செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

பெண் தற்கொலைக் கண்டுதாரியின் கொலை முயற்சி – சமூக சேவைகள் சமூக நலனோம்புகை அமைச்சரினது கூற்று.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

சமூக சேவைகள் மற்றும் நலத்துறை அமைச்சர் என்ற வகையில் எமது மக்;களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு நான் உரையாற்ற விரும்புகின்றேன். எனது அமைச்சு இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற ஏனைய சமூகத்தின் அவதானத்தை முழுமையாகப் பெறாத நிலையில் வாழ்ந்துவருகின்ற மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்ற ஓர் அமைச்சாகச் செயற்பட்டு வருகின்றது. முதியவர்கள் அங்கவீனமுற்றவர்கள் கணவர்களை இழந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்தச் சமூகத்தில் சுயமுயற்சியுடன் நல்லதொரு வாழ்க்கையினை அமைத்துக் கொடுப்பதிலும் ஏனைய சமூகப் பணிகளிலும் எனது அமைச்சு அயராத பணியாற்றி வருகிறது.

இன்று வடக்கு – கிழக்கிலே எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் சந்தர்ப்பதில் முதலில் அவர்களுக்கான அன்றாடப் பிரச்சினைகளை இயன்றவரையில் தீர்ப்பதற்காகவே நான் அடிக்கடி யாழ்.விஜயம்  மேற்கொண்டு அம்மக்களை நேரில் சந்தித்து வருகின்றேன். அதுமட்டுமல்லாது புலிகளின் பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல அரசியல் அலுவலகங்களை அமைத்து அம்மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றேன். அத்துடன் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை நாட்களையும் முழுமையாக ஒதுக்கி இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்குமான எனது அமைச்சின் பணிகளையும் என்னால் இயன்ற ஏனைய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, சத்தியங்கள் சாவதில்லை.சத்தியங்களில் உண்மையுள்ள சாட்சியங்களும் வீழ்வதில்லை. தனிமனித சர்வதிகாரங்களின் சாம்ராச்சியக் கனவுகள் மனித கரத்துக்கு எதிராக ஏவிவிடப்படும் மனித வெடிகுண்டுகளையும் மனித மண்டையோடுகளையும் மனித தசைத்தண்டகளையும் எமது இலங்கைத் தீவின் தெருக்களெங்கும் வீசியெறிந்து வருகின்றனர். ஒரு சாதாரண குடிமகனிலிருந்து இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் வரை மனித இரத்தம் குடிக்கும் மானிட விரோதிகளின் கொடிய முகங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் எமது தேசம் சிறைப்பட்டுக் கிடக்கின்றது. அத்தகைய சூழலில்தான் இந்த வரவு – செலவுத் திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தனிமனித பாதுகாப்புக்கும் அரசியல் தலைவர்களின் நடமாட்டத்துக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் இந்த யுத்த சூழலில் நிறைவேற்றப்பட இருக்கின்ற இந்த வரவு – செலவுத் திட்டத்தை நான் இன்றைய யதார்த்த சூழ்நிலைக்குள் இருந்துதான் பார்க்கின்றேன்.

இலங்கைத் தீவில் வாழும் அனைத்து இன மக்களினதும் சமூக பொருளாதார வளர்ச்சியை மட்டும் நோக்கமாகக்  கொண்டு செயற்பட வேண்டிய நாம் இன்றிருக்கின்ற சமூக பொருளாதாரங்களை மேலும் சீரழிவு நிலைக்கு இட்டுச் செல்லவிடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம். முதலில் இருப்பதைப் பாதுகாக்க வேண்டும். பின்னர் அடுத்ததை நோக்கி நகர வேண்டும். இன்று இலங்கைத் தீவில் வாழ்கின்ற அனைத்து இன மக்களினதும் வாழ்வியல் உரிமைக்கும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது இந்த யுத்தமாகும். ஓர் இனத்தின் பெயரால் கட்டவிழ்ந்து விடப்பட்டிருக்கும் இநத அழிவு யுத்தத்தை  எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பில் முழு இலங்கைத் தீவுமே இருக்கின்றது.

