எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிருப்பதற்கு காரணம் என்ன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, June 24th, 2016

வடக்கில் சகல வசதிகளையும் கொண்டதான சர்வதேச தரமுடைய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைப்பட்ட சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமாணப் பணிகள் கடந்த 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை அதன் பணிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம்(23) விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களிடம் குறித்த கேள்வியை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுப்பியிருந்தார்.

அவரது முழுமையான உரையை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்…

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், விளையாட்டுத் துறை கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களிடம் கேட்பதற்கு,

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு மாகாணத்தில் உரிய ஊக்குவிப்புக்கள், வழிகாட்டல்கள், உரிய உபகரணங்கள், வசதிகள் இன்மை காரணமாகவும், விளையாட்டு மைதானங்கள் பலவும் சேதமாக்கப்பட்டும், வெவ்வேறு பாவனைகளுக்கு உட்படுத்தப்பட்டும் இருந்த நிலையில், வடக்கின் விளையாட்டுத் துறை என்பது நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய வகையில் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. எனினும், எமது மாணவர்களிடம் இருந்த விளையாட்டுத்துறை சார்ந்த திறமைகள் மற்றும் சுய முயற்சிகள் காரணமாக அவர்கள் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். இதற்காக நாம் அப்போது எமக்கிருந்த ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு பல்வேறு உதவிகளையும், வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தோம்.

இந்த நிலையில், வடக்கில் சகல வசதிகளையும் கொண்டதான சர்வதேச தரமுடைய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதனை அமைப்பதாக தீர்மானிக்கப்பட்டது.  சகலருக்கும் விளையாட்டுத் துறையை எடுத்துச் செல்லும் நோக்கிற்கு அமைவாக இந்த சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமாணப் பணிகள் கடந்த 2011ம் வருடம் ஜூலை மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இதற்கென சுமார் 325 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

2011ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இவ் விளையாட்டு மைதானத்தின் பணிகள் யாவும் 2013ம் வருடம் பூர்த்தி செய்யப்பட்டு, 2013ம் வருடத்திற்கான தேசிய மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் இம் மைதானத்தில் நடாத்தப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் இன்னும் அதனது பணிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது.

கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாதிருப்பமைக்கு தடையாக உள்ள காரணங்கள் குறித்து விளக்க முடியுமா?

இவ் விளையாட்டு மைதானம் எப்போது பூர்த்தி செய்யப்பட்டு, பயன்பாட்டுக்காக விடப்படுமென்பதைக் கூற முடியுமா?

அனைத்து விளையாட்டுகளுக்கும் ஏற்ற வகையில் உள்ளக விளையாட்டுக் கட்டிடத் தொகுதி ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?

வடக்கு மாகாணத்தில் கிரிக்கெற் விளையாட்டில் பெரும்பாலானவர்கள் திறமைகளைக் காட்டிவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்துடன்கூடிய கிரிக்கெற் விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா?

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேலும் மேம்படுத்த தங்களது அமைச்சு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

 

Related posts:

மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
களுத்துறை சிறை தாக்குதலில்  நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...

மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்த...
திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோ...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...