை மூலமாக அதிலிருந்து சுமார் 4.7 வீதமானவர்களே அனுமதி பெறுகின்றனர். அதாவது, 100 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற நிலையில், அதிலிருந்து 1 அல்லது 2 மாணவர்களை மாத்திரம் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கின்ற முறைமையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.

பல்கலைக்கழகம் செல்லக்கூடிய தகுதிகளைப் பெற்றும், அவர்களில் சொற்ப வீதத்தினரே பல்கலைக்கழகம் செல்கின்ற வாய்ப்புகளைப் பெறுகின்ற நிலைமையானது, பல்கலைக்கழக கல்வி மறுக்கப்படுகின்ற பெருந்தொiகாயனவர்களை, அவர்கள் கற்ற கல்வி முறைமைக்கும் சமூக உழைப்பிற்கும் இடையிலான தொடர்புகளற்ற வெற்று நபர்களாக சமூகத்தில் தள்ளிவிடுகின்ற நிலைமைகளையே இந்த நாட்டில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது.

எனவே உலக நாடுகளின் உதாரணங்களை எடுத்துக் கொண்டே நாமும் உயர் கல்வி தொடர்பிலான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற பாவத்திலிருந்து எமது கல்விக் கட்டமைப்புகளை காப்பாற்ற இயலாமலேயே போய்விடும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டில் தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டிருப்பதாகவே உணர்கின்றேன். குறிப்பாக, தற்போதைய நிலையில், வவுனியா வளாகத்தினை பல்கழகை;கழகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கனவே முன்வைத்திருக்கின்றேன். அதே நேரம், மலையகத்திற்கான பல்கலைக்கழகத்தின் தேவையும் பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் எமது நாட்டின் தேவைக்கேற்ப பொருத்தமான பகுதிகளில் மேலும் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படுமானால் அது எமது இளைய பரம்பரையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே வேளை, எமது நாட்டின் உயர் கல்வித்துறையைப் பொறுத்தமட்டில் தனியார்த் துறையினருக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படுகின்ற வாய்ப்புகள் வெறுமனே வியாபார நோக்கத்தினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்லாத, அரசினால் அனுமதிக்கப்படுகின்ற பொது கல்விக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டதாவே இருத்தல் வேண்டும்.

மேலும் எமது பல்கலைக்கழக கட்டமைப்பின் நிர்வாக ரீதியலான செயற்பாடுகள் எமது நாட்டின் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டியதும், வினைத்திறன் மிக்கதாக வலுப்படுத்த வேண்டியதும் கட்டாயமாகும்.

யுத்தத்திற்குப் பின்னரான எமது நாட்டில், தேசிய நல்லிணக்கம் பற்றி பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. தேசிய நல்லிணக்கத்தை எடுத்த எடுப்பில் மேல்மட்ட வாரியாக எற்படுத்திவிட முடியாது. அது எமது ஆரம்பக் கல்விக் கட்டமைப்பிலிருந்தே அத்திவாரமிடப்படல் வேண்டும். அந்தவகையில், தேசிய நல்லிணக்க உருவாக்கத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டமைப்பானதும் இன்றியமையாதது.

மொழி ரீதியாகவும், பெரும்பாலும் இன ரீதியாகவும் தனித்தனியாக ஆரம்பம் முதல் கல்வி கற்று வருகின்ற மாணவர்கள் – பெரும்பாலும், சகோதர இனங்களுடனான பரிச்சயமும் அற்ற மாணவர்கள் – பல்கலைக்கழக பிரவேசத்தின் பின்னரே சகோதர இன மற்றும் மொழிகளில் பரிச்சயமுள்ள மாணவர்களுடன் இணைந்து சொற்ப காலம் வாழ வேண்டிய வாய்ப்பினைப் பெறுகின்றனர். இத்தகைய நிலையில், அந்த மாணவர்களிடையே நட்பு ரீதியிலான – பரஸ்பரம் உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ள இயலுமான சூழலை ஏற்படுத்துவதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அவ்வாறின்றி, பரஸ்பரம் சந்தேகங்களையும், குரோதங்களையும், பகைமையினையும் வளர்த்துக் கொள்ளத்தக்க சூழலுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது.

அதே நேரம், தேசிய நல்லிணக்கம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுகின்ற அரச தரப்பிலிருந்தும் பல்துறைகள் சார்ந்தும் அவதானித்து, செயற்படுத்தக்கூடிய அடிப்படை அம்சங்கள் பலவுண்டு. இந்த கட்டமைப்புகளை வலுவுள்ளதாக உருவாக்காமல், தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசுவது சாத்தியமற்ற நிலைப்பாடாகவே அமையும் என்பதை உறுதியிட்டுக் கூற முடியும்.

அந்த வகையில், பல்கலைக்கழக மட்டத்தில் இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சில விடயங்களை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டின் முதலாவது பல்கலைக்கழகமான கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதுகால வரையிலும் தமிழ்த்துறை  ஒன்று இல்லாத நிலையே காணப்படுகின்றது. தமிழ்த்துறை ஏன், தமிழ் பாடத்திற்கான விரிவுரையாளர்கூட இல்லாத நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக தமிழ் மொழி மூலமாக சமூகவியல் கற்றும் அதில் சிறப்பு கலையில் பட்டம் பெற இயலாத நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இவ்வியடம் தொடர்பில் விஸ்வா வர்ணபால அவர்கள் உயர் கல்வி அமைச்சராக இருந்தபோது நான் அவரது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். எனது கோரிக்கை அப்போது ஏற்கப்பட்டும் இதுவரையில் செயல்வடிவம் கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. மேற்படி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலமாக புவியியல், பொருளியல், வரலாறு, சமூகவியல், அரச அறிவியல் போன்ற கற்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையிலேயே இந்த நிலையும் காணப்படுவது தேசிய நல்லிணக்கத்திற்கு மாத்திரமல்ல தேசிய கௌரவத்திற்கே பாதிப்பாக இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

அதேபோன்று, இலங்கை அழகியல் கட்புல பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு கண்டிய நடணம், சப்பிரகமுவ நடணம், தென்பகுதி நடணம் போன்றவற்றுக்கான துறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியத்திற்கென ஒரு துறை இல்லாத நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று, பரதநாட்டியத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சகோதர சிங்கள மக்களும் அக்கறை காட்டுகின்ற நிலையில் பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசை தொடர்பிலான துறைகளையும் இங்கு ஏற்படுத்துவதன் மூலமாக அத்துறைகளில் அக்கறை கொண்டுள்ளவர்களால் அதனைக் கற்க முடியும்.

மேலும், யாழ் பல்கலைக்கழகத்தில் ராமநாதன் நுண்கலை அக்கடமி என்பது இன்னமும் வெறும் பெயரளவிலேயே இருந்து வருகின்றதே அன்றி, அது உத்தியோகப்பூர்வ நிறுவனமாக இல்லை. எனவே, இது தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

எமது நாட்டில் இரண்டாவது பெரும்பான்மை சமயமான இந்து சமயத்திற்கென இந்து கற்கைகள் பீடமொன்று எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இல்லை. ஏனைய சமயங்களுக்கு அந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, யாழ் பல்கலைக்கழகத்தில் அல்லது, ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இந்து சமய பீடமொன்றை ஏற்படுத்துவதற்கு கௌரவ அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், யாழ் பல்கலைக்கழகத்தில் 06 வருட கற்கை நெறியாக விளங்குகின்ற சித்த மருத்துவ கற்கை நெறி தொடர்பில் எவ்விதமான நிறுவன ரீதியலான அந்தஸ்தும் இன்றியே காணப்படுகின்றது. இதற்கென ஒரு துறையோ, பீடமோ, நிறுவனமோ இல்லை. 1983ஆம் ஆண்டிலிருந்தே இந்த நிலை தொடர்கின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, விரைவான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

நெடுஞ்சாலைகள் அமைச்சைப் பொறுத்தவரையில் எமது பகுதிகள் சார்ந்து சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன்.

அந்தவகையில், வழுக்கியாறு பாலம் முதற்கொண்டு அராலி ஊடான குறிக்காட்டுவான் பாதை புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டியத் தேவை அவசியமாகின்றது. தென் பகுதியிலிருந்து நாளாந்தம் பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் நயினாதீவு நோக்கி வருவதாலும், வலிகாமத்திற்கும் தீவகப் பகுதிகளுக்குமான இலகுவான மார்க்கமாக இருப்பதாலும் இப்பாதையின் தேவை மிக முக்கியமானதாகவே உள்ளது.

தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் மிகவும் வினைத்திறனற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இதற்கு ஆளணிகள் இன்மையும் ஒரு பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது. எனவே, படகு செலுத்துநர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பதவி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்யுள்ளது.