இத்தகைய துர்பாக்கிய சூழலில் இருந்ததுதான் இந்த வரவு செலவுத் திட்ட  விவாதத்தில் நான் பங்கெடுக்கின்றேன். முதலில் இந்த யுத்த சூழலை நாம் மாற்றியமைக்க வேண்டும். மனிதர்களின் உயிர் வாழும் உரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற சூழலை விமர்சிப்பதை விடுத்து இந்தச் சூழலை மாற்றியமைப்பதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும். மக்கள் சேவையின் மகத்தான பணிக்கும் ஜனநாயகத்துக்கும் சமாதானத்துக்கும் அமைதிக்கும் தமிழ் பேசும் மக்களுக்காக அரசியல் உரிமைச் சுதந்திரத்துக்குமான முன்னெடுப்புக் கும் விரோதமாகப்  புலித் தலைமையின் யுத்த தாண்டவம் எந்த வகை யில் துரோகமிழைத்து வருகிறது என்பதை நேற்றைய அனர்த்தங்கள் மறுபடியும் ஒரு முறை உலகுக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றன. என்மீது தற்கொலைகுண்டுதாரியை ஏவிவிட்டு என்னைக் கொன்றொழிப்பதன் மூலம் மக்களை ஏறி மிதித்து தங்களது ஏகத் தலைமை வெறியை வெற்றி கொள்ளலாம் எனப் புலித் தலைமை கனவு காண்கிறது. கொழும்பில் மக்கள் நடமாடும் இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து  மனித உயிர்களைப் பலியெடுப்பதன் மூலம் இனங்களுக்கிடையிலான பகைமை உணர்வைத் தோற்றுவித்து அதில் அரசியல் இலாபம் தேடலாம் எனக் கனவு காண்கிறது புலித்தலைமை. புலித்தலைமை எதிர்பார்த்து காத்திருக்கும் நோக்கங்களுமே ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. புலித் தலைவர் பிரபாகரன் தான் விரும்பி உண்ணும் நரமாமிசம் அதுதான் என்று தனது பிறந்தநாளில் எனக்கும் இந்த தேச மக்களுக்கும் காண்பிக்கும் பொருட்டே மனித வெடிகுண்டை என்னிடமும், வெடிகுண்டை நுகேகொடையில் படுகொலை செய்யப் பட்ட மக்களுக்கும் அனுப்பி வைத்தார். தற்கொலைக் குண்டுதாரிகளை ஏற்கனவே சந்தித்த அனுபவம் எனக்கு உண்டு.(இடையீடு)

பல தடவைகள் புலித் தலைமை என்னைக் கொன்றொழிப்பதற்கு முயற்சி எடுத்திருக்கின்றது. புலித் தலைவர் பிரபாகரனின் எடுபிடிகளான தரகு கூட்டமைப்பினர் இந்தச் சபையில் இருப்பார்கள் என்று நான் எண்ணுகின்றேன். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது பிரபாகரனிடம் போய்ச் சொல்லுங்கள் பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாதென்று. பிரபாகரனின் சலசலப்பிற்கெல்லாம் நான் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. புலித்தலைவர் பிரபாகரனிடம் போய்ச் சொல்லுங்கள், மரணம் ஒருமுறைதான் வரும். மரணத்திற்கு அஞ்சி எமது மக்களையும் மண்ணையும் விட்டு ஓடுவதற்கு நான் ஒன்றும் கோழை அல்லவென்று. பிரபாகரனிடம் போய்ச் சொல்லுங்கள் மனித வெடிகுண்டுகளை என்மீது ஏவிவிடுவதால் எமது மகத்தான மக்கள் பணியும் எமது மக்களுக்கான அரசியலுரிமைச் சுதந்திரத்திற்கான பயணத்தையும் இடைநடுவில் நிறுத்துவதற்கு நாம் ஒன்றும் கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்லவென்று பிரபாகரனிடம் போய்ச் சொல்லுங்கள்.

நேற்றைய தினம் எமது அமைச்சின் வெகுஜன தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த எமது இன்னுயிர்த் தோழர் ஸ்ரீபன் பீரிஸ் அவர்களைப் புலிப்பாசிசம் பலியெடுத்திருக்கின்றது. மக்களுக்காக உழைத்த அந்த மகத்தான தோழனுக்கு இந்தச் சபையில் நான் அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துகின்றேன். கொழும்பு நுகேகொடைப் பகுதியில் பாசிசப் புலிகளின் குண்டுவெடிப்பில்  கொல்லப்பட்ட அப்பாவி மக்களையும் இளம் பாடசாலைச் சிறார்களையும் சிங்களச் சகோதரர்களையும் இந்தச் சபையில் நினைவுகூர விரும்புகின்றேன். அவர்களது உறவினர்களுக்கும் சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கும் தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் ஈ.பி.டி.பி.யின் சார்பாகவும் ஆறுதல் கூறுகின்றேன். இதேபோல் வடக்கு கிழக்கில் புலித் தலைமையால் தினம் தினம் கொல்லப்பட்டும் பலியெடுக்கப்பட்டும் வரும் உயிர்களை இந்தச் சபையில் நினைவு கூறுகின்றேன். அவர்களது உறவுகளுக்கும் ஆறுதல் கூறுகின்றேன்.

மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி வந்திருந்த என்னை ஆனந்த முகத்தோடு ஆரத்தழுவி வரவேற்ற இந்தச் சபையின் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக தலைமைக்கு அவர்கள் வழங்கும் மரியாதை குறித்து நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

புலித்தலைமை தமிழ் பேசும் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு அழிவு யுத்தம் நடாத்தி வருகின்றது. அவர்கள் கூறுவதுபோல் அவர்கள் தமிழ்பேசும் மக்களுக்காகவே ஆயுதமேந்தி நிற்பது உண்மையென்றால் தமிழ் பேசும் மக்களுக்காகவே உழைத்து வந்த தமிழ் தலைவர்களைப் புலித் தலைமைகள் ஏன் கொன்றொழித்து வருகின்றது? என நான் கேட்க விரும்புகின்றேன். தேசிய தலைவர் அமிர்தலிங்கத்தை கொன்றொழித்தன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு விமோசனம் கிடைத்ததா? ரெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் எனது தோழர்  பத்மநாபா, திருமதி சரோஜினி யோகேஸ்வரன் மூதூரின் விடிவெள்ளி தங்கத்துரை கிழக்கின் இளந்தலைவர் விமலன் சௌந்தரநாயகம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம்  அதிசிறந்த புத்திஜீவியாகிய நீலன் திருச்செல்வம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலவைர் அஸ்ரஃப் போன்ற பல்வேறு அரசியல் சக்திகளை கொன்றொழித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கான விமோசனம் கிடைத்;ததா? என நான் இந்தச் சபையில் கேட்க விரும்புகின்றேன். இந்தத் தலைவர்களைக் கொன்றொழித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கான விடிவு காலத்தைப் புலித் தலைமை பின்னோக்கி தள்ளிவிட்டுள்ளது.

என்மீது புலித்தலைமை மனித வெடிகுண்டை ஏவிவிட்டுருக்கிறது.என்னைக் கொல்வதால் தமிழ் பேசும் மக்களுக்கு விமோசனம் கிடைக்கு மென்றால் அதற்காக நான் மகிழ்ச்சியுடன் மரணத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன். ஆனால் உண்மை அதுவல்ல. மக்களுக்காக உழைக்கின்ற ஒவ்வொரு தலைவர்களும் புலித்தலைமையால் கொன் றொழிக்கப்படும் போது எமது மக்களுக்கான அரசியல் உரிமைச் சுதந்திரம் என்பது பின்னோக்கியே தள்ளப்படுகின்றது. தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வை இலங்கைத் தீவில் சம உரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக வாழவைக்கும் வரை என்னைப் புலித் தலைமையால் ஒருபோதும் கொன்றொழித்துவிட முடியாது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு, புலித்தலைமையின் பிரச்சினை வேறு என்ற உண்மையை புலித்தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த உரையின் மூலம் மறுபடியும் அடையாளமிட்டிருக்கின்றார். கார்த்திகை 27 என்றால் அது யுத்தத்திற்கு பலிகொடுத்த தமது உறுப்பினர்களின் புதிய எண்ணிக்கைக் கணக்கை உலகக்கு தெரிவிக்கும் நாள் என்பதே அதன் அர்தம் என்றே தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றார்கள்.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக நாங்களும் அன்று ஆயுதமேந்திப் போராடியவர்கள்தான் தாடியைச் சவரம் செய்வதற்கோ தலைமுடியை அழகுபடுத்துவதற்கோ இளமையில் வசீகரத்தை அனுபவிப்பதற்கோ நேரம் அற்றவர்களாகவும் விருப்பமில்லாதவர்களாகவும் அந்த உரிமைப் போராட்டத்திற்கு நாம் ஓய்வொழிச்சலின்றி அல்லும் பகலும் உழைத்திருக்கின்றோம். உலகில் எங்குமில்லாதவாறு நாம் எமது இரத்ததை விற்றும் எமது தோழர்களுக்கு உணவு பரிமாறியிருக்கின் றோம். தெரிவிலும்  திண்ணையிலும் காட்டிலும் சிறையிலும் எமது வாழ்நாட்களை கழித்திருக்கின்றோம். ஆயிரம் பூக்;கள் மலர்வது போல்; அங்கொன்றும் இங்கொன்றுமாகாகத் தோன்றிய பல்வேறு விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் போராளிகளும் கல்முனையில் தங்;களை தகுதியாக்கியிருக்கிறார்கள். அந்தத் தியாக வரலாறுகள் கொச்சப்படுத்தப்படுவதற்கானவையல்ல என்பதை இச்சபையில் தெரிவிக்க விரும்புகின்றேன். ஆனாலும் விடுதலையின் பெயரால் மக்களின் பெயரால்  அராஜக மனநோய் பிடித்து ஆயுத பலத்தைக் கொண்டு தங்களது ஏகத் தலைமை வெறிக்காக இலட்சியப்பிடிப்புடன் போராட முன்வந்து சக இயக்கப் போராளிகளையும் முரண்பட்டு நின்ற தமது இயக்கப் போராளிகளையும் தலைவர்களையும் புலித்தலைமை கொன்றொழித்து ஆயுதப் போராட்டம் அழிவுகளை மட்டும் தருவதாக முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருந்ததே தவிர ஆக்கபூர்வமான எந்தவிதமான நகர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால் எமது மக்களுடைய விடுதலைப் போராட்டம் திசைமாறிச் சென்றது.

புலிகளின் ஏகத் தலைமை வெறியினால் கொன்றொழிக்கப்பட்ட தலைவர்கள் தவிர எஞ்சியிருந்த நாம் என்ன செய்யலாம் என்றும் எமது மக்களுக்கான அரசியலுரிமைப் போராட்டத்தை எப்படி நகர்த்தலாம் என்றும் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற அந்த பொன்னான வாய்ப்பினை ஏற்று ஜனநாயக வழிக்குத் திரும்பியவர்கள் நாம். ஆனால் புலித்தலைமையும் ஜனநாயக வழிக்கு வந்திருப்பது போல் கபட நடாகமாடிக் கொண்டிருந்தது. அன்று 1987ல் இந்திய  – இலங்கை ஒப்பந்;தத்தை ஏற்குமாறு புலித்தலைமையிடம் இந்திய  – இலங்கை அரசுகள் வேண்டுகோள் விடுத்திருந்த போது புலிகள் இயக்கத்தில் கொல்லப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 651 பேர் மட்டுமே ஆனால் இன்று 19887 பேர் தமது இயக்;த்தில் கொல்லப்பட்டு இருப்பதாக புலித்தலைமை அறிவித்துள்ளது. அத்துடன் நேற்றும் ஒருவர் கொலையுண்டுள்ளார். எனவே சக ஒன்று. புலித்தலைமை அன்று இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் அதற்குப் பின்னர் பலியான எமது 19000இளைஞர் யுவதிகளையும் இழந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்குமா?

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு உரித்தான விடயங்களை உள்ளடக்கி மத்திய அரசின் பட்டியல் மாநில அரசின் பட்டியல் மற்றும் பொதுவான பட்டியல் என வெவ்வேறாக வரையறுக்கப்பட்டிருப்பது போல் ஈழத் தமிழ் பேசும் மக்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிகக் கூடிய மாகாண சபைக்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் அந்த ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்குப் புலித்தலைமை திட்டமிட்ட முறையில் காலத்தை இழுத்தடித்துத் தட்டிக்கழித்து வந்தது. தீர்வைக் கொடுத்;தால் இடைக்கால நிர்வாகத்தை கேட்பது இடைக்கால நிர்வாகத்தை கொடுத்தால் தீர்வைக் கேட்பது என்ற இரட்டை வேடச் சுயலாப அரசியல்தான் புலித் தலைமையின் வரலாறு. ஆகவேதான் மாகாணசபைத் தீர்வு வழங்கப்பட்ட பொது புலித்தலைமை இடைக்கால நிர்வாகம் கேட்டது.

இன்று தமிழ் பேசும் மக்களின் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் ஒரு பரந்து பட்ட ஜனநாயக கட்டமைப்பை உள்ளடக்கியதும். சிவில் சமூகத்தின் ஆலோசனைச் சபையுடன் கூடியதுமான இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையை முன் வைத்துள்ளோம். ஆனால் புலிகள் என்ற இடைக்கால நிர்வாகத்தை கோரியமைக்கான காரணம் வேறு ஈ.பி.டி.பி. இன்று இடைக்கால நிர்வாகத்தைக் கோரியிருப்பதற்கான காரணம் வேறு எங்கிருந்து தொடங்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்ற நடைமுறை யாதார்த்தத்திலிருந்து எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளின் இறுதியிலக்கை நோக்கி நகர்வதற்கே ஈ.பி.டி.பி. யினராகிய நாம் இன்று வடக்கு – கிழக்கு மாகாண சபைக்கான இடைக்கால நிர்வாகத்தை கோரியிருக்கின்றோம். இந்த நடைமுறைச் சாத்தியமான கோரிக்கை என்பது எமது அயலுலக நட்பு நாடான இந்தியாவினாலும் சர்வதேச சமூகத்தினாலும் தென்னிலங்கையின் அனைத்து அரசியல் சக்திகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான ஓர் அரசியல் முன்னெடுப்புத் திட்டமாகவே கருதப்படுகின்றது. ஆனால் புலித் தலைமையோ அதற்கு மாறாக இன்று இடைக்கால நிர்வாகத்தை ஏற்கப்போவதாக கபட நோக்கில் கோரிக்கை விடுத்திருந்தது.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால நிர்வாகத்திற்கும் நீண்ட காலமாக ஈ.பி.டி.பி.இனால் முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக கோரிக்கைக்கும் இடையிலான அடிப்படை அரசியல் பண்பைப் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக சபை கோரியுள்;ளது. புலிகளின் ஏகபோக அதிகாரத்திற்கும் மக்களின் ஜனநாயக மறுப்புக்குமான ஒரு கோரிக்கையாகும். ஆனால் ஈ.பி.டி.பி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையானது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டது மாகும். மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி அவர்களின் நாளாந்தப் பிரச்சினைகளை தீர்க்கின்ற இறுதி அரசியல் தீர்வுக்கான அடிப்படை அரசியல் அத்திவாரமே எமது இடைக்கால தீர்வுக் கோரிக்கையாகும். இன்றைய பற்றியெரியும் சூழலின்; வெம்மைக்குள் நின்றுகொண்டு நமது நாட்டையும் நமது மக்களையும் அழிவிலிருந்து காப்பதற்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் நமது இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கைய நடைமுறைப்படுத்தி உடனடியாக ஆதரவு தருமாறு இந்தச் சபையில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த இரு வேறு நோக்கங்களையும் ஒன்றுபடுத்தி இடைக்கால நிர்வாகத்திற்கான கோரிக்கை என்பது புலித் தலைமையில்தான் முதன்முதலில் முன்வைக்கப்பட்டதாக புலிசார் ஊடகங்கள் ஒத்தூத முற்பட்டுள்;ளன. இடைக்கால நிர்வாகத்தின் பிரதம நிர்வாகியாகப் புலித்தலைவர் பிரபாகரனே இருக்கலாம் என்று அன்றைய ஜே.ஆர்.அரசு விருப்பம் கொண்டிருந்தது. ஜே.ஆர்.இன் இந்த விருப்பத்தை இந்தியத் தூதுவராக இருந்த கே.என்.டிக்சித் அவர்கள் புலித் தலைவர் பிராபாகரனிடம் தெரிவித்திருந்தார். ஆனால் பிரபாகரன் அதற்;குச் சம்மதிக்க மறுத்துவிட்டார். முதலில் தீர்வுக்கு மறுத்த பிரபாகரன் பின்னர் முதலமைச்சர் பதவியை ஏற்பதற்கும் மறுத்திருந்தார். ஜே.ஆர்.அரசும் இந்திய அரசும் இடைக்கால நிர்வாகத்திற்கு புலித் தலைமையின் விருப்பப்படி யாரை நியமிக்கலாம் என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருந்;தன. அப்போது 3 பேர் அடங்கிய பெயர்ப்பட்டியலொன்று இடைக்கால நிர்வாக புலித்தலைமையினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பெயர்ப்பட்டியலின்படி யாழ் மாநாகரசபையின் ஆணையாளராக இருந்த சீ.வீ.கே.சிவஞானத்தை இடைக்கால முதல்வராக நியமிப்பதற்கு இலங்கை – இந்திய அரசுகள் சம்மதித்திருந்தன. இது புலித் தலைமைக்கு பலத்த ஏமாற்றம். தாம் கேட்டிருந்த இடைக்கால நிர்வாகத்தை இலங்கை அரச கொடுக்க மறுக்கும் என எதிர்பாத்திருந்த புலித்தலைமைக்கு அரசு சம்மதித்தது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. தாம் கொடுத்த பட்டியலில் உள்ளவர்கள் எவரையும் இலங்கை அரச நியமிக்கமாட்டாதெனப் புலித்தலைமை எதிர்பாத்திருந்தாலும் புலித் தலைமைக்கு அதிலும் ஏமாற்றம். திரு.சீ.வீ.கே.சிவஞானத்தை நியமிப்பதற்கு அரச உடன்பட்டு விட்டது. இதனால் எவ்வகைப்பட்டேனும் சமாதானம் என்று தாம் கருதும் பொறிக்கிடங்கில் இருந்து வெளியேற இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்தது புலித்தலைமை.

சமாதானம் புலித்தலைமைக்கு பொறிக்கிடங்காகும் அரசியல் தீர்வு என்றால் புலித்தலைமைக்கு அருவருப்பு. யுத்தம் நடத்த வேண்டும்.தினம் தினம் மனித உயிர்கள் சாகடிக்கப்பட வேண்டும். அந்த யுத்ததில் பரவும் பிணவாடையில் மட்டுந்தான் புலித்தலைமையின் உயிர்மூச்சே தங்கியிருக்கிறது. யுத்தம் இல்லையாயின் ஜனநாயகமும் பல கட்சித் தேர்தல் முறையும் வந்து, தங்களது தனிக்காட்டு ஆராஜகத்தை விழுங்கிவிடும் என்ற அச்சம் புலித்தலைமைக்கு இருந்நதால்தான் அரசு நியமித்திருந்த சீ.வீ.கே.சிவஞானத்தின் பெயரை நிராகரித்துவிட்டு மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த என்.பத்நாதனை இடைக்கால நிர்வாக முதல்வாரக நியமிக்குமாறு புலித் தலைமை கோரியது.

இச்சமயம் அரசாங்கம் சட்டப் பிரச்சினையைக் கிளப்பியது.அரசாங்க அதிபராக இருந்து கொண்டு அரசுக்கு விசுவாசமாக சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டு அந்தச் சத்தியப்பிரமாணத்துக்கு துரோகமிழைத்திருந்த என்.பத்மநாதன்  மீதான நம்பிக்கையீனத்தை அரசு வெளிப்படுத்தியிருந்தது. பத்மநாதன் அரச படையினால் கைது செய்யப்பட்டிருந்தவர் புண்ணுக்கு வலியா? மருந்துக்க வலியா? பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமெனப் புலித்தலைமை ஏற்றிருக்கலாம். அல்லது இன்னொரு பெயர்ப்பட்டியலை புலித்தலைமை வழங்கி நடக்கப்போகும் அழிவை தடுத்திருக்கலாம்.ஆனால் புலித்தலைமை அவ்வாறு பொறுப்புடன் நடந்து  கொள்ள விருப்பம் கொண்டிருக்கவில்லை. புலித்தலைமை கோரியது போல் பத்மநாதனை அரசு நியமிக்க சம்மதித்திருந்தால் சிவஞானத்தை நியமிக்குமாறு புலித்தலைமை குத்துக்கரணம் அடித்திருக்குமென அப்போது அமைதி முயற்சியில் ஈடுபட்டிருந்த டிக்சித் அவர்கள் கூட தெரிவித்திருந்தார். இதுதான் புலித்தலைமை முன்வைத்திருந்த இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையின் உள்நோக்கம்.

புலித்தலைமை விரும்பியது போல் இந்திய அமைதி காக்கும் படையினருடான யுத்தம் தொடங்கியது. 650 புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு கார்திகை 27லும் எண்ணப்பட்டு இன்று 19887+1 புலி உறுப்பினர்களின் கணக்கெடுபபு அறிவிக்கும் கார்த்திகை 27 வந்திருக்கின்றது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு இன்று 20 வருடங்கள். இந்த இருபது கார்த்திகை 27களும் புலிகளுக்கு கொடுத்திருக்கும் மிச்சம் என்பது 19888 சமாதிகள் மட்டுந்தான். இதில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் கொல்லப்பட்டிருந்த பொது மக்களினதும் ஏனைய அமைபபு உறுப்பினர்களதும் படைத்தரபினரதும் எண்ணிக்கை அடங்கியிருக்கவில்லை.

1987ம் ஆண்டு கைச்சாதிடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்த முயற்சியில் இருந்து இன்றுவரை புலித்தலைமை தன் உடம்பெல்லாம் எண்ணெய் பூசியவாறு விலகி விலகி ஓடிக் கொண்டிருக்கிறது.அமைதிக்காகவோ அரசியல் தீர்வுக்காகவோ தம்மை யாரும் பிடித்தி ழுக்காமல் இருப்பதற்காகவோ தமது உடம்பில் எண்ணெயைப் பூசியுள்ளது புலித் தலைமை.

புலித் தலைமை முன்வைத்திருந்த இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிக்கையின் உள்நோக்கம் எது என்பதை பிரேமதாச அரசுடனான தேனிலவின்போது அவர்களால் ஓதப்பட்ட மந்திர தந்திரங்களும் தேனிலவை முறித்துக் கொண்டு மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்திருந்த போக்குகளும் மறுபடியும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தப்பட்டிருந்நதன.

பொதுஜன ஐக்கிய முன்னணி காலத்தில் சந்திரிக்கா அரசோடு பேசினார்கள். இடைக்கால நிர்வாக சபையும் அரசியல் தீர்வும் இன்றி பூநகரி சோதனைச் சாவடியை நீக்கச் சொல்லி தங்களது சுயலாபத்துக்கான நிபந்தனையை விதித்து யுத்தத்தை புலித்தலைமை தொடங்கியது. இன்று தமிழ்பேசும் மக்களின் வீட்டுக் கதவுகள் வாசற்படிகள் தோறும் சோதனைச் சாவடிகள் முளைத்து விட்டன.

சந்திரிகா அரசிடம் ஈ.பி.டி.பி. இடைக்கால நிர்வாகத்துக்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தது. தங்களது எடுபிடிகளாக தமிழர் விடுதலைக்கூட்டணியினரைத் தூண்டிவிட்டு அவர்களுக்கூடாக இடைக்கால நிர்வாகம் வேண்டாம் என்ற பின்னணியில் இருந்து அந்த முயற்சியை புலித்தலைமை குழப்பியடித்தது. அதன்போது இடைக்கால நிர்வாக முயற்சியை கைவிட்டு அரசியல் தீர்வை முன்வைத்து சந்திரிக்கா அரசு அந்த அரசியல் தீர்வுக்கு எதிராகவும் தனது எடுபிடிகளாள கூட்டணியினரைத் தூண்டிவிட்டு அதற்கெதிரான ஆர்ப்பாட்டத்திலும் இறக்கிவிட்டது புலித்தலைமை.

இதுபோலவே ரணில் விக்கிரசிங்க அரசோடு ஆறு சுற்றுப் பேச்சவார்த்தை நடத்திக் கொண்டு மறுபுறத்தில் யுத்தத்திற்கான தயாரிப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மாற்று ஜனநாயக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை நூற்றுக்கணக்கில் கொண்றொழித்தும் வந்தனர். இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இன்றைய அரசோடு பேசுவதற்கு நோர்வே நாட்டுக்குப் போனார்கள். ஜெனீவா போனார்கள். இதன் நிர்வாகமும் கேட்காமல் அர்த்தமற்ற நிபந்தனைகளை மட்டுமே புலித்தலைமை திட்டமிட்டு விதித்திருந்தது.தீர்வுக்கு விருப்பமின்றித் திட்டமிட்டு தீர்வு முயற்சிகள் அனைத்தையும் புலித்தலைமை உடைத்து சிதைத்து எமது மக்களை இன்று அழிவு யுத்தத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது.

கிழக்கின் மாவிலாறு அணைக்கட்டை மூடிய புலித்தலைமை பாரிய யுத்ததிற்கான கதவுகளை மட்டும்தான் விட்டிருந்தது. இதனால் கிழக்கு மண்ணை முழுமையாகக் கைவிட்டு ஓடிப்போக வேண்டிய நிலைமைக்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள். மொத்;தத்தில் புலித்தலைமையின் விருப்பம் அழிவு யுத்தம் மட்டும்தான் அதற்காகப் பலி கொடுக்கப்பட்ட அப்பாவி மக்களான அடுத்தவர்களது பிள்ளைகளே இந்த 19887 உயிர்களும் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புலித்தலைமையின் யுத்த வெறியை ஏனென்று தட்டிக் கேட்கவே சுதந்திரமற்றவர்களாக, அந்த அழிவு யத்தத்திற்குப் பலியாகிப் போனவர்களால் புலி உறுப்பினர்கள் அடுத்தவர்களது பிள்ளைகளை வாழவிடாது அவர்களுக்குச் சமாதி கட்டிவரும் புலித்தலைமை தங்களது பிள்ளைகளை மட்டும் வாழவேண்டும் என்ற ஆசையைக் காட்டி வருகின்றது.

அரசியல் தீர்வுமின்றி இடைக்கால நிர்வாகமும் இன்றி இருண்ட யுத்ததின் வெறுமைககுள் இந்த வருடமும் கார்த்திகை 27 கழிந்திருக் கின்றது. பழியெடுப்பும் நடக்கட்டும். பலிகொடுப்பும் நடக்கட்டும் என்பதே புலித்தலைமையின் விருப்பம். அடுத்த கார்த்திகை 27ல் இன்னும் சில ஆயிரம் புலி உறுப்பினர்களையும் அப்பாவி மக்களையும் யுத்தவெறிக்குப் பலிகொடுத்த கணக்கெடுப்போடு தனது பங்கர் மாளிகைக்குள் இருந்து கொண்டு புலித் தலைவர் தனது வருடாந்த உரையை நிகழ்த்துவார்.அதற்குச் சந்தர்ப்பம் இருக்குமோ தெரியவில்லை.

மனித உயிர்களை எண்ணிக் கொண்டிருக்கும் மயான கதாண்டத் திலிருந்து மாற்றத்தைத் தரவல்ல எந்தத் திசை நோக்கியும் அவர்களால் நகர முடியாது. 19887 புலி உறுப்பினர்களினதும் சக இயக்கப் போராளிகளினதும் 60000 மக்களினதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகு அநியாயமாகக் கொல்லப்பட்ட படை உறுப்பினர்களதும் உயிரிழப்புக்களுக்கான பிரதான பொறுப்பை புலித் தலைமையே ஏற்க வேண்டும்.

புலித் தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த உரையின் போது பல உண்மைகளை பேசியிருக்கின்றார். இந்தியாவோ அன்றி சர்வதேச சமூகமோ தங்களைப் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி யிருப்பதாகவும் ஒரு காலத்தில் விடுதலைக்காகப் போராடிய நாடுகள் கூட தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பரிதாபகரமாகப் பேசியிருக்கிறார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு மீதும் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நோர்வே மீதும் தங்களது கருத்துக்களையும்  நடவடிக்கைகளையும் அவை ஏற்கவில்லை என்று குற்றம் சுமத்தி தனது வருடாந்த உரையில் அழுது வடித்திருக்கிறார்.பிரபாகரன் அப்படியானால் புலித்தலைமை யாருக்கு நண்பர்கள்? என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தின் பிரதான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட எமது தோழர் பத்மநாபா அவர்களின் அஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரைதான் எனக்கு இங்கு ஞாபகம் வருகிறது. புலிகள் சிங்கள மக்களுக்கும் நண்பர்களில்லை. முஸ்லிம் மக்களுக்கும் நண்பர்களில்லை. இந்தியாவுக்கும் நண்பர்களில்லை. உலக நாடுகளுக்கும் நண்பர்களில்லை. தமிழர்களுக்கும் நண்பர்களில்லை. ஏன் தமக்குத் தாமே நண்பர்களில்லை. என ஜெயகாந்தன் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் கூறிய இந்த உண்மையை புலித்தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த உரையின்போது தன்னை அறியாமலே ஒப்புக் கொண்டுள்ளார்.

உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. உனக்கு நீயே  தூவிவிட்டவைகள்தான்; என்றான் ஒரு கவிஞன். இதுபோலவே புலித்தலைமை தமக்குத் தாமே தோண்டிய பொறிகிடங்குள் தாம் புலித்தலைமையை இந்தியாவிடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் இன்று தனிமைப்படுத்தியிருக்கின்றான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது போல புலித்தலைமை தாம்; விதைத்த வினையினைத் தாமே அறுவடை செய்து கொண்டிருக்கிறது. இந்திய அமைதி காக்கும் படையோடு வலிந்து கட்டி யுத்தத்தைத் தொடராமல் அந்த நாட்டுப் பிரதமாராக இருந்த ராஜீவ் காந்தியைப் புலித்தலைமை கொன்றிருக்காவிட்டால் புலித்தலைவர் பிராபாகரன் உலக உறவுகள் அற்றுப்போன ஒருவராக பங்கர் மாளிகைக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய பரிதாபம் நிகழ்திருக்காது. புலித்தலைவர் பிரபாகரனுக்கு செங்கம்பள வரவேற்புக் கிடைத்திருக்கும். ஆனால் மக்கள் விரோத நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமது அராஜக வன்முறை மூலம் அந்தச் சந்தர்ப்பங்களை உடைத்துச் சிதைத்திருக்கும் புலித்தலைமை இன்று இந்தியாவின் ஆதரவு இல்லை என்றும் சர்வதேசத்தின் ஆதரவு இல்லை என்றும் அழுது வடித்திருக்கிறது.

கிழக்கு திமோரின் விடுதலைககு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கியிருக் கின்றது. என்ற தனது வருடாந்த உரையின் போது ஆதங்கப்பட்டிருக்கும் புலித் தலைவர் பிரபாகரன் தனது கற்பனையில் தவழும் தமிழீழம் என்ற சர்வதிகார இராச்சியத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று புலம்பியிருக்கின்றார். கிழக்குத் திமோரில் சொந்த இனத்தையே கொன்றொழிக்கும் அராஜகங்கள் நடந்தேறவில்லை. மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு மக்களுடைய ஜனநாயக உரிமைகளை அவர்கள் மறுத்திருக்கவில்லை. ஒரு பிஞ்சுப் குழந்தையின் கண்முன்னால் தந்தையைக் கொன்றுவிட்டு அம்மாவிடம் போய்ச் சொல் அப்பாவைக் கொன்றுவிட்டோம் என்று கூறியனுப்பிய கொடுமைகள் நிகழ்திருக்கவில்லை. ஆகவேதான் கிழக்கு திமோரின் விடுதலைக்காக சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கியிருக்கிறது. இந்த உண்மைகளை விளங்கிக் கொள்ளாத புலித்தலைமை நாகரிக உலகில் ஒரு காட்டுமிராண்டிகளின் தேசத்தை உருவாக்குவதற்குச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை என அழுது வடிக்கின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நாகரிக உலகில் எங்குமில்லாதவாறு புலிகளின் தலைமை மனித குலத்துக்கு விரோதமான செயற்பாட்டை தமிழ் பேசும் மக்கள் எதிர்க்கின்றார்கள். ஆகவே தமிழ் பேசும் மக்களுக்கான நிம்மதியான வாழ்கையையும் அரசியல் உரிமைச் சுதந்திரத்தையும் அடையக்கூடிய நடைமுறைச் சாத்தியமான பாதையை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஏற்றுக் கொண்டு விரைவாகச் செயலாற்ற வேண்டுமெனத் தமிழ் மக்களின் சார்பாக நான் மனிதாபிமான அடிப்படையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். நன்றி. வணக்கம்.

20 மே 2000

Related posts:

சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள்  வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் - நாடாளுமன்றத்...
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் - மதிக்கப்படும் சூழலை உருவாக்க வாருங்கள் நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...