வடக்கு கிழக்கில் கல்வி வீழ்ச்சியடைந்ததற்கு மாகாண அமைச்சர்களின் வினைத்திறன் இன்மையும் காரணமாகும்.

Thursday, November 23rd, 2017

எமது நாட்டில், எமது நாட்டுக்குப் பொருத்தமானதும், நவீன யுகத்திற்கு ஏற்ற – தொழில் துறைகள் நோக்கியதான கல்விக் கொள்கை நிலை இன்னும் முழுமைப்படுத்தப்படாத ஒரு நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கின்ற கல்வி முறைமையிலும் தமிழ் மொழி மூலமான கல்வியைக் கற்கின்ற மாணவர்கள், அரச பாடசாலைகளில் முகங்கொடுத்து வருகின்ற பின்னடைவுகள், புறக்கணிப்புகள் பற்றி பேசவேண்டிய துரதிர்ஸ்டவசமான நிலையிலேயே நாங்கள் இன்னும் இருந்து வருகின்றோம்.

வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் கல்வியில் வீழ்ச்சி!
கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் கல்வியில் வீழ்ச்சி!
மலையகப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் கல்வியில் வீழ்ச்சி!

களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட ஏனைய தென் பகுதிகளை எடுத்துக் கொண்டால், தமிழ் கல்வி நிலையில் வீழ்ச்சி! இறுதியில் கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால், தமிழ் கல்விப் பகுதியே புறக்கணிப்பு!

இத்தகையதொரு நிலையில், நாங்கள் கதறி, கதறியாவது இந்த நாட்டில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கும் தரமான கல்வி வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்பதற்காகவும், இடைவிலகினாலும், அல்லது உயர் தரம் வரைச் சென்று பல்கலைக்கழக வாய்ப்புகள் இல்லாது போனாலும், அதுவரையில் தாம் கற்ற கல்விக்கேற்ற ஒரு தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய ஒரு கல்வி முறைமை உருவாக்கப்பட்டு அதன் மூலமாக இந்த நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும் முயற்சித்து வருகின்றோம்.

22 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது பொதுவான விதியாக இருக்கின்றது. இந்த விதி சில சிங்கள மொழி மூலமான பாடசாலைகளிலும் இல்லை, பல தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் – சிலவேளை அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளிலும் இல்லை என்றே கூறவேண்டியிருக்கின்றது.

நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலமானப் பாடசாலைகள் பலவற்றில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்பப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. இத்துறைகள் சார்ந்து ஆசிரியர்களை உருவாக்கும் அளவுக்கு எமது கல்வித் திட்டங்கள் இல்லை!

வடக்கு மகாணத்தில் பலாலி ஆசியர் பயிற்சிக் கலாசாலையானது, இந்த நாட்டிலே பல பொறியியலாளர்களை, விஞ்ஞானிகளை, பேராசிரியர்களை, மருத்துவர்களை, கணக்காளர்களை உருவாக்குவதற்கான பங்களிப்பு பெருமை கொண்டது. இன்று அது எவ்விதமான பயனையும் பெறாத வகையில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இத்தகைய நிலைமைகள் எமது நாட்டின் துரதிர்ஸ்டத்திற்காக வலியவே வரவழைத்துக் கொள்கின்ற ஏற்பாடுகளாகவே இருக்கின்ற தேசிய அநியாயங்களாகும்.

கிழக்கு மகாணத்தில் 30 தேசியப் பாடசாலைகளில் 28 தேசிய பாடசாலைகளில் தற்காலிக அதிபர்களே கடமையில் இருக்கின்றனர். இது தொடர்பில் நான் இந்த சபையிலே குறிப்பிட்டிருந்தேன். அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும், அரச சேவைகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுவரையில் நடந்தது எதுவுமே இல்லை.

இன்று எமது நாட்டில் கல்விச் செயற்பாடுகள தொடர்பில் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு இடையூறுகள் காரணமாக, எமது மாணவர்களுக்கு சென்றடையக்கூடியதான தற்போதைய கல்வி முறைமையின் வாய்ப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன.
அரசியல் தலையீடுகள்

ஆசிரியர் தெரிவு முறையில் முரண்பாடுகள்.

ஊழல், மோசடி, வீண்விரயங்கள், துஷ்பிரயோகங்கள். கற்பித்தல் முறையில் நவீனத்துவத்திற்கான வாய்ப்புகளின்மை. பரீட்சைகளை மையப்படுத்திய கல்விக் கொள்கை.

ஆன்மீகம், பண்பாடு, வரலாறு போன்றவை கல்வி முறைமையில் புறக்கணிக்கப்படுகின்றமை அல்லது திரிபுபடுத்தப்படுகின்றமை.

போன்ற காரணிகள் பொதுவாகவே எமது மாணவர்களுக்குரிய கல்;விக்கான வாய்ப்பினை ஒழுங்குறப் போய்ச் சேராததற்கான காரணிகளாகக் கூறப்படும் நிலையில், எமது நாட்டினது சமூக மட்டத்தில்,

வறுமை காரணமாக மாணவப் பருவத்தினர் உழைப்பில் ஈடுபடுகின்ற பொருளாதார நிலைமை

வளரா சமூக ஒடுக்கு முறைகள் மற்றும் இன ரீதியலான புறக்கணிப்புகள் காரணமாக கல்விக்கான போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றமை.

பண்பாட்டு, கலாசார அடிப்படையில் தவறான பார்வைகள், கோளாறுகள் காரணமாக கல்வியைத் தொடர இயலாமல் இடைநடுவில் விலகல்.

போன்ற காரணிகளும்,

தவறான கல்விக் கொள்கை காரணமாக கல்வியைத் தொடர இயலாமை மற்றும் உயர் கல்வி மறுக்கப்படும் நிலைமை எனக் காரணிகள் தொடருகின்றன.
இத்தகைய தடைகள் இனங்காணப்பட்டு, அவை தகர்த்து எறியப்படும் வரையில் எமது கல்வித் திட்டமானது எமது மாணவர்களுக்கு ஒழுங்கான பயனைத் தர மாட்டாது என்ற கருத்தே எமது சமுதாய மட்டத்தில் நிலவி வருகின்றது.

இத்தகைய தவறுகள், புறக்கணிப்புகள், கண்டுகொள்ளாத நிலைமை எங்கிருந்து, எப்படி ஆரம்பிக்கின்றது? என்பதை ஆராய்கின்றபோது, எமது நாட்டில் தமிழ் மக்களது கல்வி தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து கல்வியியல் வளவாளர்கள் தெரிவிக்கின்ற சில கருத்துக்களை இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்.

எமது நாட்டில் 3000 தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் உள்ள நிலையில், தமிழ் மொழி மூலமாக முஸ்லிம் மாணவர்கள் உட்பட சுமார் 10 இலட்சம் பேர் கல்வி கற்று வருகின்றனர். தமிழ் மொழி மூலமாக சுமார் 70 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வி அமைச்சின் பிரதான கடமைகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் மேற்படி பாடசாலைகளுடனும், மாணவர்களுடன் தொடர்புடையவையாகும். குறிப்பாக, கல்வி தொடர்பான நியமனங்களையும், தராதரங்களையும் உருவாக்குதல், ஒருமைப்பாடான கல்வித் தராதரங்களை ஏற்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் – மேம்படுத்தல், 350 தேசிய பாடசாலைகளை நிர்வகித்தல் போன்ற விடயங்கள்.

இந்த நிலையில், மேற்படி அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சில் போதிய தமிழ் அதிகாரிகள் இல்லை என்றே தெரிய வருகின்றது.

கல்வித் தராதரங்களைப் பேணுகின்ற பொறுப்பு மத்திய கல்வி அமைச்சுக்கு உரியது. இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பாட வகைப்படியான மத்திய அதிகார பீடங்களில், மேற்படி 3000 தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் இடம்பெறுகின்ற கல்விச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு தேவையான தகுதிவாய்ந்த தமிழ் அதிகாரிகள் இல்லை என்றே தெரிய வருகின்றது.

கல்வி அமைச்சில் சுமார் 60க்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கின்ற நிலையில், ஆரம்பக் கல்விப் பிரிவு, தமிழ் மொழிப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவு, கல்வியல் கல்லூரிப் பிரிவு, தமிழ் மொழிப் பாட விரிவுப் பிரிவு, தோட்டப் பாடசாலைப் பிரிவு போன்;ற 05 பிரிவுகளில் மாத்திரமே தமிழ் மொழி மூல அதிகாரிகள் இருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.