வேலணை – ஊர்காவற்துறை பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது.

இன்றைய நிலையில் கட்டுமாணத் தொழில்நுட்பங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், குறிக்காட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்து முடியும்.

தற்போதைய நிலையில் ஏ – 9 வீதியில் மிகவும் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் மற்றும் அதிகளவிலான வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், வடமராட்சிக்கான இயக்கச்சி ஊடான மருதங்கேணி பாதை, முறுகண்டி முதல் பரந்தன் சந்தி வரையிலான பாதை, மிருசுவில் – வரணி பாதை, சாவகச்சேரி முதல் அல்லாறை ஊடான ஆனையிறவு பாதை போன்ற சமாந்தர பாதைகள் தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

கிராமிய வீதிகளை பிரதான வீதிகளுடன் இணைக்கின்ற ஐ சுழயன திட்டத்தினை விரைவு படுத்த வேண்டும்.

வட்டுவாக்கல் பாலம் புனரமைப்பு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் சங்கானை ஊடான மானிப்பாய் வீதி புனரமைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் மேற்படி எனது கோரிக்கைகளை கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தில் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சிகள் அமைச்சு தொடர்பில் ஒரு சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

தற்போது வடக்கு மாகாணத்தில் தொழில் இல்லாத பிரச்சினை என்பது எமது இளைஞர், யுவதிகளை பெரிதும் வாட்டி வதைக்கின்ற பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. உயர்கல்வி கற்றும் பல்கலைக்கழகம் செல்ல இயலாதவர்கள், உயர் தரம் வரையில் கல்வி கற்க முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டோர், இடைநடுவில் கல்வியைக் கைவிட்டோர் என பல ஆயிரக் கணக்கானவர்கள் தொழில்வாய்ப்புகளுக்காகப் போராடி வருகின்ற நிலை வடக்கில் தொடர்ந்து இருந்து வருகின்றது. இத்தகையதொரு நிலை காரணமாக எமது இளைஞர்கள், சமூகத்தில் வழிமாறிச் செல்லக்கூடிய நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

அந்தவகையில் மேற்படி இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளுக்கான பயிற்சி என்பது அத்தியவசியமாகத் தேவைப்படுகின்றது. அதற்கு வசதியாக தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு தொழிற் பயிற்சிக் கல்லூரி செயற்பட்டு வருகின்ற நிலையில், அது எமது விண்ணப்பதாரிகளை போதியளவில் இணைத்துக் கொள்வதற்கு போதுமானதாக இல்லை என்றே தெரிய வருகின்றது.

இத்தகையதொரு நிலையில் மீசாலைப் பகுதியில் மேலுமொரு தொழிற் பயிற்சி நிலையத்திற்கான காணி ஒதுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனக் கூறப்பட்ட நிலையில் அது தொடர்பில் இதுவரையில் சாதகமான ஏற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்கள் உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பக் கல்லாரி ஒன்று இல்லாத குறை காணப்படுகின்றது. அந்தவகையில் மன்னார் மாவட்டத்திற்கென தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்று அமைக்கப்படுமானால் அது வரவேற்கத்தக்க ஏற்பாடாக அமையும் என்பதையும் தெவித்துக் கொள்வதுடன்,

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் செயற்பட்டு வருகின்ற தொழிற் பயிற்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழி மூலமான விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தி, மேற்படி மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மாத்திரம் கொண்ட இளைஞர், யுவதிகளுக்கும் பயன்பெறத்தக்க வகையிலான ஏற்பாடுகளையும் வலுவுள்ளதாக மேற்கொள் நடவடிக்கை எடுக்குமாறும், அதே நேரம் மேற்படி தொழிற் பயிற்சி நிறுவனங்களின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற தொழிற் பயற்சி நெறிகள் தொடர்பில் போதுமான விழிப்பூட்டல்களை எமது இளைஞர், யுவதிகளிடையே ஏற்படுத்துவதற்கும் மேலும் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,

அதே நேரம் இரத்மலானை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ் மொழி மூலமான வாயுசீராக்கலும் குளிரூட்டியும் கற்கை நெறிக்கென நியமனம் பெற்றிருந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும், இதனால் இப்பாட நெறி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகின்றது. இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, இப்பாட நெறியினை மீள செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Related posts:

கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமம் காப்பாற்றப்படுமா? டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வ...
வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாட...

தென் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் வடபகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டனவா?
அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற...