வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, January 26th, 2017

சட்டமூலங்களைக் கொண்டு வருவதனாலும், அவற்றை அமுல்படுத்தவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வதனாலும் மாத்திரம் மருத்துவத் துறையை மேம்படுத்த முடியும் எனக் கூறிவிட முடியாது என்றே நான் கருதுகின்றேன். இவ்வாறான சட்டமூலங்கள் மருத்துவத் துறையை போதியளவு ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு சாதகமாக அமையும் என்றாலும், அத் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், அனைத்து மருத்தவர்களும் அரச மருத்துவமனைகளில் மேற்கொள்கின்ற பணிகளின் செயற்திறன்களை அதிகரிக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அரச மருத்துவ மனைகளைப் பொறுத்தவரையில் மருத்துவ மனைகளினதும்,  பணியாற்றுகின்ற மருத்துவர்களதும் தேவைகள் தொடர்பில் கூடிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட வேண்டிய அதே நேரம், மக்களுக்கு மருத்துவமனைகளாலும், மருத்துவர்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அதே நேரம், மருத்துவர்களுக்கான பற்றாக்குறை என்பது இன்னும் தீர்ந்ததாகத் தெரியவரவில்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக நாட்டில் 37 அரச மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள் கடந்த வருடம் ஜூலை மாதம் கூறியிருந்ததை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சுமார் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. அதே போன்று பல மருத்துவமனைகளில் தாதியர்களுக்கும், ஏனைய துறைசார் ஊழியர்களுக்குமான  பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.

கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் 12ஆம் திகதி, நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய டிலாஜினி ரவீந்திரன் எனும் மாணவி, திடீரென மயக்கமுற்ற நிலையில், அங்கிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த பயிற்றப்படாத பணியாளர்களால் உரிய நோய் இனங்காணப்படாமலும், முதலுதவிகள் எதுவும் வழங்கத் தெரியாமலும், பரிதாபமாக இறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனைகள் இருந்தும் போதிய மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள், பௌதீக வளங்கள் என்பன இல்லாத காரணத்தால் நெடுந்தீவில் மட்டுமல்ல, இந்த நாட்டில் எத்தனையோ மனித உயிர்கள் அன்றாடம் பரிதாபகரமான இறப்பையே தேடிக்கொண்டிருக்கின்றன.

எனவே, சட்டமூலங்களைக் கொண்டு வருகின்ற நாங்கள், இந்த நாட்டின் இலவச மருத்துவச் சேவையைக் காப்பதற்கும். அதன் மூலமான உயரிய பயனை எமது மக்களுக்கு வழங்குவதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

வடக்கு மகாகாணத்தில் உள்ள மருத்துவ நிலையங்களில், நாட்டில் அசாதாரணச் சூழல் நிலவிய காலந்தொட்டு இன்றுவரையில் 820 கீழ்நிலைப் பணியாளர்கள், எவ்விதக் கொடுப்பனவுகளும் பெறாமல் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில், அப்பணிகளுக்கு தகுதியானர்களும் இருக்கிறார்கள். தகுதி குறைந்தவர்களும் இருக்கிறார்கள். இப்பணியாளர்களது சேவைக் காலத்தைக் கவனத்தில் கொண்டு, இவர்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறும், தகுதி குறைந்தவர்களுக்கு அத் தகுதியை அவர்கள் எட்டும்வரையில் ஒரு விN~ட ஏற்பாடாக, குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அவர்களின் பணிகளையும் நிரந்தரமாக்குமாறும் நான் இந்தச் சபையில் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருந்தேன். அந்தக் கோரிக்கையை நான் இன்றும் இந்தச் சபையிலே முன்வைப்பதுடன், கௌரவ சுகாதார அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், தாதியர்களுக்கானப் பற்றாக்குறை மிக அதிகாமகக் காணப்படுகின்ற வடக்கு மாகாணத்தில், அங்கு பாடசாலை உயர் தரத்தில் விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடைவோர் குறைவாகக் காணப்படும் நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானமும் கட்டாயப் பாடம் என்பதால், உயர் தரத்தில் விஞ்ஞான பாடம் தவிர்ந்த வேறு பாடங்களில் திறமைச் சித்தி பெறுகின்றவர்களுக்கு தாதியர் பயிற்சிகளை வழங்கி, ஒரு தற்காலிக ஏற்பாடாக, அவர்களையும் அப் பணியில் இணைத்துக் கொள்வதற்கு ஒரு ஏற்பாடு மேற்கொள்ளப்படுவது பயனுள்ளதாக அமையும் என்ற எனது கருத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அவ்வாறே, தனியார்த்துறை தாதியர் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கும் அரச தாதியர்களுக்கான பரீட்சைகளில் தோற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதில் சித்தியடைவோருக்கு அரச மருத்துவமனைகளில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

இலச மருத்துவ சேவையை எமது மக்களுக்கென மேலும் இலகுபடுத்துவதற்காகவும், பொதுவாக அரச மருத்துவமனைகளில் காணப்படுகின்ற நெரிசல்களைப் போக்குவதற்காகவும், ஆரம்பகட்ட பரீட்சார்த்த முயற்சியாக, சில கிராம சேவையாளர்கள் பிரிவுகளை இனங்கண்டு, அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று கிராம சேவையாளர்கள் பிரிவுகளை இணைத்து, ஒவ்வொரு மருத்துவ இல்லங்களை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஒரு திட்டத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

குறிப்பாக, இந்த மருத்துவ இல்லமானது, நன்கு பயிற்றப்பட்ட ஒரு தாதியரைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன,; அதன் கீழ் வருகின்ற கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கின்ற மக்களின் சுகாதாரம் தொடர்பான அறிக்கைகள் அங்கு கணினிமயப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அங்கு வரும் நோயாளர்களது நோய்கள் இனங்காணப்பட்டு, அது தொடர்பில் சிகிச்சைப் பெறுவதற்கு அந்த நோயாளர்களை உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கக்கூடிய வகையில் அங்கு பணிகள் இடம்பெற வேண்டும். இதற்கு மேலதிகமாக குறிப்பிட்ட சில மருத்துவ இல்லங்களை இணைத்த வகையில், ஒரு மருத்துவரின் நடமாடும் சேவை மற்றும் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட அப்பகுதி நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளும் இடம்பெற வேண்டும்.

இவ்வாறானதொரு ஏற்பாடு மேற்கொள்ளப்படுமானால், நோயாளர்கள் பல்வேறு சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளவும், கால மற்றும் பண விரயங்களை தவிர்த்துக் கொள்ளவும், அரச மருத்துவ மனைகளில் கூட்ட நெரிசல்கள், வீண் தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ளவும், சிறந்த மருத்துவ சேவையைப் பெறவும் இயலுமாக இருக்கும் என நம்புகின்றேன்.

இன்றைய உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து பெரும்பாலான நோயாளர்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை நோக்கி மருத்துவத் தேவைகளுக்காக படையெடுத்து வருகின்ற ஒரு நிலை முன்னேறிக் கொண்டு வருகிறது. ‘உல்லாச மருத்துவத் துறை’ எனக் கூறப்படுகின்ற இந்த முறைமையானது, மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வாக அமைந்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையை நோக்கியும் மருத்துவத் தேவைகளுக்காக பல வெளிநாட்டவர்கள் இங்கு வருகைத் தருகின்ற போதிலும், இத்துறையை நாம் மிகவும் வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப வேண்டும். இதன் மூலமாக எமது மருத்துவத்துறையை மேலும் அபிவிருத்தி செய்து கொள்வதற்கும், அதே நேரம் பாரியளவில் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கும் இயலுமாக இருக்கும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது நாட்டில் அண்மையில் முக்கியமான 48 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும், இன்றைய ஜனாதிபதியுமான மேன்மைதங்கிய மைத்திரபால சிறிசேன அவர்களுக்கும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும், சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் ‘சேனக்க பிபிலே கொள்கை’ அமுல்படுத்தப்பட்டதாக விளம்பரங்கள் வெளிவந்திருந்தன. ஆனால், சேனக்க பிபிலேயின் கொள்கையினை நாம் முழுமையாக செயற்படுத்த முன்வரவேண்டும். அதாவது, அவரது கொள்கை என்பது, இலங்கைக்குத் தேவையான மருந்துகள் இனங்காணப்படல் வேண்டும். அந்த மருந்து வகைளை இறக்குமதி செய்யும் முழுப் பொறுப்பும் அரசினால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். இறக்குமதியினை நிறுத்தும் நோக்கத்துடன், படிப்படியாக நாட்டினுள் மருந்து வகைகளை உற்பத்தி செய்வதை விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பவையாகும். எனவே, இந்தக் கொள்கை முழுமையாக செயற்படுத்தப்படுமானால் இந்த நாடும், மக்களும் நிறையவே பயனடையக்கூடும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே நேரம், தாதியர்கள், மருந்தகர்கள், ஆய்வுகூட மற்றும் இயன்முறை மருத்துவக் கற்கைகள் சார்ந்த ஒரு தணியான துறையை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைப்பதற்கும், நாட்டில் முதியோர்களது நலன் கருதி முதியோர்களுக்கான தனியானதொரு மருத்துவமனையை உருவாக்குவதற்கும், வடக்கில் – யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கான ஒரு தனியான மருத்துவமனையை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறும்,

வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற நிலையில், விபத்துக்குள்ளாகின்ற நபர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு அங்கு கூடுகின்ற மக்கள் எவருமே முன்வராத ஒரு நிலையே பொதுவாக எமது நாட்டில் காணப்படுகின்றது. சட்ட ஒழுங்குகள் தொடர்பில் ஏற்படுகின்ற சிக்கல்களை மனதில் கொண்டே பலர் இவ்வாறான சந்தர்ப்பங்களில் விபத்துக்கு உள்ளாகின்றவர்களுக்கு உதவ முன்வராத நிலையே காணப்படுகின்றது. எனவே, இவ்வாறான நிலையை அகற்றத்தக்க வகையில் ஒரு ஏற்பாடொன்றை கொள்கையாக வகுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும்,

தற்போது அதிகரித்து வருகின்ற பல்வேறு நோய்கள் தொடர்பிலான ஒழுங்கமைக்கப்பட்ட விழிப்புணர்வு செயற்திட்டங்களை மேலும் முன்னெடுக்கமாறும்,

கூடியவரையில் இவ்வாறான நோய்கள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுதல் தொடர்பிலான பாடத்திட்டங்களை எமது பாடசாலை பாட நூல்களில், ஒவ்வொரு தரங்களுக்கும் ஏற்றவகையில் இணைத்துக் கொள்ளுமாறும்,

எமது நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்ற நீரிழிவு நோய் தொடர்பில், பொது மக்களுக்கு விழிப்புணர்களை எற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ம் திகதி உலக நீரிழிவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை நவம்பர் மாதம் 14ம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Untitled-2 copy

Related posts:

காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்க...
வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் த...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 19 நவம்பர் 2007 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ள...