கல்வி அமைச்சில் 03 முஸ்லிம்களும், 01 தமிழருமே கல்விப் பணிப்பாளர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

விஞ்ஞானம், கணிதம், சுகாதாரம், புவியியல், வலராறு போன்ற பாடங்களுக்கென தமிழ் அதிகாரிகள் எவரும் இல்லை எனக் கூறப்படுகின்றது. குறைந்தபட்சமாக, இவற்றுக்கென தமிழ் பிரதிப் பணிப்பாளர்களாவது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கள மொழி மூல அதிகாரிகளுக்கு தமிழ் மொழி மூலமான பரிச்சயமே அற்ற நிலை காணப்படுகின்றது. இத்தகைய நிலையில், இவர்களால் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் மேற்படி பாடங்களின் மேம்பாடு தொடர்பில் கண்காணிக்க முடியுமா? இவர்களால் வழங்கப்படக்கூடிய வழிகாட்டல்கள் எத்தகையது? நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மேற்படிப் பிரிவுகளுக்கு தமிழ் அதிகாரிகள் இல்லாத நிலையில், இப் பிரிவுகளால் எவ்விதமான பயன்களும் இல்லை என்ற நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கென மத்திய அரசினால் செலுத்தப்பட வேண்டிய அக்கறை செலுத்தப்படுவதில்லை. அலட்சியப் போக்கே கடைப்பிடிக்கப்படுகின்றது என்ற வாதம் சரியானதென்றே தோன்றுகின்றது.

எனவே, உரிய தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு ஏற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தராதரத்திற்கு நேர்ந்துள்ள பாதிப்பை ஈடு செய்ய முடியாது. கல்வி அமைச்சினால் சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் கண்காணிக்கப்படுகின்ற வகையிலான கண்காணிப்புகளே தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் தேவை என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.
‘தமிழ் மொழிப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவு’ என்பது 3000 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் முக்கிய, மேற்பார்வை அலகாக இருக்கின்றபோது, இப்பிரிவில், ஒரு தமிழ் மொழி மூல கல்விப் பணிப்பாளரும், பல சிங்கள மொழி மூலமான அபிவிருத்தி அலுவலர்களும் பணியாற்றுகின்ற நிலை எந்த வகையில் நியாயமாகும்? எனவே, இந்நிலை உடனடியாக மாற்றப்பட்டு, மேற்படிப் பிரிவின் கடமைக்கேற்ப அது அமைய வேண்டும்.

அதே போன்று, ‘தேசிய மொழிகள் மற்றும் மானிடவியல்’ கிளைக்குள் தமிழ் மொழிப் பாட விரிவு உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி பாடப் பிரிவின் முழுமையான மேற்பார்வைப் பணிகள் சிங்கள மொழி மூலமான அதிகாரியின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது.

பாடசாலைக் கல்வியின் தர விருத்தி என்பது கல்வி அமைச்சின் ஒரு முக்கியப் பணியாக இருக்கும் நிலையில், ஒரு மேலதிகச் செயலாளரின் கீழ் இதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரிவின் கீழுள்ள 17 கிளைகளில் இரு தமிழ் மொழி மூல அதிகாரிகளே பணியில் உள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

அதேபோன்று, மேலதிகச் செயலாளர் ஒருவரின் கீழ் செயற்பட்டு வருகின்ற கல்வி அமைச்சின் மேலுமொரு முக்கியப் பணியான ‘கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை’ தொடர்பில் 11 பிரிவுகள் காணப்படுகின்ற நிலையில், இவற்றில் இருப்பது ஒரேயொரு தமிழ் மொழி மூல அதிகாரி எனத் தெரியவருகின்றது.

அதேபோன்று, மேலதிகச் செயலாளர் ஒருவரின் கீழ் செயற்பட்டு வருகின்ற 4 கிளைகளுடைய ‘கல்விச் சேவைகள் மற்றும் தாபனப் பிரிவில்’ எந்தவொரு தமிழ் மொழி மூல அதிகாரியும் இல்லை என்றே தெரிய வருகின்றது.

மூன்று கிளைகளைக் கொண்ட ‘வழங்கல் மற்றும் நிர்மாணப் பிரிவில்’ ஒரு தமிழ் மொழி அதிகாரியும், 13 கிளைகளைக் கொண்ட ‘பாடசாலை செயற்பாட்டுப் பிரிவில்’ 7 தமிழ் மொழி மூல அதிகாரிகளுமே இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நாட்டில் அரசகரும மொழிகளாக சிங்களமும், தமிழும் இருக்கின்ற நிலையில், கல்வி அமைச்சின் அனைத்து கடிதங்களும் சிங்கள மொழி மூலமாக மட்டுமே கிளைகளுக்கும், பாடசாலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பாடசாலை அதிபர்களுக்கான கூட்டங்கள்கூட சிங்கள மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. கல்வி அமைச்சின் தீர்மானங்களை மேற்கொள்கின்ற நடவடிக்கைளின்போது, சிங்கள மொழி மூலமான பணிப்பாளர்களுடன் மட்டுமே கலந்துரையாடப்படுவதாகக் கூறப்படுகின்றது.

எனவே, இத்தகையதொரு நிலை கல்வி அமைச்சில் நிலவுகின்றபோது, தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரம் பற்றி புதிதாக ஒன்றுமே கூறுவதற்கில்லை என்றே தோன்றுகின்றது.

இந்த அரசு ஆட்சிபீடமேறியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்திற்குப் பின்னர், கல்வித் துறைக்கென தமிழ் மொழி மூலமான பரிச்சயம் கொண்ட ஒருவர் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டமையானது, தமிழ் மொழி மூலமான கல்விச் செயற்பாடுகளை தரமுள்ளதாக மேம்;படுத்தும் நோக்கில் என்றே நான் நம்புகின்றேன்.

இத்தகைய சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கப்பெற்றும், கல்வி இராஜாங்க அமைச்சராக ஒரு சிறந்த மனிதர் நியமிக்கப்பட்டும், கல்வி அமைச்சராக நன்கு புரிந்துணர்வுகளைக் கொண்ட ஒருவர் இருந்தும், தேசிய நல்லிணகக்கம் நாடிச் செல்கின்ற ஓர் அரசு இருந்தும், தேசிய நல்லிணக்கம் தொடர்பில் நேர்மையான அக்கறை கொண்டுள்ள ஜனாதிபதி – பிரதமர் இருந்தும், தமிழர் கல்வி தொடர்பில் மேற்படி நிலைமைகள் கல்வி அமைச்சு மட்டத்தில் மாற்றப்பட்டு, உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால், இந்த நாட்டில் இனி ஒருபோதும் இதனை மேற்கொள்ள முடியாது எனபதை நானிங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேற்படி கல்வி அமைச்சில் காணப்படுகின்ற நிலைமைகள் சீர் செய்யப்பட்டால், இந்த நாட்டில் தமிழர் கல்விச் சார்ந்த பிரச்சினைகளில் போதியளவு தீர்க்கப்படும் என்றே நான் நம்புகின்றேன்.

அதே நேரம், மாகாண சபைகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வியின் தர வீழ்ச்சிக்கு மாகாண கல்வி அமைச்சுக்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் தொடர்ந்தும் காரணமாக இருந்து வருகின்றன. தலைவலிக்கு தலையணையை மாற்றுவதுபோல் கல்வி அமைச்சர்களை மாற்றினாலும், கல்வி நிலையில் ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்ததாக இல்லை. வீணான சர்ச்சைகளை ஏற்படுத்தி அதன் ஊடாக விளம்பரங்களை தேடிக் கொள்ள மேற்கொள்கின்ற முயற்சிகளை கல்வித் துறையில் முன்னெடுத்தால், அது எமது சமூகத்திற்கு பயனுள்ளதாகவே அமையும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், தமிழ் மூலப் பாடசாலை நூல்களில் எமது வரலாறு தொடர்பிலும், இந்து சமயம் தொடர்பிலும் காணப்படுகின்ற சிக்கல் நிலைமைகள் தொடர்பில் ஏற்கனவே நான் பல தடவைகள் கல்வி அமைச்சர் அவர்களது அவதானத்தி;ற்குக் கொண்டு வந்திருந்த நிலையில், பல கலந்துரையாடல்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களது தலைமையில் இடம்பெற்றுள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவர்களினதும், பிரதமர் அவர்களினதும் அவதானங்களுக்கும் கொண்டு வந்திருந்தேன். அவர்களும் எனது கோரிக்கைக்கு அமைவாக சாதகமான நிலைமையினையே ஏற்படுத்தித் தந்துள்ளார்கள். அந்த வகையில் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், கடந்த பல வருட கால பாரிய முயற்சியாக இருந்து வருகின்ற வத்தளை தமிழ் பாடசாiலை மீள உருவாக்கம் தொடர்பிலான ஏற்பாடுகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன? என்பதை வினவ விரும்புகின்றேன். கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டும், இன்னும் இவ்விடயம் தொடர்பில் எதுவிதமான முன்னேற்ற ஏற்பாடுகளும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

அதேபோன்று அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயம் தொடர்பிலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேற்படி வித்தியாலயத்தினை தமிழ் மொழி மூலமான கல்விக்கானதாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

மேலும், ஆசிரியர்கள் எந்த மாதத்தில், எந்தத் திகதியில் பிறந்தவர்களானாலும், அவர்கள் ஓய்வு பெறுகின்ற தினத்தையும், அதே நேரம் இடமாற்றங்கள் பெறுகின்ற தினத்தையும் கல்வி ஆண்டுகளில் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியில் இடம்பெறுமாறு அமைக்க வேண்டும் என்றொரு கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

பரீட்சைகள் திணைக்களத்தினை நம்பி இந்த நாட்டில் பல இலட்சம் மாணவர்கள் இருக்கின்ற நிலையில,; மேற்படித் திணைக்களமானது தற்போது செயற்திறனற்ற நிலையில் இருந்து வருவதாகத் தெரிய வருகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் அவசியமானதும், அவசரமானதுமான தகுதியான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

நாடளாவிய ரீதியில் தற்போது தமிழ் மொழி மூலமான முக்கிய சில பாடங்களுக்கான ஆசிரிய வளப் பற்றாக்குறை காணப்படுவதால், அத்தகைய – குறிப்பாக ஆங்கில, விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப துறைகள் சார்ந்த ஆசிரியர்கள் ஓய்வு நிலை காலம் தொடர்பில் பரிசீலிக்க முடியுமென எண்ணுகின்றேன்.

மேலும், எமது நாட்டிலுள்ள உயர் தர பாடசாலைகளில் சிலவற்றிலாவது நுண்கலைப் பிரிவுகளையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தெணியாய மாவட்டத்தில் கொட்டகல பிரதேச செயலாளர் பிரிவில் 6 தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அதில் ஒரு பாடசாலையையாவது 1 யுடீ தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், இந்திய அரசின் உதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் உருவாக்க உத்தேசித்துள்ள மும்மொழிப் பாடசாலையை அனைத்து சமூக மாணவர்களும் இலகுவாகப் பயன்பெறும் வகையில் கதுறுவெல, மன்னம்பிட்டிய, வெலிக்கந்தை போன்ற பொலன்னறுவை மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலுள்ள ஏதாவது ஒரு இடத்தில் நிர்மாணிப்பது சாலச் சிறந்தது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்;கின்றேன்.

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்டங்களில் பட்டதாரிகள் இல்லாத நிலையில், வடக்கு – கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை 5 வருட நிபந்தனை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், இவ்விடயம் தொடர்பிலும் ஆராயுமாறு கௌரவ கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், பட்டப்பின் கல்வியல் டிப்ளோமா பெறுவதற்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் போராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலமான கற்கை வசதிகளையும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வியற்துறையையும், ரூகுனு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி மூலமான கற்கை வசதியினையும் உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொள்வதற்கு கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அது பயனுள்ளதாகவே அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சர்வதேச தரத்திற்கேற்ப பல மில்லியன் ரூபா செலவில் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, 2 வருடங்களில் பூர்த்தியாகுமெனக் கூறப்பட்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் பணிகள் யாவும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நிலையினையே காணக்கூடியதாக இருக்கின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 27ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தபோது, மேற்படி மைதானத்தினைப் பார்வையிட்டிருந்தார். இந்த மைதானப் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்பட்டு, 2016ஆம் அண்டு தேசிய விளையாட்டு நிகழ்வுகள் இதே மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். பின்னர் அது சாத்தியமாகாத நிலையில், நான் இந்தச் சபையின் ஊடாக மேற்படி விடயம் தொடர்பில் அவரது அவதானத்திற்குக் கொண்டு வந்தபோது, விரைவில் பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்படுமென்றே கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மேற்படி மைதானம் தொடர்பான அமைச்சரின் நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி கேட்க விரும்புகின்றேன்.

எமது ஒலிம்பிக் குழு பற்றிய சர்ச்சைகள் தொடர்பில் தற்போது ஊடகங்களில் அடிக்கடி செய்திகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மேற்படி சங்கத்தின் கணக்கறிக்கைகள் கடந்த 06 வருட காலமாக சமர்ப்பிக்கப்படாத நிலையில், அதனது பதவி நியமனங்களுக்கான தேர்தல் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைப்பெற வாயப்புகள் இருப்பதாகவம் தெரிய வருகின்றது.

நீச்சல் சங்கத்திலும் 12 மில்லியன் ரூபா செலவிட்டுள்ள முறைமை தொடர்பில் இன்னும் தெளிவற்றதொரு நிலையே காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. பயிற்றுவிப்பாளர்களே தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு வருகின்ற நிலை இங்கு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கை கிரிக்கெற் சங்கம் தொடர்பிலும் சர்ச்சைகள் தொடருவதாகவே இருக்கின்றது. விளையாட்டுகளில் தோல்விகள் ஏற்படுவது சகஜமாகும். எனினும், தொடர்ந்து தோல்விகளே ஏற்படும் நிலையில், அது தொடர்பில் மிகுந்த அவதானங்கள் தேவை.

எனவே, இந்த விடயங்கள் குறித்தும் கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்துவரர் என நம்புகின்றேன்.

வவுனியாவில் 2015 ஆம் ஆண்டளவில் நியமிக்கப்பட்ட குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளரின் மூலம் சுமார் பதினைந்திற்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் தேசியமட்டம் வரையிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் அந்தப் பயிற்சிவிப்பாளருக்கு வழங்கப்பட்ட பணிநிலை இடமாற்றம் காரணமாக இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொடர்ந்து குத்துச்சண்டைப் பயிற்சிகளை வழங்குவதற்கு தகுந்த பயிற்சிவிப்பாளர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அங்கிருந்து தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

தற்போது வவுனியா பிரதேசத்தில் முன்பு தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களைப் பெற்ற மாணவர்களே புதிதாக குத்துச்சண்டை பழக விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இதனால் தேசிய மட்டங்களில் பதக்கங்களைப் பெற்ற வீர வீராங்கனைகள் தொடர்ந்து தாங்கள் பயிற்சி பெறுவதனை நிறுத்திக் கொண்டுள்ளதுடன், தமது திறமைகளை சர்வதேச ரீதியல் கொண்டு செல்ல முடியாது முடக்கப்பட்டுள்ளார்கள். எமது இளைஞர் யுவதிகளின் திறமைகள் மழுங்கடிக்கப்படுவதை தடுத்து, மேலும் பல இளைஞர்களின் நிறமைகளை வளர்த்தெடுப்பதற்காக போதிய பயிற்சிவிப்பாளர்களை தேவையான பிரதேசங்களில் நியமிப்பதுடன் மேலும் பல பிரதேசங்களில் இவ்வாறான குத்துச்சண்டை, பழுதூக்கல் போன்ற விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றுவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வேண்டியுள்ளது. இவ்விடயம் குறித்தும் அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தினைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய விளையாட்டுத்துறை சார்ந்த வசதிகள் தொடர்பிலும் பல கோரிக்கைளை நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களிடம் முன்வைத்திருக்கின்றேன். காலக்கிரமத்தில் அதற்கான ஏற்பாடுகளை அவர் படிபப்படியாக செய்து தர வேண்டும் என்றும், மேலும் வடக்கில் குறிப்பாக கடற்கரை விளையாட்டுக்களை மேம்படுத்தும் திட்டங்களை வலுவானதாக வகுத்து, செயற்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

கலாசர அமைச்சைப் பொறுத்த வரையில், சில கோரிக்கைகளை கௌரவ அமைச்சர் எஸ். பீ. நாவின்ன அவர்களிடம் முன்வைக்க விரும்புகின்றேன்.

சர்வதேச நாடுகளுக்கு செல்கின்ற எமது நாட்டு கலைக் குழுக்களில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகக் கலைக் குழுக்களை உள்ளடக்குவதற்கும், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வருகை தருகின்ற நிகழ்வுகள் மற்றும் விழாக்களிலும், தேசிய விழாக்களிலும் தமிழ் மற்றும் முஸ்லிம், மலையகக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை உட்படுத்துவதற்கும் போதியளவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிங்களக் கலைஞர்களைக் கொண்டு தமிழ், முஸ்லிம்களது கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பதிலாக இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அது அனைத்து சமூகக் கலைஞர்களையும் ஊக்குவிக்கின்ற வாய்ப்பாக அமையும்.

அரச தேசிய விருதுகள் வழங்கலின்போது, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட இதர துறைகள் சார்ந்தவர்களுக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் கலைஞர்களுக்கென கொழும்பில் கலாசர நிலையமொன்றினை உருவாக்குவதற்கு கௌரவ அமைச்சர் எஸ். பி. நாவின்ன அவர்களது காலத்திலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆட்பதிவுத் திணைக்களத்திடமுள்ள பொது மக்களின் தகவல் தளத்தைப் பெற அரசுக்கு சொந்தமான இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பு என்ற நிறுவனம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து அறிய விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts:

 இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...

 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
வடக்கு - கிழக்கில் தமிழ் மொழிமூலமான அரச பணியாளர்களே நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....