1000 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ள நிதி ஒதுக்கீடு !

Saturday, February 2nd, 2019

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி இந்திய ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய மத்திய அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பியூஸ் கோசலினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தப் பாதீட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி, 16 ஆயிரம் கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 1000 கோடி இந்திய ரூபா அதிகமாகும்.

இதில், இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக, 6 ஆயிரத்து 447 கோடி இந்திய  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், இந்தத் தொகை 5 ஆயிரத்து 545 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில், இது 902 கோடி இந்திய ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு, 325 கோடி இந்திய ரூபாவும், பங்களாதேஸுக்கு 175 கோடி இந்திய ரூபாவும், இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாவும், மொங்கோலியாவுக்கு 5 கோடி இந்திய ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட்ட குறித்த நாடுகளுக்கு கடந்த ஆண்டில்  ஒதுக்கப்பட்ட நிதியின் அளவுக்கு சமமாகவே இந்த ஆண்டும் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கடந்த ஆண்டு 125 கோடி இந்திய ரூபாவாக இருந்த மாலைதீவுக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு 575 கோடி இந்திய ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் சபஹார் துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 150 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில்,  2 ஆயிரத்து 650 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட பூட்டானுக்கான நிதி உதவி இந்த ஆண்டில், 2,615 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 700 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்ட நேபாளத்துக்கு இம்முறை 750 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மியான்மாருக்கான ஒதுக்கீடு, 280 கோடி இந்திய ரூபாவில் இருந்து 400 கோடி இந்திய ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: